ஒரே நேரத்தில் சென்னை, கோவை, கரூர், சேலம் என்று தமிழகத்தின் நான்கு நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. புத்தகக் காட்சி என்றாலே சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடப்பதுதான் என்ற நிலை மாறி மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள் ஒரு கொண்டாட்டமாக மாறியிருப்பது வரவேற்புக்குரியது. ஒவ்வொரு நகரத்திலும் புத்தகக் காட்சிகள் நடக்கும்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளும் நடந்தேறுகின்றன. எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பாராட்டுகள் அவர்கள் தொடர்ந்து இயங்கும் ஆற்றலையும் உற்சாகத்தையும் வழங்கும்.
சென்னையில் பபாசி நடத்தும் புத்தகக் கண்காட்சியின் வெற்றியை அடுத்து ஈரோடு, மதுரை ஆகிய நகரங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் கண்காட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதிக அளவிலான வாகர்களின் வருகை, அதிக நூல்கள் விற்பனை என இரண்டு வகைகளிலும் இந்த வெற்றி நிகழ்ந்திருக்கிறது. இந்த வெற்றி ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டதல்ல. மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், அரசு சார்பிலான உதவிகளைப் பெற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களை அணுகி மாணவர்களைப் பங்கேற்கச் செய்தும் படிப்படியாக அடையப்பட்ட வெற்றி. கண்காட்சிகளை ஒருங்கிணைப்பவர்களின் அயராத உழைப்பும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.
ஒரே நேரத்தில் பல ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கிறபோது பதிப்பாளர்கள் அனைத்து ஊர்களிலுமே கலந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தமிழ்ப் பதிப்புச் சூழலைப் பொறுத்தவரை, நிறுவனங்களாக இயங்கும் பதிப்பகங்கள் மிகச் சிலவே. பெரும்பாலான பதிப்பகங்கள் பதிப்பு ஆர்வத்தில் சிறு முதலீட்டில் நடத்தப்படுபவைதான். எனவே சிறு பதிப்பகங்களை ஆதரிக்கும் வகையில் ஒவ்வொரு பதிப்பகத்திடமும் தேவையான நூல்களைப் பெற்றுக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களே காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வேண்டும். ஒரே நேரத்தில் புத்தகக் காட்சிகளை நடத்தாமல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் அடுத்தடுத்து நடக்கும் வகையில் புத்தகக் காட்சிகளை ஒருங்கிணைத்தால் வாசகர்களுக்கு இன்னும் கூடுதல் பயன் கிடைக்கும்.
மாவட்டந்தோறும் நடந்துகொண்டிருக்கும் இந்தப் புத்தகக் காட்சிகள் இளைய தலைமுறையினருக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை உருவாக்கும். அதைப் போலவே தொடர்ந்து வாசிக்க விரும்புபவர்களுக்கு ஆண்டு முழுவதும் புத்தகங்கள் கிடைக்க வேண்டும். பெரும்பாலான நகரங்களில் அனைத்து பதிப்பகங்களின் நூல்களும் கிடைக்கும் வகையில் புத்தகக் கடைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் உள்ளதுபோல ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திலும் 10% தள்ளுபடி விலையில் நிரந்தரப் புத்தகக் காட்சிகளை நடத்த வேண்டும்.
இளைய தலைமுறையின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் வாசிப்பே அச்சாணி. ஆகவே, புத்தகங்களின் மீதான ஆர்வம் மென்மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதில் அரசு, உள்ளாட்சி நிர்வாகங்கள் போன்றவற்றின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை மறக்க வேண்டாம்!