அது 1996 என நினைக்கிறேன், ஈரோடு சென்னிமலை சாலையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பேருந்து நிறுத்தத்தின் சிமெண்ட் பெஞ்சில் தன்னந்தனியாக உட்கார்ந்தபடி இளைஞர் ஒருவர் ‘இந்தியா டுடே’ தமிழ் இதழைப் புரட்டிக்கொண்டிருந்தார். பேருந்து நடத்துநர்களுக்குரிய காக்கி நிறச் சீருடையில் இருந்தார். ‘இந்தியா டுடே’ வாசிப்பவர்கள் கொஞ்சம் இலக்கியக் கிறுக்குப் பிடித்தவர்களாகத் தென்பட்ட தருணம் அது. எனவே, தயக்கமில்லாமல் நெருங்கி, அவர் புரட்டிக்கொண்டிருந்த பக்கத்தை நோட்டமிட்டேன். ‘இந்தியா டுடே’ நடத்திய இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற ‘காற்றாடை’ என்னும் கதை பிரசுரமாயிருந்த பக்கங்களைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இலக்கியக் கிறுக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பேச்சுக் கொடுத்தேன், “இந்தியா டுடே’யெல்லாம் படிப்பீங்களா?”
இளைஞர் என்னை நிமிர்ந்து பார்த்தார், புன்னகை தவழும் முகம். சொட்டிக்கொண்டிருந்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, “இதுல என்னோட சிறுகதை வந்திருக்கு” என்றார். வாங்கிப் பார்த்தேன், ‘காற்றாடை’ என்னும் அவருடைய பிரசுரம் பெற்ற முதல் கதை. பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு தேநீர், புகை எனச் சில நிமிடங்களுக்குள்ளாகவே எனக்கும் க.சீ.சிவகுமாருக்கும் நெருக்கம் கூடியது. விடைபெற்றுக்கொள்ளும்போது, “நேரம் கிடைக்கும்போது வீட்டுக்கு வாங்க சிவா” என அழைத்தேன். “நேரமென்ன நேரம், இப்பவே போலாமே” எனப் புறப்பட்டுவிட்டார். அன்றும் அதற்குப் பிறகும் நொய்யல் கரையில் உள்ள எங்கள் கிராமத்து வீட்டில் நாள் கணக்காகவும் வாரக் கணக்காகவும் கூடி ஓயாத பேச்சு என அவருடனான நட்பின் தொடக்கக் கட்டம் கழிந்து சென்றது. இரவில் நொய்யல்கரையில் உள்ள தேவனாத்தா கோயிலுக்கோ மதுரை வீரன் கோயிலுக்கோ நடு ஆற்றிலுள்ள பாறைகளுக்கோ போய்விடுவோம். சில சமயங்களில் எழுத்தாளர்கள் என். ஸ்ரீராம், சாரு நிவேதிதா, விக்கிரமாதித்யன், கதிர்வேல், வெள்ளியங்கிரி, ரவிச்சந்திரன் எனக் கூட்டம் பெருகிவிடும். இலக்கியத்தைத் தாண்டி வாழ்வின் பாடுகளைப் பற்றிப் பேசுவதாகவே எனக்கும் சிவாவுக்குமான உரையாடல்கள் அலையும். பேசிக்கொண்டே ஊர் ஊராக அலைவோம், நண்பர்களைச் சந்திப்போம். ‘கன்னிவாடி’ தொகுப்பு வந்த பிறகு அவர் என்னைவிடப் பிரபலமாகிவிட்டார். அவரவருடைய எழுத்து முயற்சிகளைப் பற்றிய கனவுகளைப் பகிர்ந்துகொள்வோம். இலக்கியத்திற்கப்பால் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் வேட்கை பெருக, அந்த உரையாடல்கள் களம் அமைத்தன. அதைத் தொடர்ந்து கொங்கு மண்டல மரபுக்கலைஞர்களைப் பற்றிய திட்டமிடப்படாத நீண்ட ஆய்வொன்றை மேற்கொண்டோம். அவருடன் இணைந்தே ‘பாதம்’ என்னும் கலை, இலக்கிய அமைப்பை உருவாக்கினோம். 2002-ல் ஈரோடு அருகே உள்ள கிராமமொன்றில் கொங்கு மண்டலக் கூத்துக் கலைகளுக்கான பயிலரங்கு ஒன்றை ஒழுங்கு செய்தோம். இலக்கியம் சார்ந்த அவரது திட்டங்கள் விரிவடைந்துகொண்டிருந்த தருணங்கள் அவை.
தனித்த சிறுகதையாளர்
கொங்கு வட்டார வாழ்வையும் மொழியையும் அவற்றின் கொண்டாட்டங்களோடும் சிக்கல்களோடும் தன் சிறுகதைகளில் பதிவுசெய்த சிவகுமார், அதில் கவனிக்கத்தக்க வெற்றிகளையும் பெற்றார். எள்ளல் நிறைந்த அவரது மொழி கொங்கு மண்டலத்தின் தனித்த சிறுகதைக் கலைஞராக அவரை அடையாளம் காட்டியது. அவரது பூர்வீகக் கிராமமான கன்னிவாடி வானம் பார்த்த பூமி. அந்த மனிதர்களின் உழலும் வாழ்வை சிவகுமாரின் பகடியும் எள்ளலும் கொண்ட மொழி, துல்லியமான கோட்டுச் சித்திரங்களாக மாற்றியது.
எள்ளல், அவரது இயல்பாக இருந்ததே இதற்குக் காரணம். அகலாத புன்னகையுடன் உரையாடும் சிவகுமாருக்கு, தான் எழுத்தாளன் என்ற மிதப்பு எப்போதும் இருந்ததில்லை. குறைவாக எழுதிக்கொண்டிருப்பது பற்றிய ஒருவிதமான சுய எள்ளல் கொண்ட மனம் அவருடையது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். வெளியீட்டு உரையில் அவரது படைப்புப் பார்வை மீது கொஞ்சம் கடுமையான விமர்சனத்தையும் வைத்தேன். பேச்சைக் கேட்ட பதிப்பாளருக்கு வருத்தம். ஆனால் சிவகுமார் தனது இயல்பான புன்னகையுடன் அதை எதிர்கொண்டார். சென்னைக்கு வரும்போது கடற்கரையிலோ திருவல்லிக்கேணியில் உள்ள தேநீரகங்களிலோ உட்கார்ந்து பேசும்போது இருவரும் அவரவரது நாவல் முயற்சிகள் குறித்துப் பேசுவோம். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது நட்ராஜ் மகராஜ் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சிவகுமாரிடம் நாவல் எழுதுவது பற்றிய அவரது திட்டத்தை நினைவூட்டினேன்.
“எழுதிவிட வேண்டியதுதான்” என்றார்.
எழுதாமல் போன நாவல்
இந்த மண்ணின் வாழ்வை ஆதியோடந்தமாக அறிந்திருந்த அவரால் நிச்சயமாக எழுதியிருக்க முடியும். அவர் தமிழின் வெகுசனத் தளத்தில் இயங்கிய தீவிரப் படைப்பாளி. பாசாங்குகளுடன் வாழ்வதன் பயன்மதிப்பை அறியாதவர். அதன் காரணமாக நெருக்கடிகளைச் சந்தித்தவர். ஊடகத் துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் அதிகம். அவற்றோடு ஒன்றிப்போக முடியாத அவரது சுதந்திர மனம், அவரைக் கிட்டத்தட்ட ஒரு நாடோடியாக மாற்றியது. நாடோடித்தனம், அவரது இயல்பாகவே ஆனது. எள்ளலும் பகடியும் நிறைந்த அவரது படைப்பு மொழி, சமகால இலக்கியத்தின் ஒரு முக்கியமான பகுதி. வாழ்வு அவரை அழைத்துச்சென்ற சிக்கலான பாதைகளிலிருந்து அவரால் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரோடு பேச வாய்த்த ஒவ்வொரு தருணத்திலும் அதை வலியுறுத்திவந்தேன். இந்த ஆண்டிலோ அடுத்த ஆண்டிலோ கொங்கு வட்டார வாழ்வைப் பற்றிய திடமான நிறங்களாலான நாவலொன்றை எழுதித் தன் காலத்தின் சக படைப்பாளிகளை எளிதில் கடந்து சென்றுவிடுவார் என நினைத்தேன். இப்படி ஆகிவிட்டது.
நிச்சயமாக சிவகுமாரின் இடத்தை எட்டிப் பிடிப்பதற்குத் தகுதியுடைய மற்றொரு படைப்பாளி உருவாவதற்கு அதிக காலம் பிடிக்கும் என நினைக்கிறேன்.
தேவிபாரதி, எழுத்தாளர், ‘நட்ராஜ் மகராஜ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் தொடர்புக்கு: devibharathi.n@gmail.com