தமிழில் ஆண்டுதோறும் வெளியாகும் நூல்களின் விவரங்கள் அடங்கிய நூல்தொகைகளை சென்னை கன்னிமாரா நூலகம் வெளியிட்டுவந்தது. கடந்த இருபதாண்டுகளாக இந்த தொகுப்புப் பணி தடைப்பட்டு நிற்கிறது. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியான நூல்களின் விவரங்களை அறிய முடியாத நிலை இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நூல்தொகை வெளியிடப்பட்டால் ஆய்வாளர்கள், மாணவர்கள், வாசகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படக்கூடிய வகையில் அமையும். ஏதோ ஒரு சிறு நகரத்திலிருந்தும், கிராமத்திலிருந்தும்கூட, தமிழில் வெளியான புத்தகங்கள் பற்றிய முழுமையான விவரங்களை ஒரு வாசகரால் பெற முடியும். எனவே ஆண்டு நூல்தொகைகளைத் தொடர்ந்து வெளியிட தமிழ்நாடு பொது நூலகத் துறை முயற்சியெடுக்க வேண்டும்.
தமிழில் வெளியாகும் புத்தகங்களின் பிரதிகளை சென்னை கன்னிமாரா நூலகத்துக்கும் கொல்கத்தா தேசிய நூலகத்துக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்பது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை. அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான சான்றுகளையும் இணைத்துதான் நூலக ஆணைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை சரிவரப் பின்பற்றப்படவில்லை என்றே தெரிகிறது. கன்னிமாரா நூலகத்துக்குப் புத்தகப் பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா என்று விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்தால் போதுமானது. அதற்கான சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளனவா என்று சரிபார்க்கப்படுவதில்லை. கன்னிமாரா நூலகத்திலும் சரி, கொல்கத்தா தேசிய நூலகத்திலும் சரி, அவ்வாறு அனுப்பப்படுகிற நூல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதும் இல்லை. நூலக ஆணை வழங்கும்போது மட்டுமல்ல, தமிழக அரசு சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும்போதுகூட பரிசுக்குரிய நூல் கன்னிமாரா மற்றும் தேசிய நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பதில்லை. எனவே, தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களுக்கும்கூட நூலகங்களில் ஒரு பிரதிகூட இல்லாமல் மறைந்தொழியும் நிலை வரலாம்.
ஆண்டுதோறும் தமிழ்மொழியில் ஒவ்வொரு துறை சார்ந்தும் எத்தனை புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, அவற்றின் தலைப்பு, ஆசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் அனைத்தையும் நூலகத் துறையால் எளிதாகத் திரட்ட முடியும். இந்த விவரங்கள் ஆண்டுதோறும் தவறாமல் தொகுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மற்றும் ஆய்வு நூலகங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட வேண்டும். தமிழின் புத்தக விற்பனையைப் பொறுத்தவரையில் சராசரியாக ஆயிரம் பிரதிகளே அச்சடிக்கப்பட்டுவரும் நிலையில், கால ஓட்டத்தில் பல புத்தகங்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, தமிழில் வெளிவரும் புத்தகங்களின் விவரங்கள் அடங்கிய நூலடைவுகளைத் தமிழக நூலகத் துறை ஒவ்வொரு ஆண்டும் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதோடு, இணையத்திலும் பதிவேற்ற வேண்டும்.