இலக்கியம்

அம்பேத்கரைத் தமிழில் வாசிக்க...

செய்திப்பிரிவு

அம்பேத்கரைப் பொறுத்தவரையில் தமிழ் வாசகர்கள் நற்பேறு பெற்றவர்கள். ஆங்கிலத்தில் வெளியான அவரின் எழுத்துகளும் உரைகளும் தமிழில் ஓரளவுக்கு முழுமையாக கிடைக்கின்றன. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள அம்பேத்கரின் 37 தொகுதிகளையும் சுமார் 1,000 ரூபாய் விலைக்குள் வாங்கிவிட முடியும் என்பது நல்லதொரு வாய்ப்பு. மேலும், மராத்தியில் வெளிவந்து இன்னும் ஆங்கிலத்திக்கு மொழிபெயர்க்கப்படாத அம்பேத்கரின் எழுத்துக்களையும், மலையாளம்வழி தமிழில் மொழிபெயர்த்துவருகிறது என்.சி.பி.எச். எனவே மராத்தி, மலையாளத்தை அடுத்துத் தமிழிலும் இனிமேல் அம்பேத்கரின் முழுத் தொகுதிகளும் வாசிக்கக் கிடைக்கும்.

முழுத் தொகுதிகள் ஒருபுறமிருக்க, அம்பேத்கரின் குறிப்பிட்ட சில புத்தகங்களும், உரைகளும் சிறுவெளியீடுகளாகத் தொடர்ந்து தமிழில் வெளிவருகின்றன. ‘அனிகிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ (Annihilation of Caste) புத்தகத்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் ‘சாதியை ஒழிக்க வழி’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தது. அதே நூலை தலித் முரசு பதிப்பகம், ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ என்ற பெயரில் மலிவு விலைப் பிரதியாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அதே நூல் அருந்ததி ராயின் ‘விரிவான’ முன்னுரையுடனும் வெளியாகி யுள்ளது. இதைத் தவிர, பேராசிரியர் பெரியார்தாசன் மொழிபெயர்ப்பில் ‘புத்தமும் அவரது தம்மமும்’ நூல் இலவசப் பிரதிகளாக பல்லாயிரக் கணக்கில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அம்பேத்கரைப் பற்றிய அறிமுகங்களும் ஆய்வுகளும் தமிழில் நேரடியாகவும் மொழி பெயர்ப்பாகவும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் சமீபத்தில் வெளிவந்த சில புத்தகங்கள் இவை…

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
டாக்டர் அம்பேத்கர்,
விலை: ரூ. 150,
தலித் முரசு வெளியீடு,
சென்னை- 600 034, 044 28221314

‘நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’ என்ற முழக்கத்தை அம்பேத்கர் 1935-ல் அறிவித்தார். 1956-ல் அந்த உறுதிமொழியை 10 லட்சம் மக்களுடன் இணைந்து அவர் நிறைவேற்றியது வரையிலான காலகட்டத்தின் ஆவணம் இது. பவுத்த சமய மாற்றம் குறித்த அம்பேத்கரின் முக்கிய உரைகளும், அதை ஆதரித்து பெரியார் எழுதிய தலையங்கமும் இந்நூலின் சிறப்பு. பவுத்தத்தில் இணைய அம்பேத்கர் விடுத்த அழைப்பு, தலித்துகளுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்தான் என்பதை இத்தொகுப்பு சுட்டிக்காட்டுகிறது.

அம்பேத்கர்: வாழ்வும் - பணியும்
என்.ராமகிருஷ்ணன்
பாரதி புத்தகலாயம்,
சென்னை-18, விலை: 150, 044-24332424.

அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி என். ராமகிருஷ்ணன் எழுதிய நூலின் மறுபதிப்பு இது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றின் வழியாக அவரது சிந்தனைகளை எளிமையாகவும் முழுமையாகவும் அறிமுகம் செய்யும் நூல். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்களிப்பு பற்றிய கட்டுரையும் உள்ளடக்கம்.

அம்பேத்கரின் வழித்தடத்தில் பகவான்தாஸ்
தமிழில்: இந்திராகாந்தி அலங்காரம்,
விலை: ரூ. 70, புலம்,
சென்னை- 600 005. 9840603499

அம்பேத்கரின் இறுதிக் காலத்தில் அவரது ஆய்வு உதவியாளராக உடனிருந்த பகவான்தாஸ் எழுதிய நினைவுக் குறிப்புகள். அம்பேத்கரின் ஆளுமையையும் அவரது செயல்பாடுகளையும் இன்னும் அணுக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் அளிக்கிறது. ஆங்கிலத்தில் நவயானா வெளியீடாக வெளிவந்த நூலின் மொழிபெயர்ப்பு.

டாக்டர் அம்பேத்கர் டைரி
அன்புசெல்வம், விலை: ரூ.140, புலம்,
சென்னை- 600 005. 9840603499

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரோடு தொடர்புடைய முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் ‘டைரி’ வடிவத்தில் குறிப்புகளாகத் தொகுத்து வழங்கியுள்ளார் அன்புசெல்வம்.

மறுபதிப்பு செய்ய வேண்டியது

தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை, மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டிருந்தது. அம்பேத்கர் பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில் முக்கியமானது அது. மீண்டும் அந்த நூல் வெளிவருவதற்கும் பரவலாகக் கிடைப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT