இலக்கியம்

தொடுகறி: தமிழகத்திலிருந்து சிட்னிக்கு...

செய்திப்பிரிவு

தமிழகத்திலிருந்து சிட்னிக்கு…

சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் ‘சிட்னி எழுத்தாளர் விழா'வுக்கு இந்த வருஷம் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருக்கும் மூவரில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ‘ஹட்சட் இந்தியா’ பன்னட்டுப் பதிப்பகத்தின் வத்சலா பானர்ஜியுடன் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நூல்களை வெளியிடும் ‘தாரா புக்ஸ்’ கீதா உல்ஃப், ‘காலச்சுவடு பதிப்பகம்’கண்ணன் ஆகிய இருவரும் செல்கின்றனர். ஆங்கிலம் நீங்கலான ஒரு இந்திய மொழிப் பதிப்பாளர் அழைக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிற அளவில் கண்ணனுக்கான அழைப்பு மேலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது!

‘ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் புதிய அங்கமான ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வந்திருக்கிறது ‘ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ புத்தகம். பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடந்துவரும் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. ஒழுக்கம், சமத்துவம், பக்தி, ஞானம் ஆகிய அம்சங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியும் பரப்பியும் வந்த இந்த மகானின் நினைவைப் போற்றும் வகையில் ‘ராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ என்னும் இந்த மலர் படைக்கப்பட்டுள்ளது.

ராமானுஜரின் அனைத்து அம்சங்களையும் நினைவுகூரும் அறிஞர்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மேலும், கேள்வியப்பன் திருமலை பெத்த ஜீயரின் விரிவான நேர்காணலும், ஸ்ரீராமானுஜரின் ஏராளமான வண்ணப்படங்களும் மலரில் உள்ளன.

மே 5-ம் தேதி முதல் கடைகளில் கிடைக்கிறது இந்த சிறப்பு மலர். இந்த மலரை அஞ்சலில் பெறவிரும்புவோர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் முகவரிக்கு ‘KSL MEDIA LIMITED’ என்ற பெயரில் ரூ. 360-க்கு வரைவோலை (டிடி) அல்லது காசோலை அனுப்பி மலரைப் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்போர் ரூ. 400 அனுப்ப வேண்டும்.

வருக வருக, இமையம்!

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனைத் தொடர்ந்து எழுத்தாளர் இமையமும் திரைத்துறைக்குள் நுழைகிறார். அவரது ‘பெத்தவன்’ குறுநாவல் இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை படைத்தது.

இளவரசன் - திவ்யா காதல் கதையை நினைவுபடுத்தும், ஆனால் அதற்கு முன்பே எழுதப்பட்ட இந்தக் குறுநாவல்தான் தற்போது மு.களஞ்சியத்தின் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் திரைப்படமாகிறது.

SCROLL FOR NEXT