இடது முன்னணி ஓர் அலசல்
எக்ஸ்ப்ளோரிங் மார்க்சிஸ்ட் பெங்கால் 1971-2011 | தேவ்ராஜ் பட்டாச்சார்யா | கே.பி. பக்சி அண்ட் கம்பெனி | கொல்கத்தா | விலை: ரூ. 995/-
1970-களின் பிற்பகுதியில் நூலாசிரியரின் இளமைப் பருவத்தில் தொடங்கும் இந்த நூல் 2011-ல் இடது முன்னணி தேர்தலில் தோல்வியடைவதில் முடிகிறது. இதற்கிடையே சோவியத் யூனியனின் வீழ்ச்சி, உலகமயமாதல், இந்துத்துவா, நகர வாழ்க்கையின் உருமாற்றம், பஞ்சாயத்து ஆட்சி, கிராமப்புற வறுமை, என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள், வெகுஜன சினிமா, வெகுஜன அரசியல், இதனூடாக 2011 தேர்தலில் இடது முன்னணி தேர்தலில் தோல்வியடையக் காரணிகளாக இருந்த செயல்முறைகள், இடதுசாரிகளின் சரிவுக்குப் பின்னே இருந்த காரணிகள், அதன் எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றை அலசுவதாக இந்த நூல் அமைகிறது.
வங்காள சமூகத்தில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களை, அதனூடே இடது முன்னணியின் ஏற்ற-இறக்கங்களைத் தன் சொந்த வாழ்வின் பின்னணியில் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
- வீ.பா. கணேசன்
******
அழியாத வரலாற்றுச் சுவடுகள்
புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் | நா.அருள்முருகன் | ரூ.300/- | புது எழுத்து, காவேரிப்பட்டிணம் 635112 | செல்பேசி: 9842647101
பெரிய ராட்சச இயந்திரங்களால் உடைக்கப்பட்ட பாறைகள், கிரஷர் மிஷின்களால் கல்துகள்களாக உதிர்ந்துகொண்டிருக்கும் சூழலில், பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் சிறு முயற்சியாக வெளிவந்துள்ள நூலிது.
பாறை ஓவியங்கள் என்பவை அந்தக் கால மனிதர்கள் பொழுதுபோக்காகப் பாறைகளில் கிறுக்கியவை என்கிற தட்டையான பார்வை இன்றைக்கு மாறியிருக்கிறது. பாறை ஓவியங்களின் காலத்தைக் கணக்கிடுவதன் மூலமாகவே, ஒரு பகுதியின் தொன்மையான கால வரலாற்றைக் கண்டடைவதற்கான வழி நமக்குக் கிடைத்திருக்கிறது.
கி.மு.2 லட்சம் முதல் கி.மு.5000 ஆண்டு வரைக்குமான காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பாறை ஓவியங்களின் தன்மை, அவை வரையப்பட்ட காலம், அவற்றின் ஓவியப் பாணி எனத் தேடித் தேடித் தரவுகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் நா. அருள்முருகன். திருமயம், சித்தன்னவாசல், குடுமியான்மலை ஆகிய இடங்களில் இருக்கும் பாறை ஓவியங்களை வண்ணப் படங்களாகவும் நூலில் இணைத்திருப்பது கூடுதல் அழகு.
- மு. முருகேஷ்
******
மரண தண்டனைக்கெதிரான இலக்கியக் குரல்கள்
மரண தண்டனையின் இறுதித் தருணங்கள் | சா. தேவதாஸ் | ரூ. 120, கருத்து = பட்டறை | மதுரை-625006. | செல்பேசி: 98422 65884
மரண தண்டனை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதற்கு எதிரான குரல்களும் தொடங்கிவிட்டன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தத்துவ நூலான ‘தாவோ தே ஜிங்’கிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பார்க்கலாம். எனினும், இது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது 18-ம் நூற்றாண்டிலிருந்துதான் எனலாம். இப்படிமரண தண்டனைக்கு எதிரான இலக்கியப் பதிவுகள், அரசியல் பதிவுகள் என்று பலதரப்பட்ட பதிவுகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்தும் விரித்தும் எழுதியிருக்கிறார் சா. தேவதாஸ்.
உலக இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ்கி, விக்தோர் ஹ்யூகோ, ஆல்பெர் காம்யு, ஆர்தர் கோஸ்தலர் போன்றோரின் படைப்புகள், கட்டுரைகளைப் பற்றி இந்த நூலில்அலசப்பட்டிருக்கிறது. கூடவே, ராஜீவ் காந்திகொலை வழக்கு, யாகூப் மேமன், பாகிஸ் தானின் சவுகத் ஹுசைன் ஆகியோரின் தூக்கு தண்டனை போன்றவை குறித்தும்சா.தேவதாஸ் இந்த நூலில் எழுதியிருக்கி றார். பாராட்டுதலுக்குரிய முயற்சி. அதே போல் தமிழ் இலக்கியத்தில் மரண தண்டனை குறித்த பதிவுகளை (மிக மிகக் குறைவு என்றாலும்) தேடித் தொகுக்கும் முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம்.
- தம்பி
******
வன்முறையின் வடிவங்கள்
வன்முறையின் வடிவங்கள் | தஞ்சாவூர்க் கவிராயர் | ரூ.150, கவிதா பப்ளிகேஷன், சென்னை 600017 | 044-24364243
இந்த நூலில் மொத்தம் 36 குறுங்கட்டுரைகள் இடம்பெற் றுள்ளன. தஞ்சை வாழ்விலும் தமிழரின் வாழ்விலும் கடந்துபோகும் நடப்புகளை ஒட்டி எழும் பொதுக் கருத்துடன் தனது கருத்தையும் இணைத்துக் கட்டுரையாளர் படைத்திருக்கும் குறுங்கட்டுரைகளும் நடைச்சித்திரங்கள் இவை.
இலக்கிய விசாரமாக இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளில் கட்டுரையாளரின் தேர்ந்த ரசனையும், அதன்வழி புதிய வாசகர்களுக்கு வழிகாட்டும் அவரது பாங்கும் வெளிப்படுகின்றன. நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தஞ்சாவூரின் மண்வாசனையும் இலக்கிய வாசனையும் நிரப்பிய கட்டுரைகள் அந்த ஊரைக் குறித்த ஏக்கத்தை உருவாக்குகின்றன. . ‘வன்முறையின் வடிவங்கள்’ என்ற கட்டுரை, நாம் அன்றாட வாழ்வில் கத்தியின்றி ரத்தமின்றி நமது நடத்தை மூலம் எவ்வளவு வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறது. எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களது முகத் தோற்றத்துக்குமான ஒற்றுமையை வரைந்து பார்க்கும் மனதின் ரசனை, இலக்கிய விவாதத்துடன் காரசாரமான பல்சுவை உணவும் பரிமாறப்பட்டுவந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் நடத்திவந்த ‘யுவர் மெஸ்’ உணவகம் தரும் நினைவுகள் என்றெல்லாம் தலைவாழை விருந்து சாப்பிட்ட உணர்வைத் தருகிறது இந்தக் கட்டுரை நூல்.
- ஜெயந்தன்