என்னைப் பாதித்த புத்தகங்களின் பட்டியல் பெரியது. குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் புத்தகம், ‘ஹாஜி முராத்’! டால்ஸ்டாய் எழுதிய கடைசிப் படைப்பு இது. ரஷ்யாவின் ‘அவார்’ இனத்தைச் சேர்ந்த ஹாஜி முராத் என்ற புரட்சி வீரனைப் பற்றிய நாவல் இது. கோகஸஸ் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஹாஜி முராத் பற்றி கேள்விப்பட்ட டால்ஸ்டாய் அவரைப் பற்றியத் தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் இதை எழுதியிருக்கிறார்.
ஹாஜி முராத் வாழ்க்கை பற்றிய டால்ஸ்டாயின் விவரணைகள் அத்தனை தத்ரூபமாக இருந்ததாக, ஹாஜி முராதை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டிருக் கிறார்கள். ஒருவரைச் சந்திக்காமலேயே அவரைத் தத்ரூபமாகச் சித்தரிக்க எத்தனை படைப்பாற்றல் வேண்டும்? முதல் இரண்டு பக்கங்களில் சிவப்பும் வெள்ளையுமாகப் படர்ந்திருக்கும் மலர்களை விவரித்திருப்பார். படிக்கப் படிக்க, கண்முன்னே காட்சி விரியும். என்னால் மறக்கவே முடியாத புத்தகம் அது.
நான் புத்தகங்களின்பால் ஈர்க்கப்படுவதற்கு என் பாட்டிதான் காரணம். உலகமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் மூலையில் அமர்ந்து ஏதாவது புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். அந்தக் காட்சி இன்னும் என் கண்ணில் நிற்கிறது. என் பால்ய காலத்தில் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற இதழ்களில் மூழ்கிக்கிடந்தேன். நான் கதைசொல்லியாக வளர்ந்த கதை இதுதான்!
ஒருகாலத்தில் என்னைச் சந்திப்பவர்களிடம், ‘புத்தகங்களைப் படியுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். இப்போது புத்தகமே படிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். ஏனென்றால், புத்தகம் படித்தால் அறிவு வளரும், சக மனிதனைப் பற்றிய அக்கறை வளரும், உலகத்தைப் பற்றிய பார்வை விரிவடையும்! பாவம் இந்த அவஸ்தை அவர்களுக்கு எதற்கு?