இலக்கியம்

பார்த்திபன் கனவு - 15

செய்திப்பிரிவு

சி

த்திர மண்டபத்தின் இரண்டு மூன்று கட்டுக்களையும் தாண்டிச் சென்று கடைசியாக, பூட்டிய கதவையுடைய ஒரு வாசற்படியண்டை மகாராஜா நின்றார். முன்னொரு தடவை பொன்னன் இதே இடத்தில் நின்று இந்த வாசற்படிக்கு உட்புறத்தில் என்ன இருக்குமோ என்று யோசித்திருக்கிறான். இந்தக் கதவைத் திறக்கக் கூடாதென்பது மகாராஜாவின் கட்டளை என்று காவலாளர்கள் அப்போது தெரிவித்ததுண்டு. மகாராஜா இப்போது அந்தக் கதவண்டை வந்து நின்று, தம் கையிலிருந்த சாவியினால் பூட்டைத் திறக்கத் தொடங்கியதும் பொன்னனுடைய ஆவல் அளவுகடந்ததாயிற்று. ‘இதனுள்ளே ஏதோ பெரிய அதிசயம் இருக்கிறது. அதை நாம் இப்போது பார்க்கப் போகிறோம்’ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

கதவு திறந்ததும், ‘‘பொன்னா! நீ முதலில் உள்ளே போ! தீவர்த்தியை நன்றாய்த் தூக்கிப் பிடி! சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டுபோகாதே! தீவர்த்தி புகையினால் சித்திரங்கள் கெட்டுப்போகும்’’ என்றார் மகாராஜா.

பொன்னன் உள்ளே போய் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். அங்கிருந்த சுவர்களிலும் சித்திரங்கள்தான் தீட்டியிருந்தன.

ஆனால் அவை என்ன சித்திரங்கள், எதைக் குறிப்பிடுகின்றன என் பது அவனுக்குத் தெரியவில்லை.

பொன்னனுக்குப் பின்னால், விக்கிரமனுடைய கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பார்த்திப மகாராஜா அந்த இருள் சூழ்ந்த மண்டபத்துக்குள்ளே புகுந்தார்.

‘‘குழந்தாய்! பூட்டி வைத்திருக்கும் இந்த மண்டபத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பல தடவை என்னைக் கேட்டிருக்கிறாயே! உனக்கு இன்னும் கொஞ்சம் வயதான பிறகு இந்தச் சித்திரங்களைக் காட்ட வேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்டவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. விக்கிரமா! இந்த மண்டபத்தை நான் வேணுமென்றே இருளடைந்ததாய் வைத்திருந்தேன். இதற்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை.

யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததும் இல்லை! பொன்னா தீவர்த்தியைத் தூக்கிப்பிடி!’’ என்றார் மகாராஜா.

அவருடைய பேச்சில் கவனமாயிருந்த பொன்னன் சட்டென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான்.

‘‘அதோ, அந்த முதல் சித்திரத்தைப் பார்! குழந்தாய் அதில் என்ன தெரிகிறது?’’ என்று மகாராஜா கேட்டார்.

‘‘யுத்தத்துக்கு படை கிளம்புகிறது. ஆஹா எவ்வளவு பெரிய சைன்யம்! எவ்வளவு யானைகள், எவ்வளவு தேர்கள்; குதிரைகள்; எவ்வளவு காலாட் படைகள்!’’ என்று விக்கிரமன் வியப்புடன் கூறினான். பிறகு, சட்டென்று திரும்பித் தந்தையின் முகத்தைப் பார்த்து, ‘‘அப்பா...’’ என்று தயங் கினான்.

‘‘என்ன விக்கிரமா! கேள்?’’ என்றார் மகாராஜா.

- அடுத்த வெள்ளியன்று

மீண்டும் கனவு விரியும்...

SCROLL FOR NEXT