இலக்கியம்

வீடில்லா புத்தகங்கள் 10 - திப்புவின் கனவுகள்!

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

திப்புவின் கனவுகள்!

கொல்கத்தா செல்லும்போது எல்லாம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள காலேஜ் ரோடில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குப் போகாமல் திரும்பியதே இல்லை. ‘போய் பஜார்’ என அழைக்கப்படும் அந்தச் சாலையோர புத்தகக் கடைகளில் அரிய புத்தகங்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

காலேஜ் ரோடில் உள்ள காபி ஹவுஸ்கள் பிரபலமானவை. இலக்கிய வாதிகள், சினிமா இயக்குநர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் எனப் பலதுறையைச் சார்ந்தவர்கள் கூடிப் பேசி, விவாதிக்கும் மையங்களாக இந்த காபி ஹவுஸ்கள் விளங்கின. தற்போது அவை நிறைய மாற்றம் கொண்டுள்ளன என்றபோதும், இன்னும் இந்தியன் காபி ஹவுஸில் இலக்கியம் பேசுகிறவர்கள் கூடத்தான் செய்கிறார்கள்.

கொல்கத்தாவில்தான் இந்திய தேசிய நூலகம் (National Library of India) உள்ளது. இந்திய அரசால் பராமரிக்கப்படும் மிகப் பெரிய நூலகம் இது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 22 லட்சம் புத்தகங்ககள் உள்ளன.

இந்திய மொழிகளில் வெளியான அனைத்து நூல்களும் இங்கு ஒருங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 1963-ல் இந்த நூலகத்தில் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. அதில் அரிய சுவடிகளும் தமிழ்ப் புத்தகங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது 57 ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடி களும் அங்கு உள்ளன. கொல்கத்தா போகிறவர்கள் அவசியம் ஒருமுறை இந்த நூலகத்துக்குப் போய் வர வேண்டும்.

பெயருக்கு ஏற்றாற்போலவே கொல் கத்தாவின் காலேஜ் ரோடில் நிறைய கல்வி நிலையங்கள் உள்ளன. ஆகவே இங்குள்ள பழைய புத்தகக் கடைகளில் சகல துறையைச் சார்ந்த புத்தகங்களும் கிடைக்கின்றன.

இங்கு உள்ள புத்தகக் கடையில் ‘திப்பு சுல்தானின் கனவுகள்’ என்ற பழைய புத்தகம் ஒன்றை வாங்கினேன். கையில் எடுத்தபோது ஏதோ ஒரு நாவல் என்றுதான் அதை நினைத்தேன். ஆனால், புரட்டியபோது திப்பு சுல்தான் தனது கனவுகளைத் தானே பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது படிக்க ஆர்வமானது.

‘மைசூரின் புலி’ என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் கிழக்கிந்திய கம்பெனி யின் அதிகாரத்தை எதிர்த்து உறுதி யுடன் போராடியவர். திப்பு தன் இளம் வயதிலேயே தனது தந்தை ஹைத ருடன் பல்வேறு போர்க் களங்களைக் கண்டவர். கி.பி. 1767-ம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் வந்த பிரிட்டிஷ் படையை எதிர்த்து சண்டையிட்டு வெற்றிபெற்றபோது, திப்பு சுல்தானின் வயது 17.

1782-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் தன்னுடைய 32-வது வயதில் சுல்தானாக அரியனை ஏறினார் திப்பு. மைசூர் போரில் திப்பு சுல்தானை வீழ்த்த முடியாது என உணர்ந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் லஞ்சத்தால் தங்கள் வசமாக்கி, திப்புவைக் காட்டிக் கொடுக்கும்படி செய்து வீழ்த்தினார்கள்.

திப்பு சுல்தானை வீழ்த்திய ராணுவத் தினர் அவரது அரண்மனைக்குள் புகுந்து ‘ஓரியண்டல் லைப்ரரி’ என்கிற பெயருடைய அவரது நூலகத்தில் இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புத்தகங்கள், பதிவேடுகள், போர்க் கருவிகள் சார்ந்த குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றார்கள்.

அந்தக் கொள்ளையில்தான் திப்பு வின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கனவுக் கையேடு கைப்பற்றப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் இந்தக் கனவுப் புத்தகம் 1785 முதல் 1798 வரையான 13 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட முக்கியமான கனவுகளை மட்டும் பதிவு செய்துள்ளது.

இதில் 37 கனவுகளும் அவற்றுக்கான திப்புவின் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. பெரும் பான்மையான கனவுகள் கண் விழித்து எழுந்தவுடனே பதிவு செய்யப்பட்டதாக திப்புக் குறிப்பிட்டுள்ளார்.

பெர்ஷிய மொழியில் எழுதப்பட்ட இக்கனவுகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். திப்பு சுல்தான் பெர்ஷிய மொழியில் விற்பன்னர் என அவரது ராஜசபைக் குறிப்புகள் கூறுகின்றன.

‘தனது கனவுகளை ஏன் பதிவு செய்ய வேண்டும் என திப்பு சுல்தான் ஆசைப்பட்டார்’ என்பது இன்றைக்கும் புதிராக இருக்கிறது. ஒவ்வொரு கனவும் நடக்கப் போகும் நிகழ்வு ஒன்றின் முன்னறிவிப்பு என அவர் நினைத்திருக்கக் கூடும். கனவைப் புரிந்து கொள்வதன் வழியே எதிர்காலத்தைக் கணித்துவிட முடியும் என்பது போலவே, அவரது கனவுப் பதிவுகள் காணப்படுகின்றன.

ஒரு கனவில் பெண் உடை அணிந்த ஒருவரை பற்றிக் குறிப்பிடும் திப்பு, அது எதிரியின் அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்கிறார். இன்னொரு கனவில் மூன்று வெள்ளித் தட்டுகளில் பேரீச்சம் பழங்கள் இருப் பதை, தனது எதிரிகளான நிஜாம், மராத்தா, கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றின் உருவகமாக விளக்கம் தருகிறார்.

யுத்தக் களத்தில் எதிரிகளைக் கொன்று குவிப்பதைப் பற்றி அவருக்குத் தொடர்ந்து கனவுகள் வந்துள்ளன. அதில் ஒரு கனவில், அவர் எதிரியை ஒரே குத்தில் கொன்று சாய்க்கிறார். பிறகு, வெற்றி விருந்துக்கு செல்லும்போது அங்கே வெண்தாடியில் இருந்த ஒரு முதியவர் திப்புவை வரவேற்று இனிப்புகளை உண்ணத் தருகிறார். அது போல சுவையான இனிப்பை தான் அதுவரையில் உண்டதே இல்லை எனச் சந்தோஷப்படும் திப்பு, உடைவாளை இடுப்பில் சொருகிக் கொள்வதுடன் கனவு கலைந்துவிடுகிறது.

இன்னொரு கனவில், அவருக்கு ஓர் ஆள் அப்போதுதான் கறந்த பாலை அப்படியே நுரைக்க நுரைக்க இரண்டு சிறிய குடுவைகளில் குடிக்கத் தருகிறான். பாலை குடிக்க முயற்சிக்கும்போது கனவு கலைந்து விழிப்பு வந்துவிடுகிறது.

பிறகொரு கனவில், திப்பு யானை களைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குள் போகிறார். அங்கே பெரும் யானைக் கூட்டத்தைச் சுற்றி வளைக்கிறார். அதில் தேர்வு செய்யப்பட்ட சில ஆண் யானைகளைப் பிடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்புகிறார். அப் போது அரண்மனை வாசலில் இரண்டு வெள்ளை யானைகள் நிற்கின்றன. அதன் அருகில் இரண்டு குதிரைகளும் நிற்கின்றன.

சீனாவில் இருந்து தூதுவர் வந்துள்ளார் என திப்புவிடம் தெரிவிக்கப்படுகிறது. அவர் களை வரவேற்று, வருகையின் நோக்கம் பற்றி விசாரிக்கிறார். நட்புறவின் நிமித்தமான வருகை என்றதோடு சீன அரசனின் அன்புப் பரிசாக வெள்ளை யானையைக் கொண்டு வந்துள்ளதாகத் தூதுவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அலெக்சாண்டருக்குப் பிறகு, தான் ஒருவனுக்கே சீன அரசன் இப்படியான அரிய பரிசை அனுப்பியிருக்கிறார் என மகிழ்ந்த திப்பு, அதை ஏற்றுக் கொண்டதுடன் தான் அன்று காட்டில் பிடித்து வந்த யானைகளைத் தூதுவர் களுக்குக் காட்டுகிறார். அதற்குள் விழிப்பு வந்து கனவு கலைந்துவிடுகிறது.

இப்படி திப்புவின் கனவுகளுக்குள் அவரது ஆசைகள், யுத்த முஸ்தீபுகள், எதிரிகள் குறித்த யோசனைகள், சூபிகளின் நல்லாசி தனக்கு இருக்கிறது என்கிற நம்பிக்கை போன்றவை பதிவாகியுள்ளன.

இந்தப் புத்தகத்தை மையப் படுத்தி ‘திப்புவின் கனவுகள்’ என்ற ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றி யிருக்கிறார் பிரபல நாடக ஆசிரியர் கிரீஷ் கர்னாட்.

எல்லா மனிதர்களும் கனவு காண்கிறார்கள். ஆனால், ஒன்றுபோலக் காண்பதில்லை. கனவுகள் என்பது நாளைய கேள்விகளுக்கான இன்றைய பதில் என்பார் எட்கர் கேசி. திப்புவின் நம்பிக்கையும் இது போலவே இருந்திருக்கிறது.

- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

SCROLL FOR NEXT