எம்ஜிஆர் 100
இது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்பதால், புத்தகக் காட்சியில் தனி அரங்கை (எண்: 37) ஒதுக்கியிருக்கிறார்கள். எம்ஜிஆரைப் பற்றி வெளியிடப்பட்ட அனைத்து நூல்களும் இந்த அரங்கில் கிடைக்கும். இங்கே, எம்ஜிஆர் குறித்த புகைப்படக் கண்காட்சியும் உண்டு.
ராமானுஜர் 1000
‘மதத்தில் புரட்சி செய்த மனிதநேயரான’ ராமானுஜரின் 1000-வது ஆண்டை முன்னிட்டு, 27-ம் தேதி (வியாழக்கிழமை) கருத்தரங்கு நடைபெறுகிறது. அதில், ‘ஆழ்வார்கள் ஆய்வு மைய’ நிறுவனர் ஜெகத்ரட்சகன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசுகிறார்கள். ‘தி இந்து’வின் ‘தமிழ் திசை’ பதிப்பக வெளியீடான ‘ராமானுஜர்: ஆயிரம் காணும் அற்புதர்’ என்ற நூலும் புத்தகக் காட்சியில் கிடைக்கிறது.
சினிமா 100
தமிழ் சினிமாவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக 24-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு ‘தமிழ் சினிமா 100’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுகிறது. இயக்குநர் எடிட்டர் பீ.லெனின் தலைமையில் ஞான ராஜசேகரன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சீனு ராமசாமி, ரோகிணி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மார்க்ஸ் 200
சோஷலிஸப் பாதைக்கு வழிகாட்டிய மகத்தான ஆளுமையான மார்க்ஸின் 200-வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் 26-ம்தேதி(புதன் கிழமை) சிறப்புக் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், மார்க்ஸியத்தின் எதிர்காலம் குறித்து பிரபாத் பட்நாயக்கும், ‘மார்க்ஸும் எங்கெல்ஸும்’ எனும் தலைப்பில் சி. மகேந்திரனும், மார்க்ஸ், ‘எங்கெல்ஸ் எழுத்து’ எனும் பொருளில் பாரதி கிருஷ்ணகுமாரும், ‘மார்க்ஸும் ஜென்னியும்’ எனும் தலைப்பில் பர்வீன் சுல்தானாவும் உரையாற்றுகிறார்கள். என். குணசேகரன் தலைமை வகிக்கிறார்.
எந்த நூலகத்தில் என்ன சிறப்பு?
சென்னை நூலகங்கள் பற்றிய 25-ம் தேதி (செவ்வாய்) மாலை 3 மணியளவில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உ.வே.சா. நூலகம், பிரம்மஞான சபை நூலகம், தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சில், கலாக்ஷேத்ரா நூலகம், தக்ஷிணசித்ரா அருங்காட்சிய நூலகம் போன்றவற்றிலிருந்து அதிகாரிகளும் நூலகர்களும் கலந்துகொள்கிறார்கள். எந்தெந்த நூலகத்தில் என்னென்ன சிறப்பு, என்னென்ன புத்தகங்கள் அங்கே கிடைக்கும் என்பவை உள்ளிட்ட தகவல்கள் பரிமாறப்படுகின்றன. வாசகர்கள் மட்டுமின்றி ஆய்வாளர்களுக்கும் உதவுகிற அமர்வு இது!
‘தி இந்து’, ‘தமிழ் திசை’ அரங்குகள்!
புத்தகக் காட்சியின் 30-வது அரங்கை அலங்கரிக்கிறது ‘தி இந்து’ மற்றும் ‘தமிழ் திசை’ பதிப்பகம். ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழ் நாளிதழ்கள் மற்றும் யங் வேர்ல்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், ஃபிரண்ட் லைன் ஆகிய இதழ்களின் சந்தா சேர்ப்பும் நடப்பதால் கணிசமான வாசகர்கள் குவிகிறார்கள். ‘மகா அமிர்தம்’, ‘எம்ஜிஆர் 100’, ‘உன்னால் முடியும்’, ‘ஜிஎஸ்டி: ஒரு வணிகனின் பார்வையில்’, ‘பரிசோதனை ரகசியங்கள்’, ‘என்னைச் செதுக்கிய மாணவர்கள்’, ‘கடல்’, ‘ஸ்ரீராமனுஜர் 1000’ உள்ளிட்ட ‘தி இந்து’வின் 60-க்கும் மேற்பட்ட வெளீயீடுகளை வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். 10 முதல் 50% வரை விலையில் தள்ளுபடி உண்டு. நாளிதழ் சந்தா குறித்த சந்தேகங்களையும் இங்கே கேட்டறிந்து கொள்ளலாம்.
புலிக்குப் பிறந்தவள்!
சமீபத்தில் மறைந்த சிறுகதை எழுத்தாளர் க.சீ. சிவக்குமாரின் மகள் சுவேதா சிவசெல்வி எழுதிய, குழந்தைகளின் மனவுலகைச் சித்தரிக்கும் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் ஃபியர்’ எனும் ஆங்கில நாவலை ஏராளமான ஓவியங்களுடன் போதி வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. க.சீ. சிவக்குமார் உயிரோடிருந்து இந்த மகிழ்ச்சியை அனுபவித்திருக்க வேண்டும்!
வாசகர்களின் கவனத்துக்கு!
சென்னை புத்தகத் திருவிழா ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் என்றதும், நேராக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்குப் போய்விட வேண்டாம். புத்தகக் காட்சி நடைபெறுவது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம்.
புத்தகக் காட்சி இணையதளம்
www.chennaibookfair.in என்ற இணைய தளத்தில் புத்தகத் திருவிழா நிகழ்வுகள், அரங்கில் இடம்பெற்றுள்ள பதிப்பகங்கள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கின்றன. கண்காட்சிக்கு வரும் முன்பாக முடிந்தால் அதையும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்!
ஓவியம்… புகைப்படம்…
ஓவியர் விஸ்வம் வழிகாட்டலில் இளம் ஓவியர்கள் வரைந்த பத்து ஓவியங்கள் புத்தகக் கண்காட்சியின் பிரதான வாயிலின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘இன்றைய கல்வி’ என்ற மையப் பொருளில் வரைந்த இந்த ஓவியங்கள் கண்காட்சி அரங்கத்திலேயே வரையப்பட்டவை. கூடவே, சென்னையைச் சிறப்பிக்கும் விதமாகவும் சென்னையின் சுற்றுச்சூழல் குறித்தும் இரண்டு புகைப்படக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.