சென்ற நூற்றாண்டின் கடைசி 15 ஆண்டுகளும் இந்த நூற்றாண்டின் முதல் 15 ஆண்டுகளும் வரலாற்றின் போக்கையே மாற்றிய ஆண்டுகளாக நம் நினைவில் நிற்கின்றன.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் படுகொலைகள், காங்கிரஸின் சரிவும் பிளவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை இலக்காக வைத்து அரசியல் யாத்திரை சென்ற பாஜகவின் எழுச்சி, மண்டல் அறிக்கை அமலாக்கத்தினால் எழுந்த தீயும் அதனைத் தொடர்ந்து வட இந்தியாவில் ஏற்றமடைந்த பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல், இடது முன்னணி அரசியலின் வளர்ச்சியும் தேக்கமும், நூற்றாண்டுகளின் ஒடுக்குமுறையை உடைத்து வெளிவந்த தலித் அரசியல், புதிய பொருளாதாரக் கொள்கையின் பேரணி, அது ஆழப்படுத்திய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், போபாலின் தொடரும் துயரம், நர்மதையின் கண்ணீர், மனிதக் கழிவை மனிதர்களே சுமக்கும் அவலத்துக்கு எதிராக எழுந்த குரல்கள் என இந்தியாவை அசைத்த, அசைத்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஒருபுறம்.
மறுபுறம் உலக அளவில் சோஷலிச நம்பிக்கையை உடைத்த சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து உலகின் ஒரே வல்லரசு என்று மார்தட்டிய அமெரிக்காவின் எழுச்சியும், அமெரிக்காவையும் உலகத்தையும் அதிரச் செய்த இரட்டை கோபுரத் தாக்குதல், சமதர்ம எண்ணம் செத்துவிடவில்லை என்று சிலிர்த்தெழுந்த லத்தீன் அமெரிக்கா, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சீனத்தின் வளர்ச்சி எனப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.
வரலாற்றுப் பாடம்
இதழியல் என்பது அவசரமாக அன்றாடம் எழுதப்படும் வரலாறு. கடந்த 30 ஆண்டு வரலாற்றை வாசகர் கண்முன்னே கொண்டுவரும் அதிசயத்தைத்தான் ‘தி இந்து’ குழுமத்திலிருந்து ‘ஃபிரண்ட்லைன்’ இப்போது நிகழ்த்தியிருக்கிறது. 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தருணத்தில் வெளிவந்த ‘ஃபிரண்ட்லைன்’ இப்போது 30 ஆண்டுகளை நிறைவுசெய்திருப்பதைக் கொண்டாடும் விதமாக 212 பக்கங்களைக் கொண்ட சிறப்பிதழில்தான் இந்த வரலாற்று தரிசனம் கிடைக்கிறது.
பெரும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்தபோது வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இது. வயதானவர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் இந்த இதழைப் படிப்பது நினைவுகளின் ஊர்வலமாக இருக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடமாக இருக்கிறது இந்த இதழ்.
அரசியல், சமூக, பொருளாதார செய்திக் கட்டுரைகள் மட்டுமின்றி, இந்தச் சிறப்பிதழில் பல்சுவைக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. முதன்முதலாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த கிறிஸ்டியன் பெர்னார்ட் என்ற மருத்துவரின் நேர்காணல், அறிவியல் மேதை ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டைக் கொண்டாடும் அற்புதமான கட்டுரை, இருவாட்சி எனப்படும் பறவையைப் பற்றிய அரிய தகவல்களும் படங்களும், சோழர், பல்லவர் காலச் சிற்பங்கள் குறித்த கட்டுரையும், அற்புதமான படங்களுமாக நீண்டு செல்கிறது கட்டுரை வரிசை.
இது தவிர, அமர்த்திய சென், நோம் சோம்ஸ்கி, ஆர்.கே.நாராயண், ஜெயகாந்தன், சத்யஜித் ராய், எம்.எஃப்.ஹூசைன், அன்னை தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், பூபேன் ஹசாரிகா, இளையராஜா ஆகிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், நேர்காணல்களையும் தாங்கி அரிய பொக்கிஷமாக வெளிவந்துள்ளது. பத்திரிகை என்பதையும் தாண்டி வரலாற்று ஆவணமாகக் காட்சியளிக்கிறது இந்தச் சிறப்பிதழ்.
ஃபிரண்ட்லைன் -30,
எ கம்மெமரெட்டிவ் இஷ்யூ,
விலை ரூ. 100,
தி இந்து குழுமம் வெளியீடு