இலக்கியம்

வரலாற்றின் சிதைந்த பிம்பம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

உண்மைகளோடு கற்பிதங்கள் மற்றும் கதைகள் வழியாகப் புகைமூட்டமாக உருவாகும் சித்திரம்தான் வரலாறு. இந்தியாவைப் பொறுத்தவரை இறந்த காலத்திலிருந்து முழுக்க விடுபட முடியாமலும் நவீன காலத்துக்குள்ளும் முழுக்கப் பொருந்த முடியாமலும் சாதாரண மக்களையும் அலைக்கழிப்பதில் வரலாற்றுக்கும் ஒரு பிரதான பாத்திரம் உண்டு. வரலாறு ஒருவருக்கு அல்லது ஒரு சமூகத்துக்குப் பெருமிதத்தைத் தருகிறது. அதே பெருமிதம் இன்னொருவருக்கு அல்லது இன்னொரு சமூகத்துக்கு இழப்புணர்வையும் தாழ்வுணர்வையும் தருகிறது. சிலநேரங்களில் பெருமிதத்தையும் இழப்புணர்வையும் தாழ்வுணர்வையும் ஒருசேர அனுபவிக்கும் மனிதர்களும் உண்டு; சமூகங்களும் உண்டு. பெருமிதம், இழப்புணர்வு, தாழ்வுணர்வு ஆகியவற்றோடு வன்மமும் சேரும்போது கலவரங்களும் மோதல்களும் பலிகளும் மதத்தின் பேராலும், மொழியின் பேராலும், இனத்தின் பேராலும், சாதிய கவுரவத்தின் பேராலும் வெவ்வேறு இடங்களில் தொடரும் நிலமாக ந்தியா இருக்கிறது.

தமிழில் கடந்த பத்தாண்டுகளாகக் குடும்ப வரலாறுகளும், சாதி வரலாறுகளும் வேர்களைத் தேடும் போர்வையில் பெருமிதங்களாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் பெரியார் நிகழ்த்திய தாக்கத்தால் பொது இடத்தில் வெளிப்படாமல் இருந்த சாதிய உணர்வுகளும் பெருமிதங்களும் இக்காலகட்டத்திலேயே மீண்டும் தலைதூக்கியுள்ளன. ஆனால் வரலாற்றுப் பெருமிதங்களோ அந்தஸ்தோ சாதாரணக் குடிமகனுக்கு எந்த விடுதலையையும் தரவில்லை. அதேவேளையில் ஜனநாயகம், சம உரிமை, சம வாழ்வை நோக்கி உறுதியளித்த நவீன அரசிலும் ஒதுங்கக்கூட அவனுக்கு நிழலில்லை. அவன்தான் தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ்.

வரலாற்றின் வீரக் கதாபாத்திரம்

வரலாறு, இறந்தகாலப் பெருமிதங்கள், நவீன அரசமைப்பின் அதிகாரத்துவம் ஆகியவற்றால் கோரக் கந்தலாகக் கிழித்து எறியப்படுபவன் அவன். மிகமிகச் சாதாரண வாழ்க்கையை வாழப் போராடிக்கொண்டிருக்கும், பள்ளிச் சத்துணவு அமைப்பாளன் ந-வின் தலையில், வரலாற்றிலிருந்து ஒரு வீரக் கதாபாத்திரம் இடிபோலச் செங்குத்தாக விழுகிறது. சாதாரணனான ந, காலனிய ஆட்சிக்கெதிராகப் போராடி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்ட காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடியான வாரிசு நட்ராஜ் மகராஜ் என்று அடையாளம் காணப்படுகிறான். அவனுக்கு அந்த அடையாளத்தைப் புகட்டிய அரசு உள்ளிட்ட அமைப்புகள் அவனது வாழ்க்கையை மேம்படுத்தாதது மட்டுமல்ல, அவனுக்கான சாதாரண இருப்பையும் பறித்துப் பைத்தியமாக்குகின்றன.

அரசு, காவல்துறை மற்றும் நீதி அமைப்பின் அதிகாரத்துவக் கண்மூடித்தனத்தால் குற்றம் எதுவும் செய்யாமலேயே கைதுசெய்யப்படும் காஃப்காவின் புகழ்பெற்ற நாவலான விசாரணையின் கதாபாத்திரமான யோசப் க-வின் சாயலை ஒத்தவன்தான் ந. தேவிபாரதி நாவலில் வரும் ஊரின் பெயர், நபர்களின் பெயர்கள், பல்கலைக்கழகத்தின் பெயர்களையெல்லாம் ஒற்றை எழுத்துகளிலேயே சுருக்கியிருக்கிறார். எழுத்தாளர் சுருக்கியிருந்தாலும் பிராந்தியத்தையும், பெயர்களையும், ஊர்களையும் அடையாளம் காண முடிகிறது. ந என்ற கதாபாத்திரத்தின், பாரம்பரியம் உணர்த்தப்படும்போது மட்டுமே அவன் நட்ராஜ் மகராஜ் ஆக விரிகிறான்.

கைநழுவும் மனிதப் பண்புகள்

மேற்கில் நவீனத்துவத்தை அங்குள்ள சமூகங்கள் உள்வாங்கிய முறையும் காலனியம் வழியாக இந்தியா நவீனத்துவத்தை எதிர்கொண்ட முறையும் வேறு வேறானது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகப் பண்புகள் அடித்தளம் வரை நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு புரட்சிகள் மற்றும் உயிர்த் தியாகங்கள் மூலம் ஐரோப்பா நவீனத்தை அடைந்தது. இந்தியாவிலோ காலனிய ஆட்சி முறைக்கு அனுசரணையாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசு மற்றும் அமைப்புகள் வழியாக உருவான அதிகாரத்துவம், சுதந்திர இந்திய அரசு மற்றும் அதிகாரத்துவ மனநிலையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தவேயில்லை. உயர் கல்வி கற்ற இந்தியக் குடிமகனில் தொடங்கி பாமரன் வரை பெரும்பாலான மக்களிடம் இந்திய அரசியல் சாசனம் உறுதிசெய்திருக்கும் ஜனநாயகம், சமத்துவம் சார்ந்த குறைந்தபட்ச நம்பிக்கையையோ அடிப்படை மனிதாபிமானத்தையோ மனரீதியாகக்கூட உருவாக்க முடியவில்லை. ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை உரிமைகளைக்கூட அரசுகள் கைவிட்ட உலகமயமாதல் சூழலில் நிலப்பிரபுத்துவத்தின் சில மனிதார்த்தப் பண்புகளும் கைவிடப்பட்டுள்ளன. நவ முதலாளித்துவம் அனுசரிக்கும் குறைந்தபட்சத் தொழிலாளர் நலன்களும் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சாதிய ஏற்றத்தாழ்வுகளும், கைவிட முடியாத நிலப் பிரபுத்துவ மனநிலையும் சேர்ந்த விஷக் கலவை அது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் அன்றாடம் எதிர்கொள்ளும் நிதர்சனத்தைத்தான் இந்நாவலின் நாயகன் ந. எதிர்கொள்கிறான்.

இழந்த அரச மகத்துவம்

சாதாரண சத்துணவுப் பணியாளனாக அரசுத் தொகுப்பு வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டிய ந, நட்ராஜ் மகராஜ் என்று கண்டுபிடிக்கப்பட பின், அவனைக் காண ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் வருகின்றனர். ந, பணியாற்றும் பள்ளிக்கூடத்திலும் அவனது பெருமை பேசப்படுகிறது. ஆனால் ந-வின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஊடகங்கள் நேர்காணல் செய்கின்றன. பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. நட்ராஜ் மகராஜின் தாத்தாவின் உருவச் சிலைக்கான மாதிரியாக நட்ராஜ் மகராஜ் மாறுகிறான். கடைசியில் நரகம் போன்றிருக்கும் எலிகள் சூழ்ந்த இருட்டறையில் கைவிடப்படுகிறான். நட்ராஜ் மகராஜ் தனது இழந்த அரச மகத்துவத்தையும் பெற முடிவதில்லை. முன்பு வாழ்ந்த பாம்புகள் அடிக்கடி வரும், சிதிலமான அரண்மனையின் காவல் மாடத்துக்கும் அவனால் போக முடிவதில்லை. பாதியில் நின்றுபோன அரசுத் தொகுப்பு வீட்டைக் கட்டிக்கொண்டு குடிபோகவும் முடியவில்லை.

ந என்ற சாதாரணன் காளிங்கராய நட்ராஜுக்கே தொடர்பில்லாதவனாகக்கூட இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவன்மீது திணிக்கப்பட்ட திடீர் கற்பிதச் சிறைக்குள் சாதாரண மக்கள் பலரையும் போலவே அவனும் தூக்கி வீசப்படுகிறான். பிம்ப வழிபாடு, பாலியல், அதிகார மயக்கம், ஊடக மாயை எனப் பல அடுக்குகளால் கட்டப்பட்டு, ஒரு சமூகமே சிக்கியிருக்கும் பிம்பச் சிறை அது. அங்கே காளிங்கராய நட்ராஜின் வேடத்தில் எண்ணற்ற பேர் காவல் துறையினரின் கண்காணிப்பில் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

தீவிரமும் அங்கதமுமாகச் சிரிக்க வாய்ப்புள்ள இடங்கள் இந்நாவலில் அதிகம் உண்டு. ஆனால் சிரிக்க இயலாது. அந்தச் சிரிக்கவியலாத வலியையும் மூச்சுத் திணறலையும் வாசகன் உணரும் வண்ணம் எழுதியிருப்பதுதான் தேவிபாரதி என்ற எழுத்தாளர் அடைந்திருக்கும் வெற்றி.

காஃப்காவின் விசாரணை நாவலில் இருப்பது போலவே கற்பனையின் அதீதமும் உருவகத்தன்மையும் கொண்ட கதை நிகழ்வுகள் நட்ராஜ் மகராஜில் உண்டு. நட்ராஜ் மகராஜ் நாவலை ஒரு யதார்த்த நாவல் என்று கூறமுடியாது. ஆனால் தேவிபாரதி உருவாக்கும் மிகுபுனைவுலகத்துக்குள் சற்று ஊடுருவிப் பார்த்தால் அதில் நமது இந்திய, தமிழ் சமூகத்தின் யதார்த்தமும் சமீபத்திய நிகழ்வுகளும் ஒரு வாசகருக்குப் புலப்படலாம். காஃப்காவின் விசாரணை நாவலுக்கு அருமையான தமிழ் எதிரொலி என்றும் நட்ராஜ் மகராஜ் நாவலைக் கூறலாம்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

நாவல்: நட்ராஜ் மகராஜ்

தேவிபாரதி

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி. சாலை,

நாகர்கோவில்- 629001

தொடர்புக்கு: 9677778863

விலை: ரூ. 300/-

SCROLL FOR NEXT