இலக்கியம்

கைப்பிடிக்குள் கடலை அடக்கிய கவி

செளந்தர மகாதேவன்

பிரமிள் என்கிற தருமு சிவராம் தமிழ்ப் படைப்புலகின் ஆச்சரியமான ஆளுமை. சொற்கள் குறுகி அவர் முன்னிறுத்தும் படிமங்கள் ஓங்கி உயரும்போது, வாசகன் அவர் கவிதைவெளிக்குள் கண்கூச நடக்கிறான். உலையில் செந்நிறத்துண்டாய்ப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு, தண்ணீர் பட்டவுடன் உஸ் என்ற சப்தத்தோடு காணமல்போகுமே அதைப் போன்ற காணாமையை அவர் கவிதைகள் பதிவுசெய்கின்றன.

“சொல்லற்ற சுமைதர பேசு” எனும் பிரமிள், படிமங்களைப் படியெடுத்துத் தருகிறார். பிரமிள் ஓர் புதிர்ப் புதையல். யாருமற்றப் பெருவெளியில் பேருமற்று வாழும் அநாமதேயன் அவர் கவிவெளிக்குள் வெறுமையோடு நடப்பான்.சொற்கள் துறந்து சுள்ளென்று வலிக்குமாறு கவிபுனைய அவரால் முடிந்திருக்கிறது. வசதியாய் அமர்ந்து வாசித்துவிட முடியா நெருடல்களோடு அவர் கவிதை வாசக மனதுக்குள் இறங்குகிறது. “மண்டபம்” பிரமிளின் சிறப்பான கவிதைச் சிற்பம். மண்டபத்தோடு மனமும் தலைகீழாகிறது..

“சுவரெங்கும் நிழல்கள்கீறி விரிசல்களாயிற்று ஊடே பிளந்தது அகாதம் சிலைகள் விரூபித்து வெண்கலக் கழுகுகளாயின என்னைச் சுற்றிற்று கூக்குரல்களின் சப்த வியூகம்..” என்று அற்புதமாகத் தொடர்கிறார். வழக்கமான பொருளைத் தாண்டி பரந்த பொருளுக்குள் விரித்துச் செல்கிறது அவரது கவிஈட்டி. நிலவின் மீதும் நிழலின் மீதும் நீண்டு படர்கிறது அவரது கவிதைப் படிமம். காவியம் என்ற கவிதை அருமையானது.

“சிறகிலிருந்து பிரிந்த/இறகு ஒன்று/காற்றின் தீராத பக்கங்களில்/ஒருபறவையின் வாழ்வை/எழுதிச் செல்கிறது” எனும் கவிதை மனவெளியில் பறக்கவைக்கிறது. தேர்ந்த ஓவியராகவும் சிற்பியாகவும் இருந்த காரணத்தால் ஓவியத்தின் நேர்த்தியோடு அவரால் கவிச்சிற்பம் செதுக்க முடிந்திருக்கிறது. வரிகளுக்கிடையே அவர் வகிக்கும் மௌனம் வலிதருவது, வாசகனைச் சில நேரங்களில் திகைக்க வைக்கிறது. படிமங்களின் படியில் வியப்புக்குரிய புள்ளிகளை இட்டு அவரால் கவிதைக் கோலமிட முடிந்திருக்கிறது.

ஆசைகள் அவருக்கு அவசியமானவை. தளைகளை அறுத்தெறிய அவர் கவிதைகள் முயன்றதைவிடத் தளைகளைத் தாண்ட முயன்றன.

காலமும் அவருக்கு விளையாட்டுப் பொருள்தான். “காலத்தைத் திரித்துநேற்று நாளைஇரண்டுக்கும் நடுவேஇன்று முடிந்திருக்கிறது முடிச்சின் சிடுக்கு- நான் அத்துவிதம் கணந்தோறும் நான் செத்தவிதம்.

சொல்வேன் உண்டென்று சொல்லில் இல்லாதது. சொல்வேன் உண்டென்று சொல்லில்,இல்லாதது. சொல்வேன் உண்டென்று சொல், இல்இல்லாதஅது.” எனும் கவிதையில் பிரமிள் காலத்தைப் பிய்த்துப்போட்டுச் சொற்களால் அதைச் சோதித்துப் பார்க்கிறார்.

வருத்தத்தின் நிறுத்ததில் அவர் வரிகள் நின்றுகொண்டிருப்பதில்லை. வெளிச்சமற்ற வெளிகளில் புகுந்து அவர் கவிதைகள் யாதர்த்த வாழ்வியலை ஒளியூட்ட முயல்கின்றன. பிரபஞ்சத்தின் புரியாமையை அவர் கவிதைகள் புரியவைக்க முயல்கின்றன.மேலோட்ட வாசிப்புக்கு அவர் கவிதைகள் இடந்தராதனவாய்க் காட்சியளிக்கின்றன. “வேலைக்கேற்ற ஊதியம்/கேட்கும் கோஷம் உன் கோஷம்/அதுவும் வேண்டாம் ஆளைவிடு/

என்ற கூச்சல் என் கூச்சல்” என்ற வரிகள் இரைச்சலை இரைத்த பேச்சாய் சத்தமாய்க் காதுக்குள் கத்துகிற குரலாய் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. விட்டுவிடுதலையாகும் மனநிலையைக் கொண்ட பிரமிள் யதார்த்தக் கவிதைகளைத் தன் மன அமைதியாகப் படைத்தார். கணநேர மகிழ்வுத் திளைப்பாய் அவர் கவிதைகள் அமைந்ததில்லை, ஏதோ சொல்ல ஆவலாய் அருகில் வந்து ஏதும்சொல்லாமல் செல்கிறவனைப் போல் வாசகனுக்கு அருகில் நின்றுகொண்டு அமைதியால் ஏதோவொன்றை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.

- சௌந்தர மகாதேவன், பேராசிரியர் - தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com

SCROLL FOR NEXT