சென்னை ராயப்பேட்டை ஒஎம்சிஏ மைதானத்தில் தமிழ்நூல் வெளியீடு மற்றும்தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும்சென்னை புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி அன்று தொடங்கியது.
250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகத்திருவிழாவில், சமூகம், வரலாறு, கல்வி, கலை-இலக்கியம், அறிவியல்,அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சமையல் தொடர்பான பல்லாயிரக்கணக்கானதலைப்புகளில் பல லட்சம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு வாங்கும்அனைத்து நூல்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி தரப்படுகிறது. எந்தஆண்டும் இல்லாத வகையில் வாசகர்களுக்கு இந்த ஆண்டு ‘அனுமதி இலவசம்’என்பது மகிழ்ச்சியான செய்தி.
தினமும் மாலை நேரங்களில் சிறப்புநிகழ்வுகளாக தமிழ் சினிமா-100, மார்க்ஸ்-200, ராமானுஜர் - 1000 ஆகியநிகழ்வுகளோடு கவிதை வாசிப்பும், சென்னை நூலகங்கள் பற்றியகலந்துரையாடலும் இதுவரை நடைபெற்றுள்ளன. தினமும் மாலை 4 மணிமுதல் 7மணிவரை எழுத்தாளர்கள் பங்கேற்கும் ‘எழுத்தாளர் முற்றம்’ எனும்நிகழ்ச்சி சிற்றரங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இன்று(ஜூலை-29, சனிக்கிழமை) மாலை ‘பெண்களும் அதிகாரமும்’ எனும்தலைப்பிலும், நாளை (ஞாயிறு) சிந்துவும் மக்களும், சட்டமும் மக்களும்,தாய்மொழிச் சவால்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளன.நாளை மறுநாள் (திங்கள்) நிறைவு விழாவில், தேசிய சுகாதாரக் குழுமஇயக்குநர் தரேஷ் அகமது, மலையாள எழுத்தாளர் அசோகன் செருவில்,எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொளுத்தும் வெயில் எல்லாவற்றையும் கடந்து,மக்கள் ஆர்வமாக புத்தகத் திருவிழாவிற்கு வருகிறார்கள் என்பதேவாசிப்பின் மீதான ஆர்வம் என்றைக்கும் குறையாது என்பதை உணர்த்துவதாகஉள்ளது.
புத்தகத் திருவிழா துளிகள் :
தரமான வரலாற்றுத் தடங்கள்…
35ஆண்டுகளாக வரலாற்று நூல்களைத் தரமான தயாரிப்பில் ஆங்கிலத்தில்வெளியிட்டு வரும் ‘தி ஆசியன் பப்ளிகேஷ்னஸ்’ நிறுவனத்தின் புத்தகஅரங்கும் இந்தப் புத்தகத் திருவிழாவில் கவனிக்கத்தக்க அரங்காகஅமைந்தது.
டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்தநிறுவனம், கடந்த 2 ஆண்டுகளாக சென்னையிலும் கிளை அலுவலகத்தைத்தொடங்கியுள்ளது. இந்திய வரலாற்றை, அதன் பன்மைத்துவத்தைப் பறைசாற்றும்800-க்கும் மேற்பட்ட நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அறிவியல்கற்றல் உபகரணங்கள்…
பஞ்சாபைச் சேர்ந்த ‘சந்து சயின்டிஃபிக் எஜிகேஷன்’எனும் நிறுவனத்தின் அரங்கில் 500-க்கும் மேற்பட்ட எளிய அறிவியல்கற்றல் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. சிறிய கத்தரி தொடங்கி, விதவிதமானவடிவில், வேறுவேறு வண்ணங்களில் லென்ஸ், பைனாக்குலர் போன்ற அறிவியல்கற்றல் செயல்பாடுகளுக்குப் பயன்படும் பொருட்கள் குவிந்து உள்ளன.
5ரூபாய் மதிப்புள்ள காந்தம் முதல், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ளபைனாக்குலரும் விற்கப்படுகின்றன. 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தநிறுவனம் முதல்முறையாக சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளது.
‘தி இந்து’ சிறப்பு விற்பனை அரங்கு எண்:
30-இல் இடம்பெற்றுள்ள ‘திஇந்து’ அரங்கில் பழைய வெளியீடுகளுக்கு 50 சதவீத சிறப்புத்தள்ளுபடியும், புதிய நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், வாசகர்கள் ஆர்வமாக வந்து சந்தா செலுத்திச்செல்வதையும் ‘தி இந்து’ அரங்கில் காண முடிந்தது.
இளம் தம்பதியினரின்புத்தகக் காதல்
தர்மபுரியிலிருந்து புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்திருந்தனர்
இளம் தம்பதிகள் சங்கர் – லெட்சுமி. கைகள் நிறையபுத்தகங்களோடு நின்றிருந்தவர்களிடம் பேசியபோது, ”கிராமங்களில் கல்விப்பணி செய்துவரும் தொண்டு நிறுவனத்தில் நான் வேலை செய்கிறேன். அதனால்கல்வி தொடர்பான நூல்களையும் குழந்தைகளுக்கான நூல்களையும் வாங்கும்ஆவலில் வந்திருக்கிறேன்” என்று சங்கர் சொல்ல, “என் வாழ்நாளில் நான்இவ்வளவு புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பது இப்போதுதான்..!” என்றுவிழிகளை அகல விரித்துச் சொன்னார் லெட்சுமி.
சாரலிலிருந்துதிருவிழாவிற்கு…
6-வது ஆண்டாக புத்தகத் திருவிழாவில் நூல்கள்வாங்குவதற்கென்றே குற்றாலத்திலிருந்து வந்திருந்தார் முகிலன்.ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான முகிலன் 4 நாட்கள் சென்னையில் அறை எடுத்துதங்கி, தினமும் வந்து நூல்களை வாங்கிச் செல்கிறார். “ஆண்டு முழுவதும்பத்திரிகைகளில் வரும் நூல்களைக் குறித்து வைத்துக்கொள்வேன். அவற்றைபுத்தகத் திருவிழாவிற்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்வேன்” என்றவர்,மூன்று நாட்களில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கிவிட்டாராம். “இந்த முறை புதிய புத்தகங்களின் வரவு கொஞ்சம் குறைவுதான். சில பதிப்பகங்களின் புத்தக விலை அதிகமாக இருக்கு” என்றார்.
விற்பனை எப்படி..?
பொதுவாகவே இந்த முறை வாசகர் வருகை கொஞ்சம்குறைவுதான். வாசகர் வருகை குறைவு விற்பனையையும் பாதித்தது. போதியஅளவிற்கு விளம்பரங்கள் செய்யாததும் ஒரு குறை. புத்தகத் திருவிழாவிற்குவந்த பிறகுதான், அன்றைய மாலை நிகழ்ச்சி என்னவென்பதை வாசகர்கள் அறிந்துகொண்டார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் மக்கள் அதிகஅளவில் வரவில்லை. மேலும், பெற்றோர்களுக்கு குழந்தைகளைப் பள்ளிகளில்சேர்க்கும் செலவுகள் வேறு அதிகமாக இருந்ததால் புத்தகம் வாங்குவதில்பெரிய ஆர்வம் காட்டவில்லை” என்றார் புத்தகத் திருவிழாவின் முதல்அரங்கான ‘போதிவனம்’ பதிப்பக உரிமையாளர் கருணா பிரசாத்.