வண்ணம் தீட்டப்பட்ட சொற்கள்
மழை நாளில் சூடாகத் தேநீரும் பஜ்ஜியும் சாப்பிடுவதற்காகப் பலரும் டீக்கடையைத் தேடிப் போவார்கள். நானோ, பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன். மழைதான் சாலையோரப் புத்தக வியாபாரிகளின் முதல் பிரச்சினை. ‘நனையாமல் எங்கே புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பது’ என அவர்கள் திண்டாடுவார்கள். கண் முன்னே புத்தகங்கள் ஈரத்தில் நனைந்து ஊறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது கையறு நிலை.
‘கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்’
- எனக் குறுந்தொகை பாடல் காமத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது, ‘சூரியன் தகிக்கும் வெப்பமான பாறையில் கையில்லாத வாய் பேச முடியாதவர், கண்ணினால் காக்கும் வெண்ணெய் உருகிப் பரவுவதைப் போல, மனசுக்குள் நோய் பரவியுள்ளது’ என்கிறது குறுந்தொகை,
மழை நாளில் சாலையோரப் புத்தக வியாபாரியின் துயரநிலையும் இது போன்றதே. மழை எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொண்டுவருவது இல்லை. மழைநாளில் ஒன்றிரண்டு புத்தகங்கள் கூட விற்பனையாகாது. மழையில் யார் தேடி வந்து புத்தகம் வாங்கப் போகிறார்கள்? மழை பெய்யும் நாளில் நிச்சயம் ஏதாவது ஒரு பழைய புத்தகக் கடையைத் தேடிப் போவேன். ஒன்றிரண்டு புத்தகங்களையாவது வாங்குவேன்.
மழை பெய்து வெறித்த இரவில் அதை சூடாகப் படித்தும் முடிப்பேன். அப்படியொரு அடைமழைக் காலத்தில் வெளியே போகவே முடியவில்லை. மழை கொட்டி முழங்கியது. இரவு 9 மணியிருக்கும். வீட்டின் காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு, கதவைத் திறந்தேன். கே.கே.நகரில் பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒருவர் பாதி நனைந்தபடி வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய கையில் ஒரு மஞ்சள் பை நிறையப் புத்தகங்கள்!
“சார், இன்னைக்கு வியாபாரமே இல்லை. முழு பட்டினி. இதை வைத்துக் கொண்டு 200 ரூபா இருந்தா கொடுங்க. வீட்டுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டுப் போகணும்’’ என்றார்.
அவர் நின்ற கோலத்தைப் பார்த்ததும் புத்தகமே கொண்டு வராவிட்டாலும் பணம் தந்திருப்பேன். என்ன புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார் எனப் பார்க்காமல், உடனடியாகப் பணம் எடுத்துத் தந்தேன். மழைக்குள்ளாகவே கிளம்பிவிட்டார். அன்றைய இரவில் அவரது வாழ்க்கை அவலம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.
மறுநாள் காலை என்ன புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார் என, பையில் இருந்து எடுத்துப் பார்த்தேன். விக்டர்பிராங்கில், எமர்சன், நட் ஹாம்சன், ஜோனதன் ஸ்விப்ட், ஜே.கிருஷ்ணமூர்த்தி என 10 புத்தகங்கள் இருக்கக்கூடும். என் ரசனையை நினைவில் வைத்துக்கொண்டு எப்படிச் சரியாகத் தேடிக் கொண்டுவந்திருக்கிறார்? இந்த உறவுக்கு என்ன பெயர்?
எனக்குள் குற்றவுணர்ச்சி உருவானது.
அவருக்குக் கொடுத்த பணம் போதுமானதில்லை. ‘நாளை அவரது கடைக்குச் சென்று கூடுதல் பணம் தந்துவிட வேண்டும்’ என முடிவு செய்துகொண்டேன். மறுநாள் போனபோது கடையிலிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கிப் போயிருந்தது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. பக்கத்தில் இருந்தவர்கள், அவர் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தக் கடை செயல்படவே இல்லை. பிறகு ஒருநாள் அவரைத் தற்செயலாக வடபழனியில் பார்த்தேன். மூன்று சக்கர சைக்கிளில் பழைய பேப்பர் வாங்குவதற்காகப் போய்க் கொண்டிருந்தார்.
“என்ன ஆயிற்று?’’ எனக் கேட்டேன்.
“போதும் தம்பி, புத்தகம் விற்றுக் கட்டுபடியாகலை. மழையில் புத்தகங்களை நனையவிடுறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இப்போ வீடு வீடா போய்ப் பழைய பேப்பர் வாங்கி விக்கிறேன். அது போதும். ஏதாவது நல்ல பொஸ்தகம் கிடைச்சா… வீட்டுக்குக் கொண்டாந்துத் தர்றேன்’’ என்றார்.
அப்படிச் சொல்லும்போது, அவரதுமுகம் மலர்ந்திருந்தது. “எனக்குக் கொடுத்த புத்தகத்துக்கு, நான்தான் உங்களுக்கு மிச்சப் பணம் தர வேண்டும்’’ என்றேன்.
“அதெல்லாம் கணக்குப் பாக்கவேணாம். அன்னிக்கு மழைக்குள்ளே நீங்க பணம் தராமப் போயிருந்தா… நாலு வயிறு பட்டினி கிடந்திருக்கும். புத்தகம் விக்கிறவன் கணக்குப் பாத்து விக்க முடியாது. கூடக் குறையத்தான் கிடைக்கும். படிக்கிறவங்க சந்தோஷப்படுறாங்கள்ல… அது போதும்’’ என்றார்.
‘இந்த மனம் எத்தனைப் பேருக்கு வரும்…’ அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களை வாசிப்பவர்கள் மட்டும் அதன் நேசர்கள் இல்லை. பழைய புத்தகங்களை விற்பவர்களும், அதன் நேசர்கள்தான் என்பது புரிந்தது.
மழையோடு அவர் கொண்டுவந்த புத்தகங்களில் ஒன்றாகக் கிடைத்த புத்தகம்தான்… ஓவியர் பிகாஸோவின் கவிதைத் தொகுப்பான ‘தி பரியல் ஆஃப் தி கவுன்ட் ஆஃப் ஓர்கஸ் அண்ட் அதர் பொயம்ஸ் (The Burial of the Count of Orgaz & Other Poems) என்கிற புத்தகம்.
எல் கிரிகோவின் புகழ்பெற்ற ஓவியமான, ‘தி பரியல் ஆஃப் தி கவுன்ட் ஆஃப் ஓர்கஸ் தந்த உந்துதலில் உருவான கவிதை அது. உலகப் புகழ்பெற்ற ஓவியராகத்தான் பிகாஸோவைப் பலருக்கும் தெரியும். ஆனால், அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகளை சர்ரியலிசக் கவிஞர் ஆந்த்ரே பிரெடன் மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறார்.
பிகாஸோ நம் காலத்தின் மகத்தான ஓவியர். இன்று அவரது ஓர் ஓவியத்தின் விலை 157 மில்லியன் டாலர். 1935-ம் ஆண்டு தனது 54-வது வயதில் ஓவியம் வரைவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கவிதைகள் படிப்பதிலும் கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
பிகாஸோ பாரிஸுக்கு வந்த நாட்களில் தனக்குத் துணையாக மாக்ஸ் ஜேக்கப் என்ற கவிஞரை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். அவரது நட்பின் காரணமாக பிரெஞ்சு இலக்கியவாதிகள் பலருடன் பிகாஸோவுக்கு நட்பு உருவானது. அந்த நாட்களில் பாரிஸில் உள்ள கபேயில் ழான்காக்தூ, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, ஸ்காட் பிட்ஜெரால்ட் எனத் துடிப்பான இளம்படைப்பாளிகள் தினசரி ஒன்றுகூடுவார்கள். அந்தச் சந்திப்பில் பிகாஸோவும் கலந்துகொண்டு, இலக்கியம் குறித்து நிறைய விவாதித்திருக்கிறார்.
காளை சண்டை குறித்த பிகாஸோவின் கவிதையில் ஓவியம் போலவே காட்சிகள் துண்டிக்கபட்டு, சொற்களின் வழியே தாவித் தாவிச் செல்கின்றன.
இவரது கவிதைகளில் வண்ணங்களும், நிழல்களும், உருவங்களின் நெகிழ்வுத் தன்மையும் உணர்ச்சிகளைச் சிதறடிக்கும் விதமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. கனவுத்தன்மை கொண்ட இந்தக் கவிதைகளைச் சர்ரியலிசக் கவிதையென வகைப் படுத்துகிறார்கள்.
ஓவியர்கள் கவிஞர்களாவது இயல்பானதுதான். பிகாஸோவுக்கு முன்னோடியாகப் பிரபல ஓவியரும் சிற்பியுமான மைக்கேல் ஆஞ்சலோவும் கவிதைகள் எழுதியிருக்கிறார். வில்லியம் பிளே சிறந்த ஓவியரும் கவிஞருமாவார். இது போலவே ஓவியரான வான்காஃப், தனது சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் அற்புதமானவை!
‘ஓவியம் என்பதைச் சொற்கள் இல்லாத கவிதை’ என்பார்கள். அப்படியெனில், ஓவியர்கள் எழுதிய கவிதைகளை ‘வண்ணம் தீட்டப்பட்ட சொற்கள்’ என்றழைக்கலாமா?
- இன்னும் வாசிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
writerramki@gmail.com