இந்தியா எண்ணற்ற வளங்களின் நாடு. அதன் வளங்களில் தலையாயது கலை வளம். இந்தியாவில் பிறப்பெடுத்த கலைகள், பிற தேசங்களின் கலைகளிலிருந்து முக்கியமான கூறுகளை உள்வாங்கிக்கொண்ட கலைகள், இந்தியாவின் பன்மை மத, மொழி, இனங்களின் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் கலைகள் போன்றவை எல்லாம் சேர்ந்து இந்தியாவைக் குறித்த நம் பெருமிதத்துக்கு அர்த்தம் சேர்க்கின்றன.
எனினும், மேலைநாடுகள் தங்கள் கலைச் செல்வத்தை ஆவணப்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சியின் அளவுக்கு இந்தியா தனது கலைச்செல்வத்தை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் முயற்சி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. கிரேக்க, எகிப்திய சிற்பக் கலைகள், மறுமலர்ச்சி (Renaissance) காலத்திய சிற்ப, ஓவியக் கலைகள் போன்றவற்றுக்கு அங்கே ஏராளமான காஃபி மேசைப் புத்தகங்கள் இருக்கின்றன. இந்தியாவில் அபரிமிதமான கலைவளம் இருந்தும் அந்த அளவுக்கு புத்தகங்கள், காஃபி மேசைப் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு குறை. அந்தக் குறையைப் போக்க வந்திருக்கிறது பினாய் கே. பெஹல்லின் ‘தி ஆர்ட் ஆஃப் இந்தியா’ காஃபி மேசைப் புத்தகம்.
‘தி இந்து’ குழுமத்தின் ‘ஃப்ரண்ட்லைன்’ வெளியீடாக, இந்தப் புத்தகம் 500 பக்கங்கள், இரண்டு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் சிற்ப, சுவரோவிய வளத்தை வெளிப்படுத்தும் 450-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இந்த நூலின் ஆசிரியர் பினாய் கே பெஹலால் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கலைமரபின் அழகையும் வரலாற்றையும் அழகுற 31 அத்தியாயங்களில் பினாய் கே. பெஹல் விவரிக்கும் பாங்கில் தேர்ந்த புகைப்படக் கலைஞராகவும் தேர்ந்த எழுத்தாளராகவும் அவர் ஒருங்கே வெளிப்படுகிறார்.
‘ஃப்ரண்ட்லைன்’ இதழில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியான விரிவான கட்டுரைகள், ‘ரீடிஸ்கவரிங் இந்தியன் பெயிண்டிங்ஸ், இந்தியன் ஆர்ட்’ எனும் தலைப்பில் 25 பாகங்களாக (ஃப்ரண்ட்லைனில்) வெளியான தொடர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகம் விரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், டெல்லி பல்கலைக்கழகத்திலும் டெல்லியிலுள்ள ஓவியக் கல்லூரியிலும் பினாய் கே. பெஹல் ஆற்றிய உரைகளும் இந்தப் புத்தகத்தில் விரிவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முக்கியமான சிற்ப, ஓவிய மரபுகள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. முதல் தொகுதியின் அட்டையில் தஞ்சை சரஸ்வதி மஹால் அருங்காட்சியத்தில் உள்ள பார்வதி சிற்பத்தின் எல்லையற்ற வனப்பு உங்களை ஆட்கொண்டு வரவேற்கிறது. இரண்டாவது தொகுப்பின் அட்டையில் போதிசத்துவர் சிலை நம் மனதில் நிச்சலனத்தை விதைக்கிறது.
இடுப்பில் ஒய்யாரமாகக் கைவைத்துக்கொண்டு ஓர் அலட்சியப் பார்வை வீசும் சிந்து சமவெளிப் பெண்ணின் குறுஞ்சிற்பம், சாரநாத்தின் சிங்கங்கள், ஆந்திரத்தின் பாணிகிரியில் புத்தரின் பிறப்பைச் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பம், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த யட்சியின் சிற்பங்கள், குஷானர்கள் காலத்தைச் சேர்ந்த விருட்சதேவி, உத்தர பிரதேச தேவ்கரில் இருக்கும் அனந்தசயன விஷ்ணு, அஜந்தா குகைகளில் உள்ள புத்தருடைய மகாபரிநிர்வாணத்தின் பிரம்மாண்டம், மாமல்லபுரத்திலுள்ள கங்கையின் பிறப்பைச் சித்தரிக்கும் சிற்பம், வராக அவதாரச் சிற்பம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிதைந்துகொண்டிருக்கும் பேரழகுச் சிற்பங்கள், அதே கைலாசநாதர் கோயிலில் பலரும் தவறவிடும் சுவரோவியங்கள், மத்திய பிரதேசத்தின் அரசு அருங்காட்சியத்தில் உள்ள இந்திராணியின் எழில் கொஞ்சும் சிற்பம், எல்லோராவின் புத்த, இந்து, சமண மதங்களின் குகைச் சிற்பங்கள், கர்நாடகத்தின் சரவணபெலாகொலாவில் உள்ள பிரம்மாண்டமான பாகுபலியின் சிலை, தமிழ்நாட்டின் சோழர்காலக் கோயில்கள், இமயமலைக்கு அப்பால் உள்ள புத்த மடங்களின் சிற்ப, ஓவிய மரபு, காஷ்மீரத்தின் பவுத்தக் கலைமரபு என்று இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும் பயணம் மிக மிக நீண்டது, அலாதியானது.
இரண்டு தொகுப்புகளையும் புரட்டிப் பார்க்கும் ஒவ்வொருவரும் இறுதியில் ஏக்கப் பெருமூச்சு விடுவது தவிர்க்க இயலாதது. ‘இந்தியா எனும் பிரம்மாண்டப் பெருங்கடலின் ஒரு துளியைக்கூட நம்மால் அருந்திவிட முடியாதா?’ எனும் ஏக்கத்தின் பெருமூச்சு அது. அதேபோல், பினாய் கே. பெஹல் மீது வாஞ்சை கலந்த பொறாமையும் நம் அனைவருக்கும் ஏற்படக்கூடும். ‘கலைதான் மனிதகுலத்தின் மாபெரும் பொக்கிஷம். தங்கத்தையும் விலைமதிப்புமிக்க ஆபரணங்களையும்விட உயர்வானது கலை’ என்று கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சித்திரசூத்திரம்’ என்ற நூல் சொல்கிறது. அந்தக் கலையின் மகத்தான உதாரணங்களில் கணிசமானவற்றை நம் கண்களுக்கும் எண்ணத்துக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கும் பினாய் கே. பெஹல் என்றென்றும் நம் நன்றிக்கு உரியவர். இந்தப் புத்தகத்தின் பொருண்மைக்கு ஏற்ப புத்தகம் மிகமிக அழகாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கலைமரபின் மீது தீராத தாகம் கொண்டவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
தி ஆர்ட் ஆஃப் இந்தியா (2 தொகுதிகள்)
எழுத்தும் புகைப்படங்களும்: பினாய் கே பெஹல்
பக்கங்கள்: 500
விலை: ரூ. 5,000
வெளியீடு: ‘ஃப்ரண்ட்லைன்’ (‘தி இந்து’ குழுமம்)
குறிப்பு: இந்தப் புத்தகத்தை ‘தி இந்து’வின் அனைத்துக் கிளைகளிலும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் வாங்கிக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் 044-3303 1249 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம்