‘இவர்கள் கண்ணில் பட்டாலே தீட்டாகிவிடும் என்ற காரணத்தினால், இந்த மக்கள் பகல் நேரத்தில் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. துரதிர்ஷ்டசாலிகளான இந்த மக்கள் இரவு நேரப் பழக்கத்தைக் கட்டாயமாக மேற்கொண்டு இருட்டிய நேரத்தில் தமது குடியிருப்புகளை விட்டு வெளியே வந்து, வேலைகளை முடித்துக்கொண்டு பொழுது புலர்வதற்குள் ஓடிப் பதுங்கிக்கொள்ள வேண்டும்’ என்று திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்த புரத வண்ணார்களைப் பற்றி அம்பேத்கர் எழுதியிருக்கிறார். இப்படியாக வன்கொடுமையின் கொடிய வடிவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் புரத வண்ணார்களைப் பற்றிய விரிவான ஆய்வாக வெளியாகியிருக்கிறது இந்நூல்.
இந்தியச் சமூகத்தில் சாதிப் படிநிலைகளைச் செங்குத்தான கோட்டாக நிற்கவைத்துப் பார்த்தால், மிகவும் கீழே, அடிமட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் இவர்கள். புரத வண்ணார், புருட வண்ணார், பொதர வண்ணார், துரும்பர், இராப்பாடிகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுபவர்கள். தமிழக அரசுத் தேர்வாணையக் குறிப்பேட்டில் ‘புதிரை வண்ணார்’ எனும் அதிகாரபூர்வப் பெயரை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக இம்மக்களைப் பற்றிச் சேகரித்த அரிய தகவல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார் த. தனஞ்செயன். இம்மக்களின் வாழ்க்கை முறை, சமூகம் அவர்களை நடத்திய, நடத்தும் விதம், வரலாற்றில், இலக்கியத்தில் அவர்களது இடம் என்று பல்வேறு விஷயங்களை இந்நூலில் அவர் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
சமூகமும் தொழிற்குடிகளும்
தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்ட, தொழிற்குடிகள் பற்றிய அறிமுகத்துடன் புத்தகம் தொடங்குகிறது. தமிழகத்தில் மன்னர்கள் உள்ளிட்ட முதலாம் நிலைச் சமூகத்தினர், வணிகர்கள், வேளாளர்கள் உள்ளிட்ட இடைநிலைச் சமூகத்தினர், உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைக்கும் நிலையில் உள்ள கடைநிலைச் சமூகத்தினர் என்று தொழிலின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட குடிகளைப் பற்றிய தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றன.
தொடர்ந்து இலக்கியம், கல்வெட்டுகள், சுவடிகள், கதைப்பாடல்கள், தொல்லியல் சான்றுகள் என்று பல்வேறு பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு வண்ணார்களைப் பற்றிய பார்வையை நம் முன் விரிக்கிறது இப்புத்தகம். கடைநிலைச் சமூகத்தினரைப் பற்றிய ஆவணம் என்றபோதிலும், சமூக வாழ்வில் அவர்களுடன் தொடர்பில் இருந்த பிற சாதி மக்களைப் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கிய பதிவாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
உயர்நிலை, இடைநிலைச் சாதியினருக்குக் குடித்தொழில் செய்யும் வண்ணார்களிடையே, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குடித்தொழில் செய்பவர்கள்தான் புரத வண்ணார்கள். அந்த வகையில் முதலில் வண்ணார்களைப் பற்றிய பொதுச் சித்திரத்தை உருவாக்கிய பின்னர், கீழ்நிலையில் இருக்கும் புரத வண்ணார்களைப் பற்றி விரிவாகப் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம்.
இலக்கியப் பதிவுகள்
புரத வண்ணார்களின் தொழில்நேர்த்தி, ஆடை வெளுப்பதற்குப் பயன்படுத்திய நீர்நிலைகள், வாழ்க்கை முறை, துணி வெளுப்பது தவிர, அவர்களது பிற பணிகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுவதை இந்தப் புத்தகம் பதிவுசெய்கிறது. சங்க இலக்கியம் தவிர அற இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல் திரட்டு ஆகியவற்றிலும் வண்ணார்கள் பற்றிய பதிவுகள் இருப்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
தற்கால இலக்கியத்தைப் பொறுத்தவரை, வண்ணார்கள், குறிப்பாக புரத வண்ணார்களின் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுத்தாளர் இமையம் எழுதிய ‘கோவேறு கழுதைகள்’ நாவலிலிருந்து கிடைக்கும் தகவல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுடனான சமூக உறவில் புரத வண்ணார்கள் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் என்று பேசப்படாத பல விஷயங்களை உள்ளடக்கிய அந்த நாவலைப் பற்றி விரிவாக விளக்குகிறார் தனஞ்செயன்.
நாட்டார் வழக்காற்றியல்
செவ்வியல் இலக்கியங்களில் மன்னர்களின் வாழ்வுகுறித்த தகவல்கள் பிரதானமாகவும், விளிம்பு நிலை மக்கள் குறித்த தகவல்கள் குறைவாகவும் இருப்பதால், வண்ணார்கள் குறித்த தகவல்கள் நாட்டார் வழக்காற்றியலில் இயல்பாகவே அதிகம் கிடைப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நாட்டார் வழக்காற்றியலில் முன்னோடியான நா. வானமாமலை தொகுத்து வெளியிட்ட ‘முத்துப்பாட்டன் கதை’, ‘காத்தவராயன் கதைப்பாடல்’, ‘வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்’, ‘கான்சாகிபு சண்டை’ ஆகிய கதைப் பாடல்களிலும், உழவுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகளிலும் அவர்களைக் குறித்த தகவல்கள் இருப்பதை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.
வண்ணார்களைப் பற்றிய விவரணைகளில் அவர்களைப் பற்றி, பிற சாதியினர் கொண்டிருந்த இழிவான பார்வை நாட்டார் வழக்காற்றியலில் பதிவாகியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். குடித்தொழில் மூலம், உயர் வகுப்பினருடன் தொடர்பில் இருக்கும் வண்ணார்கள், ஆபத்தில் சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்ததாகக் குறிப்பிடும் வாய்மொழிக் கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இன்றைய தேதியில் இம்மக்கள், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கே அல்லாடும் நிலையில் இருப்பதையும் ஆசிரியர் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குறித்த ஆவணப் பதிவாக வெளியாகும் இதுபோன்ற புத்தகங்கள், ஓடிக்கொண்டே இருக்கும் உலகத்தை ஒரு கணமாவது நிறுத்தி, அம்மக்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை!
தமிழகத்தில் புரத வண்ணார்கள்,
(தமிழரின் குடித்தொழில் மரபு பற்றிய ஆய்வு),
பக்கங்கள்: 300, விலை: ரூ. 200. அலைகள் வெளியீட்டகம்,
97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 600 024. தொலைபேசி: 044- 24815474
- வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in