தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவரான ரவி சுப்பிரமணியன் இசை, நவீன ஓவியங்களிலும் ஈடுபாடுள்ளவர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகமாகப் பொருளாதார ஆதரவு இல்லாத ஆவணப்படத் துறையில் தமிழ் எழுத்தாளர்கள் குறித்து இவர் எடுத்த ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் திருலோக சீதாராம் பற்றிய ஆவணப்படமொன்றை இப்போது எடுத்து வருகிறார்.
படைப்பிலக்கியவாதிகளில் சிலர் ஓவியர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாடகர் என்ற அடையாளம் அபூர்வமானது. கர்நாடக இசையைப் பயில வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
சரியான அர்த்ததில் நான் பாடகர் எல்லாம் இல்லை. அதற்குப் பெரும் ஞானம் வேண்டும். எட்டாம் வகுப்பு படித்தபோது பின்னணிப் பாடகர் சி.எஸ்.ஜெயராமனைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு வருவார். அவர் பாடுவதை அருகிருந்து கேட்டது என்னைப் பாதித்தது. பத்தாம் வகுப்பு படித்தபோது பள்ளி நிகழ்ச்சிகளில் விரும்பிப் பாடினேன். கல்லூரியில் நாட்டியம் மீதும் விருப்பம் வந்தது. தர்மாம்பாள் என்ற ஆசிரியையிடம் முறையாக பரதம் பயில ஆரம்பித்தேன். ‘அலைபாயுதே கண்ணா’ பாடலுக்கு நடனம் ஆடும்போதெல்லாம், அந்தப் பாடலைப் பயில வேண்டும் என்ற வேட்கை உருவானது. அதனால் வாய்ப்பாட்டையும் பயின்றேன். இவற்றின் தொடர்ச்சியாகக் கல்லூரி நாடகங்களில் விருப்பத்தோடு நடிக்க ஆரம்பித்தேன். “இனிமேலும் கூத்தாடியா திரிஞ்சா, அப்படியே போயிடணும். வீட்டுக்கு வரக் கூடாது” என்று அப்பா கண்டித்தார். மனமுடைந்து விஷம் குடித்துவிட்டேன். நான் உயிர் பிழைத்த பிறகு அப்பா மவுனமாகிவிட்டார். அவர் என்னுடன் பேசாமல்போனது மனதை மிகவும் பாதித்துவிட்டது. பிறகு எல்லாவற்றிலுமிருந்து விலகி வாசிக்க ஆரம்பித்தேன். ஜானகிராமன், பாலகுமாரன் வழியே பயணித்து நவீனப் படைப்பின் வழி, சாரமான கவிதைகளைக் கண்டுகொண்டேன். பின் நானும் ஒரு கவிஞனானேன். சென்னைக்கு வந்த பிறகு இசையை மறுபடியும் பயில ஆரம்பித்தேன்.
நவீன தமிழ்க் கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடும் முயற்சி எதற்காக?
நவீன கவிதையைப் பரவலாகக் கொண்டுசெல்லத்தான். கவிதைப் புத்தகங்களுக்கு நூலக ஆர்டர்கூட இல்லாத சூழலில்தான் நாம் இருக்கிறோம். கவிதை வாசிப்பவர்கள் இங்கே குறைவு. அதையே பாட்டாக்கிவிட்டால் நிறைய பேரை உடனே அடைந்துவிடுகிறது. அது ஒரு புதிய அனுபவம். ஓசையைத் துறந்த நவீன கவிதைகளுக்கு மெட்டமைப்பது ஒரு சவால்தான். நான் அதைப் பெரும்பாலும் நான் விருத்தமாகத்தான் செய்து பார்க்கிறேன். இது ஒரு தொடக்கம்தான். ஞானக்கூத்தனின் கவிதையை மெட்டமைக்க அவரிடம் அனுமதி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். “இழுக்குடைய பாட்டே இசைக்கு நன்று சாலும் அதனால் என் கவிதையைப் பாட்டாக்கிவிடாதீர்கள்” என்றார். ஆனால் நான் விடவில்லை. அவரது இரண்டு கவிதைகளை மெட்டமைத்து அவருக்குப் பாடிக் காட்டியபோது “அடடா, இப்போ கவிதை உங்களுடையதாகிவிட்டதே! இன்னொரு தடவை பாடுங்கள்” என்றார். அதுகுறித்து சிலாகித்துக் கடிதமும் எழுதினார்.
எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்களை எடுப்பதில் நீங்கள் எதிர்கொண்டுவரும் சவால்கள் என்ன?
பல சவால்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பணம். ஒரு தேசத்தின், மொழியின், கலாச்சார, பண்பாட்டு வாழ்வைத் தங்கள் படைப்புகள் வழியே ஆவணப்படுத்துபவர்கள் எழுத்தாளர்கள். அவர்களை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
நான் முதலில் எடுத்த ஆவணப்படம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியைப் பற்றியது. அதற்கு சாகித்ய அகாடமி நிதி உதவி அளித்தது. அடுத்து எழுத்தாளர் மா.அரங்கநாதனை ஆவணப்படுத்த முயன்றபோது தயாரிப்பாளர்கள் யாருமில்லை. அதிர்ஷ்டவசமாக அந்தப் படத்துக்கு என் நண்பர்கள் பலரும் பணம் பெறாது உழைப்பை நல்கினார்கள். இதன் பிறகு ஜெயகாந்தனைப் பற்றி ஆவணப் படம் எடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டுக்கொண்டார். ஜெயகாந்தனின் பேச்சுகளால் பால்யத்தில் ஈர்க்கப்பட்டவர் இளையராஜா. அதனால் அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு இளையராஜா முன்வந்தார்.
அதன் பின், ‘சைவத்தமிழ் வளர்த்த சேக்கிழார் அடிப்பொடி’ என்ற தலைப்பில் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். டி.என். ராமச்சந்திரன் பற்றிய படத்தை இயக்கினேன். இந்தப் படத்துக்கு அவரது மகன்தான் தயாரிப்பாளர். தற்போது இயக்கிவரும் ‘திருலோக சீத்தாராம்’ பற்றிய படத்தைத் தயாரிப்பது அவருடைய மகன். இப்படி நேரடியாகத் தொடர்புகொண்டவர்கள்தான் முன்வருகிறார்கள். வெளித் தயாரிப்பாளர்கள் சுத்தமாக இல்லை. இதற்கு முக்கியக் காரணம் இந்த ஆவணப் படங்களுக்கு வருவாய் கிடையாது. வரலாறைப் படித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும்?
உங்களைக் கவர்ந்த கோணத்தில் படைப் பாளுமைகளை ஆவணப்படுத்துவது ஏன்?
இந்திரா பார்த்தசாரதியை ஒரு கல்வியாளராக, கட்டுரையாளராக, சிறுகதையாசிரியராக நாவலாசிரியராகப் படைப்புலகம் அறியும். ஆனால் அவர் தமிழின் முதல் நவீன நாடகப் பிரதியான ‘மழை’யை எழுதியவர். அதனால் ‘இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்’ என்ற கோணத்தை எடுத்துக் கொண்டேன். மா.அரங்கநாதனும் பன்முக ஆளுமைதான். ஆனால் கவிதைகளே எழுதாத அவர். ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற தலைப்பில் கவிதை இயல் சார்ந்து புதுக்கவிதைக்கு இலக்கணம் போல ஆழமான கட்டுரைகளை எழுதியவர். அதனால் ‘மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' என்ற கோணத்தில் இயக்கினேன். ஜெயகாந்தனை எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இரண்டு பரிமாணங்களில் சித்தரித்தேன்.
எழுத்தாளர்களைச் சமாளிக்க முடிந்திருக்கிறதா?
சமாளித்துதான் ஆகவேண்டும் வேறு வழி இல்லை. எழுத்தாளர்களே பேச்சாளர்களாகவும் இருப்பதால், எக்ஸெண்ட்ரிக்காகவும், எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். நேர்காணலை ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கும்போது பாதியில் சட்டையில் பொருத்திய மைக்கோடு எழுந்து ஓடுவார்கள். பிறகு அவர்களே இயக்குநர்களாக ஆகிவிடுவர்கள். எழுத்தாளர்களின் நண்பர்களும் இயக்க வந்துவிடுவர்கள். இப்படி ஒரு ஆவணப் படத்துக்குப் பல இயக்குநர்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
தற்போதையப் பணிகள் பற்றி...
தற்போது பாரதி பாடல்களைப் பாடிப் பாடிப் பரப்பிய கவிஞர் திரிலோக சீத்தாராம் பற்றிய ஆவணப்படத்தை இயக்கிவருகிறேன். பாரதியாரை இவர் பார்த்ததே கிடையாது. ஆனால் பாரதியாரின் சுவீகார புத்திரன் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸேவின் ‘சித்தார்த்தா’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். வெள்ளி விழா கண்ட ‘சிவாஜி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர். கட்டுரையாளர். இசையின் வழியாக இலக்கியத்தின் நுட்பங்களை வெளிப்படுத்திய கலைஞன் என்ற கோணத்தில் அவரைப் படமாக்கி வருகிறேன்.
வரும் நாட்களில் யாரைப் படமாக்க விரும்புகிறீர்கள்?
ஜெயமோகனை.
தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in