வங்க எழுத்தாளர் விபூதிபூஷ்ண பந்தியோபாத்தியாயவின் ‘ஆரண்யக்’ நாவலில் தமிழ் மொழிபெயர்ப்பை மீண்டும் எடுத்து வாசித்தேன். த.நா. சேனாபதி இதை ‘வனவாசி’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். என் கல்லூரிக் காலங்களில் இயற்கை மீதான பற்றையும் மனிதர்களை உள்ளது உள்ளபடி பார்க்கும் பார்வையையும் இந்த நாவல் எனக்குக் கற்றுக்கொடுத்தது. அதை இப்போது திரும்பவும் அசைபோட்டுக்கொண்டேன்.
என்னுடைய சொந்த ஊரான தாராபுரம், பழநி பகுதிகளில் கோயில் தேர்கள் உருவாக்கும் தொழில் சார்ந்த தேர் ஸ்தபதிகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனர். இவர்கள் வசிய மந்திரம் போன்ற அபூர்வமான கலைகளில் விற்பன்னர்களாக இருந்ததாக வாய்மொழிக் கதைகள் உண்டு. இதை அடிப்படையாக வைத்து ஒரு குறுநாவல் எழுதுகிறேன். என் தாத்தா ஒரு புகையிலை வியாபாரி. அவரது கதையின் அடிப்படையில் ஒரு நாவல் எழுதும் ஆயத்தப் பணிகளிலும் இருக்கிறேன்.