இலக்கியம்

எளிய மக்களின் குரல்

செய்திப்பிரிவு

மறைந்த நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளைத் தொகுத்து வழங்குகிறது ‘வாய்ஸ் ஆஃப் தி பாப்புலிஸ்ட் ஜுரிஸ்ப்ருடெண்ட்’(Voice of The Populist Jurisprudent) புத்தகம். மூத்த சிவில் நீதிபதி எல். எஸ். சத்தியமூர்த்தி இந்நூலை எழுதியிருக்கிறார்.

நீதித் துறை எப்போதும் மக்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்பதைத் தான் வழங்கியிருக்கும் எல்லாத் தீர்ப்புகளிலும் கிருஷ்ணய்யர் வலியுறுத்திவந்திருப்பதை இந்தப் புத்தகம் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

எளிய மக்களின் மனித உரிமைகள் நீதித் துறையால் எப்போதும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதையும், சிறைச்சாலைகள் ஏழைகளுக்கானவையாக மட்டும் இருக்கக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்தும் கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளின் தொகுப்பையும் ஆசிரியர் இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் விதமாக, அரசுத் துறையிலும், நீதித் துறையிலும் நிலவும் ஆணாதிக்கப் பயங்கரவாதத்தை எதிர்த்து முத்தம்மா வழக்கில் கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவத்தை இந்நூலில் தெரிந்துகொள்ள முடிகிறது. உயர்மட்ட நீதித் துறை சேவையில் பெண்களின் பங்களிப்பு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் கிருஷ்ணய்யர். கேரள மாநிலத்தின் முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டியின் நியமனத்துக்காக கிருஷ்ணய்யர் எடுத்த முன்முயற்சிகள் பாலின சமத்துவத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கையைக் காட்டுகிறது.

இந்திய நீதித் துறை மட்டுமல்லாமல், சர்வதேச நீதித் துறையிலும் கிருஷ்ணய்யருக்கு இருந்த செல்வாக்கையும் இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது.

- என். கௌரி

‘வாய்ஸ் ஆஃப் தி பாப்புலிஸ்ட் ஜுரிஸ்ப்ருடெண்ட்’ (Voice of The Populist Jurisprudent),
எல். எஸ்.சத்தியமூர்த்தி,
சொசைட்டி ஃபார் ஆர்கனைசேஷன் டிரஸ்ட்,
ஜஸ்டிஸ் பகவதி பவன்,
143, லேக் வீயூ சாலை,
கே. கே. நகர், மதுரை - 625 020.
தொடர்புக்கு: 0452 2583962
விலை: ரூ. 100

SCROLL FOR NEXT