மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் பேரா. சோ.மோகனா
விலை: ரூ. 40, அறிவியல் வெளியீடு, சென்னை - 600086-: 044-28113630
பெண்களின் பங்களிப்பு வரலாற்றில் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குப் பல துறைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், புற்றுநோய் தாக்குதலிலிருந்து உத்வேகத்துடன் மீண்டெழுந்த பேராசிரியர் மோகனா, இதுவரை பரவலான கவனிப்பைப் பெறாமல் போன 10 பெண் விஞ்ஞானிகளைப் பற்றி இந்நூலின் வழியே அறியத்தருகிறார். பழங்காலப் பெண் கணிதவியலாளர்கள் தொடங்கி, மேரி ஆன்னிங், சாவித்திரிபாய் புலே, கமலா சோகோனி உள்ளிட்ட ஆளுமைகளின் செயலூக்கம், வாசிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.
உஷாதீபன் குறுநாவல்கள்
விலை: ரூ. 250, நிவேதிதா பதிப்பகம், சென்னை-600092 - : 8939387276
சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் தேர்ந்த எழுத்தாளர் உஷாதீபனின் 4 குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பிது. 9 சிறுகதை நூல்கள், 3 குறுநாவல்கள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பென தொடர்ச்சியாக எழுதி வருபவர் இவர். இந்த குறுநாவல்களில் குடும்ப உறவுகளில் எழும் சிக்கல்களையும்,அதனால் உண்டாகும் மனக் கசப்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உறவு சொல்ல ஒருவன், என்னவளே, அடி என்னவளே…, ஆனந்தக் கண்ணீர், எல்லாம் உனக்காக என திரைப்பட பாணியில் வைக்கப்பட்ட தலைப்புகள் சற்றே நெருடல்.
அறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா? சி.கே. ராஜு தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி,
விலை: ரூ. 70 அடையாளம், புத்தாநத்தம்-621310 : 04332-273444
‘சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலம் மானிட நலன்களுக்காக அறிவியல் மதப் பிடிமானங்களிலிருந்து விடுபட வேண்டும்’ என்று உறுதிபட கூறும் அறிவியல் அறிஞர் சி.கே. ராஜுவின் கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் மேலைநாடுகளில் தோன்றியதா?, சிலுவைப் போரும் அறிவியலின் ‘கிரேக்க’ தோற்றம் பற்றிய கதையும், அறிவியல் அறிவின் தொடக்க காலக் கதை உள்ளிட்ட 9 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அறிவியலின் தோற்றம் குறித்து இதுவரை சொல்லப்பட்ட பல கட்டுக்கதைகளைப் பொய்யென உரைத்துள்ள கட்டுரைகள்.
ஆயுதம் செய்வோம் என்.மாதவன்
விலை: ரூ. 35, புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-600018 - 044-24332424
தமிழகக் கல்வித் துறையில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் வரவேற்கத் தக்கவையே. இன்னும் கல்விக்கும் சமூகத்துக்குமான விலகலை சரிசெய்யும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டிய காலகட்டமிது. ஆசிரியர், மாணவர் உறவு, பள்ளியின் அக-புறச் சூழல், ஆசிரியர்களுக்கு மேலிருந்து வரும் அதிகார உத்தரவுகள் தரும் அழுத்தம், சக ஆசிரியர்களுடனான பகிர்வு என இன்னும் பொது வெளியில் பேசப்படாத பல விஷயங்களைச் சுருக்கமாய், நம் மனதில் தைக்கும்படி எழுதியுள்ளார் தலைமையாசிரியரும் கல்விக் களப்பணியாளருமான என்.மாதவன்.
கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்
விலை: ரூ. 110, சாகித்ய அகாடமி, சென்னை-600018 - 044-24354815
கவிஞர், கட்டுரையாளர், உரையாசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் அறிஞர் எனப் பன்முகம் கொண்ட கவி கா.மு. ஷெரீப்பின் படைப்புத் திறன்களை அறியத் தரும் நல்முயற்சி. காவியம், உரை, இலக்கணம், சமயம் உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் 19 கட்டுரைகளைப் பலரும் எழுதியுள்ளனர். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’, ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ போன்ற புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை எழுதிய கவி கா.மு.ஷெரீப், இந்தி எதிர்ப்பு மற்றும் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைக்குச் சென்றவர் என்பது போன்ற பல தகவல்களை இந்நூலின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.