இலக்கியம்

கடவுளின் நாக்கு 33: அழகின் அடையாளம்!

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

அழகு என்ற சொல்லின் அர்த்தம் மாறிக்கொண்டே வருகிறது. சென்ற தலைமுறையினர் அழகு எனப் பட்டியலிட்ட பல விஷயங்கள் இன்றைக்குக் கேலிக்குரியதாக மாறி விட்டன. இன்றைய தலைமுறை அழகு எனக் கருதுபவற்றை, மூத்தவர்கள் ‘‘இதுவா அழகு?’’ என ஏளனம் செய்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு, உலக அழகியாக வென்றவரின் புகைப்படம் ஒன்றை நாளிதழில் வெளியிட்டிருந்தார் கள். சலூனுக்கு சவரம் செய்துகொள்ள வந்த முதியவர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘‘ஒட்டடைக் குச்சி மாதிரி இருக்கா… இவளைப் போய் எப்படி உலக அழகின்னு செலெக்ட் செஞ்சாங்க?’’ எனக் கேட்டார்.

சலூன்காரர் சிரித்தபடியே, ‘‘சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கவதான் உலக அழகியாம்!’’ எனக் கேலி செய்தார். ஆனால், சவரம் செய்துகொள்ள காத் திருந்த ஓர் இளைஞன், அந்த உலக அழகி போட்டோவைப் பார்த்துவிட்டு ‘‘சூப்பரா இருக்கா… செம கிளாமர்!’’ என்றான் புன்னகையுடன். ‘கிளாமர்’ என்ற வார்த்தையின் அர்த்தமும் மாறிவிட்டது போலும்.

‘அழகு ஆபத்தானது!’ என்ற எண்ணம் பொதுப் புத்தியில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ரசனைதான் அழகு பற் றிய வரையறைகளை உருவாக்குகிறது. ஒரு பண்பாட்டினுடைய அழகு குறித்த எண்ணங்கள் இன்னொரு பண்பாட் டுக்குப் பொருந்தக்கூடியது இல்லை. ரசனை உருவாக்கத்தில் பொருளாதாரம், வர்க்கம் மற்றும் சமயம் (மதம்) முக்கியமான பங்கு வகிக்கின்றன. ‘மஹாலட்சுமி மாதிரி பொண்ணு இருக்கா!’ என்று வரையறை செய்வதன் பின்னே இருப்பது, சமயம் உருவாக்கிய அழகியல்தானே!

அழகை மேம்படுத்துவதாகக் கூறி பெரும் சந்தை கடைவிரிக்கப்படுகிறது. ‘வெள்ளை அல்லது சிவப்பு நிறத் தோல் களே அழகானவை; கருப்பு மாற்றப்பட வேண்டிய நிறம்; கருப்பு நிறத்தை ஒரு வருக்கும் பிடிக்காது…’ என்ற தவறான எண்ணம் ஊடகங்கள் வழியே தொடர்ந்து ஆழமாக பதிய வைக்கப்படுகின்றன.

ஜேம்ஸ் பால்ட்வின் என்ற புகழ்பெற்ற கருப்பின கவிஞர் ஒரு நிகழ்வைப் பதிவு செய்திருக்கிறார். லண்டன் மியூசியம் ஒன்றை பார்வையிடச் சென்றுள்ளார் பால்ட்வின். அங்கே தரையைச் சுத்தம் செய்யும் கருப்பின கிழவர் ஒருவர், பால்ட்வின்னிடம் ‘‘உனது ஊர் எது?’’ எனக் கேட்டிருக்கிறார்.

‘‘அமெரிக்கா என்று இவர் பதில் சொன்னதும், ‘‘அதைக் கேட்கவில்லை. உன் தந்தையின் ஊர் எது?’’ எனக் கேட்டிருக்கிறார்.

‘‘நியூ ஆர்லைன்ஸ்’’ என்ற அமெரிக்க நகரை கூறியுள்ளார் பால்ட்வின்.

‘‘நான் கேட்டது அதைப் பற்றி யில்லை. உன் பாட்டனின் பாட்டன் எந்த ஊரில் பிறந்தார்? ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருந்து நீங்கள் புலம்பெயர்ந்து அமெரிக்கா வந்தீர்கள்? உனது பூர்வீக ஊர் எது?’’ என கிழவர் திரும்பக் கேட்டுள்ளார்.

‘‘எனது பூர்வீகம் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது’’ என்ற பால்ட்வினின் பதிலால் ஏமாற்றம் அடைந்த அந்தக் கருப்பினக் கிழவர், ‘‘படித்தவர்களே கூட, தனது பூர்வீகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருப் பது, ரொம்பவும் வருத்தமளிக்கிறது!’’ என்று வருத்தமுடன் சொல்லியிருக் கிறார்.

கருப்பினக் கிழவருடைய கேள்வியின் வழி பால்ட்வினை உலுக்கி எடுத்துள்ளது. ‘அந்தக் கேள்வியின் வழியேதான் கருப்பின வம்சத்தின் தொடர்ச்சி படித்த அமெரிக்கவாசியில்லை என்கிற உணர்வு அழுத்தமாக தனக்கு ஏற்பட்டது’ என ஜேம்ஸ் பால்ட்வின் கூறுகிறார். இது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தக்கூடியதே.

கருப்பின மக்களின் அழகியலை அழித்து, அவர்களை வெள்ளைக்காரர் களின் அழகியலை ஏற்றுக்கொள்ள வைத் தது காலனிய அரசுகளின் அராஜகம். இதற்கு எதிராகத்தான் தான் கவிதைகள் எழுதுவதாக கூறுகிறார் பால்ட்வின்.

அழகியல் எவ்வாறு அரசியலாக்கப் பட்டது? யாருடைய அழகியல் கோட்பாடு களை, யார் பின்பற்றுவது என்கிற விவாதம் இன்று உலக அரங்கில் தொடர்ந்து உரத்துப் பேசப்படுகிறது.

பழங்குடி மக்களை ‘நாகரீகமற்றவர் கள்’ என முத்திரைக் குத்தி காட்டை விட்டு வெளியேற்றும் அதிகாரம், அவர் களின் கலைகளை விற்பனைப் பொரு ளாக்கி சந்தையில் பெரும் லாபம் சம் பாதிக்கவும் செய்கிறது. பழங்குடி மக் களால் செய்யப்பட்டது போன்ற கலைப் பொருட்களை இயந்திரங் களின் உதவியால் செய்து, சந்தையில் விற்பனை செய்கிறார்கள். உண்மை யில் இது ஒரு தந்திரம். உண்மை யான பழங்குடி மக்களின் கலைப் பொருட் களை சந்தைப்படுத்தப்படும்போது லாபம் சம்பாதிப்பது இடைத்தரகர்களும் வணிகர்களுமே.

பொதுவாக கதைகளில் வெள்ளை அல்லது சிவப்பு மட்டுமே அழகின் நிறமாக சித்தரிக்கப்படுவது இல்லை. மாறாக, பேரழகியாக சித்தரிக்கப்படுகிற மகாராணி கூட தவளையைத் திரு மணம் செய்துகொள்வாள். பேரரச னால் காப்பாற்ற முடியாத இள வரசியை, ஆடு மேய்கிற ஒருவன் காப்பாற்றி அரசனாகிவிடுகிறான். இப்படி உலகம் எதையெல்லாம் செய்யத் தயங்குகிறதோ, தடுத்து வைத்திருக்கிறதோ அதையெல்லாம் கதைகள் செய்து காட்டிவிடுகின்றன.

ஒரு காட்டில் நிறைய பறவைகள் வசித்து வந்தன. அங்கே வசித்த ஒரு குயில், தான் மட்டுமே கருப்பாக இருப்பதாகவும் மற்ற பறவை களெல்லாம் அழகாக இருப்பதாக வும் கருதி பொறாமைப் பட்டுக்கொண்டே யிருந்தது. குறிப்பாக, மயிலைப் போல தான் அழகாக இல்லையே என்கிற வருத்தம் குயிலுக்கு.

ஒரு நாள் காட்டில் ஒரு விழா நடந்தது. அங்கே மயில் தோகை விரித்து ஆடத் தொடங்கியது. அதன் அழகைக் கண்டு எல்லாப் பறவைகளும் வியந்து பாராட்டின. குயிலோ ‘அய்யோ நமக்கு இப்படியொரு அழகில்லையே!’ என மனசுக்குள் ஏங்கித் தவித்தது.

அழகான மயிலை பாடும்படியாக சிங்கம் கட்டளையிட்டது. மயிலும் உற்சாகம்கொண்டு பாடத் தொடங்கியது. அதன் குரலைக் கேட்க சகிக்கவில்லை. அதைக் கண்ட குயில் ‘‘நான் மயிலைப் போல அழகில்லைதான். ஆனால், என் குரல் இனியது!’’ என்று சொல்லி பாடத் தொடங்கியது. எல்லாப் பறவைகளும் குயிலின் குரலைப் பாராட்டின.

கடைசியாக சிங்கம் சொன்னது: ‘‘உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் ஒரு குறையும் இருக்கும்; குறையை மட்டுமே நினைத்து வருத்தப்படக்கூடாது. எது திறமையோ அதை மேம்படுத்தி பெயரும், பாராட்டும் பெற வேண்டும்!’’

அந்த நிமிடத்தில் தன் தவறை உணர்ந்த குயில், அதன் பிறகு தனது கருப்பு நிறத்தைப் பற்றி கவலைப்படவே யில்லை என்று முடிகிறது பிஹார் மாநில நாட்டுப்புறக் கதை ஒன்று.

அழகாகிறோம் என நினைத்து தன்னை வருத்திக்கொள்கிறவர்களையும், தன் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள் கிறவர்களையும் நினைத்தால் வருத்த மாக உள்ளது. சந்தை சூழ்ச்சிக்கு தன்னைப் பலி கொடுத்தவர்கள் என்றே இவர்களைக் கூறுவேன். அழகின் முடிவற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டிக்கொண்டேயிருக்கிறது இயற்கை. அதில், புற்களின் பசுமை மட்டுமே அழகானதில்லை; உதிர்ந்த சருகின் பழுப்பும்கூட அழகுதான்!

எது அழகு என்பதை சந்தை முடிவு செய்ய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தனது தாய் தான் பேரழகி. அந்தந்த தாய்க்கோ, தன் பிள்ளைகள்தான் அழகிகள், அழகன் கள்! இந்த எண்ணம் உலகெங்கும் ஒன்றுபோலதான் இருக்கிறது. அழகு குறித்த மற்ற வரையறைகள் யாவும் பண்பாடு உருவாக்கிய அடையாளங்கள் மட்டுமே.

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

SCROLL FOR NEXT