மருத்துவர் ராமதாஸ், பாமக நிறுவனர்
கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும், ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக்கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த பணிகளில் என்னோடு தோள்நின்றவர். தமிழ் தேசியத் தலைவர்கள் அனைவரின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றிருந்தார். அறம் மீது மட்டுமே பற்று கொண்டிருந்த அவர், பொருள் மீது பற்றற்று இருந்தார். அவர் மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் இறப்பின்றி வாழ்வார்.
சிவக்குமார், நடிகர், ஓவியர்
சந்தானம் என்னைவிட ஆறு வயது இளையவர். ஆனாலும், என்னை சிவா வா போ என்று தான் பேசுவார். நான் சென்னை ஓவியக்கல்லூரியில் படித்ததுபோல, சந்தானம் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்தவர். ஓவியன் என்ற முறையில், அவரது அழகிய உருவத்தை என் நெஞ்சில் வரைந்து வைத்திருக்கிறேன். அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். உலகையே தன் தூரியையில் அடக்கி வைத்திருந்த அந்த அற்புதமான கலைஞன், பதுங்கு குழி போன்ற சிறு கூண்டில் வசித்திருக்கிறார். “இந்தியாவில் ஓவியர்கள் கொண்டாடப்படுவதில்லை, கூலிக்கு வண்டியிழுக்கும் தொழிலாளியைப் போலத்தான் பார்க்கப்படுகிறார்கள்” என்று ஓவியர் கோபுலு சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன.
தொல்.திருமாவளவன், விசிக தலைவர்
கண்ணைக் கவரும், கலைநயம் சிந்தும், கருத்தாழம் மிக்க கோட்டோவியங்களைப் படைப்பதில் வல்லவர் வீர சந்தானம். ஓவியக் கலைஞராக மட்டுமின்றி, அதிதீவிரமான தமிழ்த் தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கியவர். தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நின்ற அவர், விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்த ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்க’த்தின் அனைத்துப் போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர். அவருடைய இழப்பு தமிழ்த் தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பு.
இயக்குநர் வ.கவுதமன்
சிலர் பேசுவார்கள், சிலர் போராடுவார்கள், ஒரு சில பேர் படைப்புச் செய்வார்கள். ஆனால், தன்னுடைய சொல், செயல், படைப்பு இந்த மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து தன் இனத்திற்காகப் போராடிய கலைஞர் அவர். எல்லா கட்சிகளிடமும், எல்லா அமைப்புகளிடமும் நேரடியாகச் சென்று உரிமையுடன் விமர்சிக்கக் கூடியவர். “வீர சந்தனத்தின் வளைந்த கோடுகளும், எங்கள் தமிழினத்தை நிமிர்த்தி எழுச்செய்யும்” என்றார் காசி ஆனந்தன். சத்தியமான வார்த்தைகள் அவை!
இயக்குநர் மீரா கதிரவன்
‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் தோல்பாவை பொம்மைகளையும், தோல் பாவை கூத்தையும் நெஞ்சில் கட்டிக்கொண்டு வாழ்கிற ஒரு நலிந்த கலைஞனுடைய கதாபாத்திரத்திற்கு வீர சந்தானம்தான் பொருத்தமானவர் என்று அவரை அணுகினேன். ‘சந்தியாராகம்’ படத்தில் நடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிக்கவே இல்லை. என் படத்தில் நடிக்கச் சம்மதித்ததுடன், அதில் வருகிற ஒரு கிராமத்திற்கு முத்துக்குமாரின் நினைவாக ‘முத்துகுமாரபுரம்’ என்று பெயர் வைக்கலாம் என்றும் சொன்னார்