இலக்கியம்

திரௌபதி: துயரப்படும் பெண்களின் ரூபம்!

அ.வெண்ணிலா

காபாரதம், இந்தியா முழுக்க சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் இதிகாசம். எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் காவியம். நம் கதைகள் பலவும் மகாபாரதத்திலிருந்தே கிளைக்கின்றன. நம் சண்டைகளுக்கான மூலம் அங்கிருக்கிறது. நம் சமாதானங்களுக்கான காரணங்கள் பாரதத்தில் இருந்து புதுப்புது சொற்களில் கிடைக்கின்றன. தர்மத்தின் வழி என்று ஏதேனும் நாம் சொல்ல விரும்பினால், பாரதத்தின் வழியையே பெரும்பாலும் சொல்கிறோம். மண்ணுக்கு ஒரு சொல்முறை. ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு கிளைக் கதைகள். மகாபாரதத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இலக்கியப் பிரதிகளாகவும், வாய்மொழிக் காவியங்களாகவும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கீதோபதேசம், கர்ண வதம், பாஞ்சாலி சபதம்… இப்படியாக. மலையும் கடல்களும் சூழ்ந்த இந்த நிலப்பரப்பில், காலம் தின்று பெரும் கதைமலையென வேரூன்றி நிற்கும் மகாபாரதத்துக்குள்தான் நாம் கட்டுண்டு கிடக்கிறோம்.

ஞானபீட விருது பெற்ற ஒரிய மொழி எழுத்தாளர் பிரதிபா ராயின் நாவல் ‘திரௌபதியின் கதை’. உயிருடன் சொர்க்கம் செல்ல முயலும் ஐந்து கணவன்களுடன் உடன் செல்ல முடியாமல், இமயமலையின் தங்க மணலில் தடுக்கி விழுந்த திரௌபதி, எப்போதும்போல் நிராதரவாக நிற்கிறாள். இமயமலையின் பாறைகள் எங்கும், தன்னுடைய ஆன்மாவின் நேசத்துக்குரிய கிருஷ்ணனுக்கு, ‘முற்றும்’ என்று போட்டு, தன் ரத்தத்தால் ஒரு கடிதம் எழுதத் தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நாவல்.

திரௌபதி மீண்டும் இந்த மண்ணில் பிறக்கும் பேராவலுடன், கண்ணனிடம் மறுபிறவி வேண்டிக் கோரிக்கை விடுத்து, ‘ஆரம்பம்’ போட்டுக் கடிதத்தை முடிப்பதில் நிறைகிறது நாவல். இந்த உலகையே காதலிக்கும் பெண்ணாக, தான் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற திரௌபதியின் விண்ணப்பம் கண்ணீர் மல்கச் செய்கிறது. அன்பானவர்களால் கைவிடப்பட்ட ஒருத்தி, உலகையே நேசிக்க ஒரு பிறப்பு வேண்டுவதை என்னென்று சொல்வது?

இந்திய மரபு, இதிகாசப் பரப்பு, காவிய நடை என்று விரிந்து செல்லும் இந்நாவல், திரௌபதியைப் பழைய மரபின் வழியான, நவீனப் பெண்ணாக சித்தரித்துள்ளது.

துயரப்படும் பெண்களின் ரூபமெல்லாம் திரௌபதியே. பாஞ்சால தேசத்தின் மகள் பாஞ்சாலி. யக்ஞஸேனனின் மகள் யக்ஞஸேனி. பலிபீடத்திலி ருந்து தோன்றியவள். தாயின் கருவிலிருந்து தோன்றா தவள். அவளை சுயம்வரத்தில் வென்றவன் அர்ஜுனன். ஆனால், தாய் குந்தியின் புரிதலற்ற உத்தரவால் ஐந்து பாண்டவர்களுக்கும் மனைவியானவள். ஐந்து கணவன்களுடன் வாழ்ந்தாலும் கற்புக்கரசியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாக்கப்பட்டவள்.

உலகப் பெண்கள் வரலாற்றிலேயே கறை படிந்த வரலாறாகத் தன் வரலாறு இருக்கும் என்பதை உணர்ந்தே திரௌபதி தன்னை ஐவருக்கும் கொடுக்கிறாள். அர்ஜுனன் மேல் தீராக் காதல் இருந்தாலும், பரிபூரணமாக கிருஷ்ணனுக்கே தன்னை அர்ப்பணித்தவள். கர்ணன்மேலும் பகைமையுடன்கூடிய ஒரு காதல்! இவற்றையெல்லாம் பிரதிபா ராய் இந்திய ஆன்மீக தத்துவ தரிசனத்தின் பின்னணியில் எழுதியுள்ளார். வியாச பாரதத்தை அடிப்படையாகக் கொண்டாலும், திரௌபதியின்மீது, நவீன சிந்தனையின் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

மகாபாரதம் பாண்டவர்களின் வெற்றியோ, கௌரவர்களின் வீழ்ச்சியோ அல்ல, திரௌபதியின் பலி கொடுக்கப்பட்ட வாழ்க்கை. தந்தையின் இழிவைப் போக்க யாகக் குண்டத்திலிருந்து உருவான திரௌபதி, வாழ்நாள் முழுக்கப் பிறர் நலன் காக்கத் தன்னலம் அழித்துக்கொள்ளும் போராட்டம்.

ஐந்து கணவர்களிடமிருந்து அவள் நம்பிக்கைஇன்மையையும் நிராகரிப்பையுமே பெறுகிறாள். திரௌபதியைப் போல் உலகப் படைப்புகளில் அவமானம் சுமந்த, நிராகரிக்கப்பட்ட, ஐவரை மணந்தவளாக இழிவுபடுத்தப்பட்ட படைப்பு வேறொன்று இல்லை. ஆனால், அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட, திரௌபதியின் வாழ்வே ஆகுதி. அவள் யாகக் குண்டத்தின் நெருப்பிலிருந்து தோன்றியவள். நெருப்பால் ஆனவள். நெருப்பில் கறை இல்லை. அசுத்தங்களை நெருப்பு அழிக்கிறது. திரௌபதி என்னும் நெருப்பும் அப்படியே.

நாவலின் ஒவ்வொரு வரியும், திரௌபதியின் துயர்மிகு வாழ்வை, பெண்மன உலகின் போராட்டத்தை வெளிக்கொண்டுவருகிறது. இந்திய மரபின் தர்ம வாழ்வை அதன் ஆழ்புரிதலுடன் பிரதிபா எழுதிச் செல்கிறார். திரௌபதியின் நித்யப் போராட்டங்களை அவருடைய வலிமைமிகு எழுத்துகள் சொல்லிச் செல்லும்போது, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் துயருறும் பெண்கள் எல்லோரும் திரௌபதியின் பிரதிநிதிகளாக உருவெடுக்கிறார்கள். இந்து தர்மம் என்ன என்பதை திரௌபதியின் பெருகும் கண்ணீரின் வழி எடுத்துரைக்கும் இந்நாவல், இதிகாசத்தின் எல்லையை விரிக்கிறது. நம் மரபு பெண்ணின் சுயத்தைப் பலியிட்டு, தர்மத்தை நிலைநாட்டுவதே.

- அ.வெண்ணிலா, கவிஞர்,

vandhainila@gmail.com

SCROLL FOR NEXT