“நவீனத் தொழில்நுட்பமும் ஆதிமனித மூர்க்கமும் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும்போது, பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும்”. சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கவலையுடன் குறிப்பிட்ட வாக்கியம் இது. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும் கால வெளிகள் பற்றியும் கருந்துளைகள் பற்றியும் ஆராய்ந்து வருவதுடன், அறிவியலைச் சாதாரண மனிதனும் புரிந்துகொள்ளும் வகையில், எளிமையாக எழுதியும் வருபவர் ஹாக்கிங். உடலின் இயக்கங்கள் ஒரு சக்கர நாற்காலிக்குள் முடக்கப்பட்டுவிட்டாலும், எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி ஆராய்கின்ற ஹாக்கிங் அசாதாரண சாதனையாளர் மட்டுமல்ல அசாதாரண பங்களிப்பாளரும்கூட.
நோய் வீழ்த்தாத ஸ்டீபன் ஹாக்கிங்
21 வயதுவரை அவ்வளவாகப் பிரச்சினைகளின்றி, திக்குவாய்ப் பேச்சுடன் படிப்பதிலும் ஆராய்ச்சி களிலும் ஈடுபட்டவர் ஹாக்கிங். ஒருகட்டத்தில் மருத்துவர்கள் அவரது உடலைப் பரிசோதித்த போது, அவர் மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்துச் சதைகளை வீணாகப் போகச்செய்யும் என்பது கண்டறியப்பட்டது. அடுத்து, அறுவைச் சிகிச்சை ஒன்றில் அவருக்குக் குரலும் போய்விட்டது. கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள குரல்பதிவு கருவி மூலமே பேசக்கூடியவரான ஹாக்கிங் உலகறிந்த அறிவியலாளராக, இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவராக இருந்து வந்திருக்கிறார். அவரைப் பாதித்துள்ள நோயினை Lou Gehrig’s disease அல்லது Amyotrophic Lateral (ALS) என்றெல்லாம் இன்னும் புரிபடாத அறிவியல் மொழியில் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அவரோ, அறிவியல் ஆராய்ச்சிகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிப் பரப்புபவராக விளங்குகிறார்.
1985-ல் அவரது உடல்நிலை மேலும் மோசமானது. உயிரூட்டும் கருவியுடனான இணைப்பைத் துண்டித்திட அவரது மனைவியின் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவர் மனைவி அதற்கு இசைவு தரவில்லை. புத்தாயிரம் ஆண்டில் தான் இருக்கப்போவதில்லை என்றே ஹாக்கிங் நினைத்திருந்தார். அப்போது கூட “ஒவ்வொன்றையும் பொருத்தக்கூடிய சித்திரமொன்று இருக்கிறது என்று நிச்சயம் கொள்வதற்கு ஏதுவாக நான் போதுமான அளவு வாழமுடியாது என்றால்தான் ஏமாற்றமடைவேன்” என்றார். அவர் குறிப்பிடுவது அறிவியலின் ஒவ்வொன்றையும் ஒன்றுபடுத்துவதற்கான கோட்பாடு (unified theory of everything).
மரணம் துரத்தும் விஞ்ஞானி
மத்திய நரம்பு மண்டல பாதிப்பினையும் இனி இரண்டு மூன்று வருடங்களே இருக்கப்போகிறோம் என்பதையும் அறிந்து கொண்டபோது ஹாக்கிங் குறிப்பிட்டார். “ஓய்வுபெறுவது, மாதாந்திரக் கட்டணங்கள் செலுத்துவது போன்றவை பற்றி நான் எண்ணவேண்டியிருக்காது என்பதால், என்னால் பிரபஞ்சத்தை நன்றாக அறிய முற்படமுடியும்.”
இதுபற்றி நாவலாசிரியரும் ஆன்மிகச் சிந்தனையாளருமான பாவ்லோ கொய்லோ அருமையாகக் குறிப்பிட்டார். “இந்த நோய் அவரை முற்றிலும் செயலிழந்தவராக ஆக்குவதற்குப் பதிலாக புதுவிதமான அறிதலைக் கண்டறியுமாறு நிர்ப்பந்தித்தது.” என்கிறார்.
வாரம் பத்து மணிநேரம் பத்து செவிலியர் துணையுடன் இயங்கும் ஹாக்கிங், நாள்தோறும் காலை 7.45க்கு எழுந்து, உடலியக்கப் பயிற்சி முடிந்து 11.30க்கு தனது அறைக்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியரான அவர், தான் நாயகனாகப்போற்றும் கலிலியோவுக்கு 300 ஆண்டுகளுக்குப் பின் கலிலியோவின் பிறந்த தினமான ஜனவரி 8 அன்று பிறந்தவர்.
இசை மற்றும் நகைச்சுவை
தன் குறைபாடுகள் பெரிது என்றாலும் அதுபற்றிப் புலம்புவதையும் ஆத்திரப்படுவதையும் விட்டு “11 பரிமாணங்களில் சிந்திக்க ஆரம்பித்துவிடுவேன்,” என்பார். ஆக்ஸ்போர்டில் படித்தபோது அவரது ஆசிரியர்களையும் மிஞ்சியவராக விளங்கத் தொடங்கினார். அவரது நாட்டம் கணித அறிவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே இருந்தது. அதுவும் அதனைக் கரும்பலகையில் எழுதுவதாக இல்லாமல், திரிகோணமிதி ரீதியிலும் சித்திர ரீதியிலுமாக 11பரிமாணங்களில் அவர் தலைக்குள் தீர்த்துக்கொள்ள வைப்பதாக இருந்தது.
வாக்னரின் இசையிலும் நகைச்சுவையிலும் சற்று ஆறுதல் தேடிக்கொள்ளும் ஹாக்கிங் “பரிபூரணமற்ற உடலிலிருக்கும் பரிபூரண ஆன்மா என்று என்னை நான் ஒருபோதும் உணர்ந்திருக்கவில்லை. என் அறிவுத்திறனில் பெருமிதம் கொண்டிருப்பினும், உடற்குறையும் என்னுடைய அங்கம்தான் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டியவனாக இருக்கிறேன்” என்று சுயமதிப்பீடு செய்து கொள்வார்.
‘‘பெரும்பாலும் எனக்குவரும் கனவுகள் மறந்துவிடும். ஒரு கனவு மட்டும் நினைவில் இருக்கும். ராட்சச பலூனில் நானிருப்பதான கனவு அது, என்பார். நிமோனியா காய்ச்சல் கண்டு அறுவைச்சிகிச்சைக்கு உள்ளாகிப் பேசும் திறனை இழந்திட்ட அவ்வேளையில் கனவில் வந்த ராட்சத பலூன் எனது நம்பிக்கையின் குறியீடு’’ என்று சொல்வார்.
மர்லின் மன்றோவின் ரசிகர்
“மத்திய நரம்பு மண்டலப் பாதிப்பைக் கண்டறியும் முன்புவரை வாழ்க்கையில் எனக்குப் பல தெரிவுகள் இருந்தன. அவற்றில் ஒன்று அரசியல் தலைவராவது; என்னால் பிரட்டீஷ் பிரதமராக ஆகியிருக்க முடியும், எனினும் அப்பதவியை நான் டோனி பிளேயருக்கு விட்டுவிட்டதில் சந்தோசப்படுகிறேன். அவரைவிடவும் நான் நிறையவே பணியில் நிறைவடைகிறேன். மற்றும் என் பணி நீண்டதாக இருக்கும் வாய்ப்புள்ளது”. இப்படி அவரால் வேடிக்கையாகப் பேச முடியும்.
ஒளியின் வேகத்தை விடவும் வேகமாக மனிதன் செல்ல முடிந்தால் அப்பயணம் பின்னோக்கியதாக இருக்கும் என்பது அறிவியலில் ஓர் அனுமானம். இதை விவாதித்தபோது ஒருமுறை அவர் குறிப்பிட்டார். பின்னோக்கிப் பயணிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் நியூட்டனை விடவும் மர்லின் மன்றோவைச் சந்திப்பதிலேயே சந்தோஷப்படுவேன் என்றார். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை நியூட்டன் சுவாரஸ்யமற்ற மனிதர். தன் வரவேற்பறையில் அவர் மாட்டியிருக்கும் நிழற்படம் கூட மர்லின் மன்றோவுடையதுதான். கார்மீது மர்லின் மன்றோ சாய்ந்திருக்க அதன் முன் ஹாக்கிங் நின்று கொண்டிருப்பது போல வடிவமைக்கப்பட்ட புகைப்படம் அது. மன இறுக்கத்தை நீக்கி கலகலப்படையச் செய்யத்தான் என்று சொல்லி சிரிப்பாராம்.
“புதிதாய் ஒன்றினை நான் கற்றுக்கொள்ளும் போதெல்லாம் என் மனத்திலிருந்து பழைய விஷயம் ஒன்றினை அது வெளியேற்றிவிடுகிறது” என்று தன் அறையில் எழுதிவைத்துள்ள ஹாக்கிங், தனது பிழைகளை ஒத்துக்கொள்ளவும் தயங்குவதில்லை. பிரபஞ்சம் சிறிதாகி வந்து கடைசியில் கருப்பைக்குள் மறைந்து போகும் என்று கூறியிருந்தது தவறு. தம்மைச்சுற்றிலும் பிரபஞ்சம் சரிந்து விழ, மக்களுக்கு வயதேறிக் கொண்டிருக்கும் என்று அதனைத் திருத்தி விளக்கினார்.
ஹாக்கிங்கின் மூன்று குழந்தைகளில் ஒருவரான லூஸி ஹாக்கிங் தன் தந்தையுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்பில் அக்கறை கொண்டுள்ளார். நடிப்பு இதழியல் என்றெல்லாம் ஆர்வங்கொண்டிருந்த லூஸி இரு நாவல்கள் எழுதிவிட்டு, இப்போது அறிவியலைப் பரப்புவதில் குழந்தைகளுக்கான கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். தன் மகனின் எட்டாம் பிறந்த தினத்தன்று தான் கருந்துளையில் விழுந்துவிட்டால் என்னாகும்? என்று கேட்ட கேள்வியிலிருந்து இந்த ஆர்வம் வந்ததாக விளக்குகிறார். அவ்வளவு வரம்புகளுக்குட்பட்ட தந்தையுடன் வாழும்போது, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நன்னம்பிக்கை என நம்பமுடியாத திறன்களைக் கற்றுத் தருகிறது. மற்றவர்களுக்காக அக்கறைப்பட வைக்கிறது என்கிறார்.
பெற்றோருக்குப் பெருமை
மாற்றுத் திறனாளிகளாய் பிறந்துவிட்டால் பெற்றோருக்குச் சுமையாகிவிடுவார்கள் என்பதுதான் நாமறிந்திருப்பது. தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்திருப்பதுடன் தன் சந்ததிக்கு நம்பிக்கை ஊட்டியுள்ள ஹாக்கிங், பிரபஞ்சத்தின் புதிர்களையும் விதிகளையும் விளக்கும்போதே, மனிதனின் புதிர்களையும் விதிகளையும் விளக்கி விடுகிறார்.
“சிரியாவில் நடைபெற்று வருவது மிகவும் அருவருப்பானது. இதை ஒட்டுமொத்த உலகமும் அமைதியாகத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது உணர்ச்சிபூர்வமான அறிவு எங்கே போனது?” நமது சமூகத்தின் ஒட்டுமொத்த நீதியுணர்வு எங்கே போனது என்று அவரால் வினவமுடிகிறது.