அடுத்த தலைமுறைக்குத் தமிழையும் தமிழ் வாசிப்பையும் கொண்டுசெல்வது குறித்த கவலை பரவலாக உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் படித்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே தமிழை நன்கு படிக்கத் தெரிந்தவர்களாகவே இருந்தார்கள். ஆங்கில வழிக் கல்வி வழங்கும் தனியார் பள்ளிகள் பெருகத் தொடங்கிய 1980களுக்குப் பிறகு பள்ளிக் கல்விக்கும் தமிழுக்குமான உறவு தேய்பிறையாகத் தொடங்கியது.
அதிகச் செலவுசெய்து தனியார் பள்ளியில் படிக்க இயலாதோருக்கான புகலிடமாகவே தமிழ் வழிக்கல்வி பார்க்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் தமிழ் என்பது கடமைக்குப் பால் குடிக்கும் கதையாகவே பெரும்பாலும் உள்ளது. விளைவு, தமிழை எழுதவும் வாசிக்கவும் தெரிந்த தமிழர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
உலகமயமாதலுக்குப் பிந்தைய ஊடக வளர்ச்சி பல்வேறு உள்ளூர் மொழிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்ததைப் போலவே தமிழுக்கும் அமைந்தது. இதன் விளைவாகப் பொதுவெளியில் தமிழின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. எனினும் தமிழ் நூல்களின் விற்பனையோ அவற்றை வாசிப்பவர்களின் எண்ணிக்கையோ அதில் நூறில் ஒரு பங்குகூடக் கூடியிருப்பதுபோலத் தெரியவில்லை. பெரும்பாலான நூல்களின் விற்பனை ஆண்டுக்கு 500 பிரதிகள் என்னும் இலக்கைத் தாண்டுவதற்குத் திணறும் நிலையே இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, அடுத்த தலைமுறைக்கு இந்த அளவுக்கேனும் வாசிப்புப் பழக்கம் இருக்குமா என்னும் அச்சமும் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டுமானால், கல்விக் கூடங்களுக்குத் தமிழ் நூல்களை எடுத்துச் செல்ல வேண்டும். இது முதன்மையாக அரசாங்கத்தின் கடமை. அரசு நூலகங்களையும் கல்விக்கூடங்களில் உள்ள நூலகங்களையும் மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனினும், வாசிப்புப் பண்பாட்டை வளர்க்க வேண்டுமென்றால் அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்க வேண்டும். இந்த இயக்கத்தைப் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இணைந்து முன்னெடுக்கலாம்.
பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலோ மாதத்துக்கு ஒருமுறையேனும் ஒரு கூட்டம் நடத்தலாம். அந்தக் கூட்டத்தில் மாணவர்களுக்கு எழுத்தாளர்கள் கதை சொல்ல வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். தமிழ் எழுத்தாளர்களில் பலர் எழுத்தில் மட்டுமின்றி, வாய்மொழியாகவும் கதை சொல்வதில் திறமைசாலிகள். ஒவ்வொரு பதிப்பகமும் ஒருசில கல்விக்கூடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த முன்வரலாம். கலந்துரையாடல்கள், போட்டிகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்தலாம்.
மாணவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பை எழுத்தாளர்களும் பெரிதும் விரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் வாசிப்பை ஒரு பண்பாடாக மாணவர் மத்தியில் வளர்த்தெடுக்கலாம். இளம் தலைமுறை வாசகர்களின் எண்ணிக்கை வளருவதுடன் அடுத்த தலைமுறையின் வாசிப்புப் பழக்கத்துக்கான விதையும் ஊன்றப்படும். பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இதைச் செய்ய முன்வருவார்களா?