சென்னைவாசிகளுக்கு ஜனவரி மாதம் அறிவுத் தேடலுக்கான மாதம். அந்த மாதத்தில்தான் சென்னைப் புத்தகக் காட்சி தொடங்குகிறது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் நடத்தும் 'லிட் ஃபார் லைஃப்' இலக்கிய விழாவும் சென்னைவாசிகளைக் கவர்ந்துவருகிறது.
இந்த ஆண்டு 'லிட் ஃபார் லைஃப்' விழா ஜனவரி 16-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை மூன்று நாள் கொண்டாட்டமாக நடக்கவிருக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் வாழும் ஆங்கில எழுத்தாளர்கள் எழுத்தில் வெளியான சிறந்த படைப்பிலக்கியத்துக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்காக ஆறு நாவல்கள் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இருந்து ஒரு படைப்பு தேர்வு செய்யப்படும். இந்த நாவல்களில் இருந்து சில காட்சிகளைக் கல்லூரி மாணவர்கள் நாடகமாக நடித்துக் காண்பிக்கவுள்ளனர்.
இந்த விழாவில் 2013-ம் ஆண்டுக் கான புக்கர் பரிசை வென்ற இலியனார் கேட்டன் கலந்துகொள்ள இருக்கிறார். தவிர, இந்திய ஆங்கில எழுத்தாளர்களான சேத்தன் பகத், அமிஷ் திரிபாதி, அமிதவா பாக்சி, திமரி முராரி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
எழுத்தாளர்கள் மட்டுமல்லாது 'ஆலெஃப்' பதிப்பகத்தின் டேவிட் டேவிதார், 'ஹார்ப்பர் காலின்ஸ்' பதிப்பகத்தின் வி.கே.கார்த்திகா மற்றும் 'விமன் அன்லிமிடட்' பதிப்பகத்தின் ரிது மேனன் போன்ற பதிப்பாளர்களும் வாசகர்களைச் சந்திக்க இருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஆங்கிலத்தில் நடைபெறும் இந்த விழாவில் சென்ற ஆண்டு முதல் தமிழுக்கு இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள் வசந்தபாலன், வெற்றி மாறன் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். திரைப்பட விமர்சனம் குறித்து 'தி இந்து' நாளிதழின் திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கனும், 'லிரிக் இன்ஜினியரிங்' குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கியும் உரையாற்ற உள்ளனர். தவிர ஞாநி, பிரளயன், 'லிவிங் ஸ்மைல்' வித்யா போன்ற நாடக ஆளுமைகள் தங்கள் படைப்புகள் மூலமாகச் சந்திக்க இருக்கிறார்கள்.
இவர்களுடன் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பரதக் கலைஞர் அலர்மேல் வள்ளி ஆகி யோரும் விழா மேடையை அலங்கரிக்க உள்ளார்கள்.
வரலாற்று ஆர்வலர்களுக்காக ஆ.இரா.வேங்கடாசலபதி, எம்.டி.முத்துக் குமாரசு வாமி, ராஜ்மோகன் காந்தி போன்றோர் அதிகம் அறியப்படாத வரலாற்றுத் தகவல்களைத் தங்கள் உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்த உள்ளார்கள். படைப்பாளிகள், கலைஞர்கள் தவிர பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், இந்தியாவின் முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் போன்ற பல துறை அறிஞர்களும் உரையாற்ற இருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் கேரளக் கவிஞர் சச்சிதானந்தன், சமூகவியலாளர் ஷிவ் விஸ்வநாதன் ஆகியோர் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்திக்குத் தங்கள் விவாதங்களின் மூலம் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
விழாவின் பகுதியாக மொழி பெயர்ப்புகள், கதை எழுதும் உத்தி, சருமப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்த சிறப்பு வகுப்புகளும் நடைபெற உள்ளன.