இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம்
மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் கிராமத்தை இந்தியாவின் முதல் புத்தகக் கிராமமாக உருவாக்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் வெல்ஷ் பகுதியில் உள்ள ஹே-ஆன்-வை கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிராமத்தில் 25 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கே கலையம்சத்துடன் வடிவமைப்புகளைச் செய்து கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களையும் வைத்திருக்கிறார்கள். மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. இன்னொரு சந்தோஷமான செய்தி! இந்தக் கிராமத்தைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் ஒரு புத்தகக் கிராமத்தை உருவாக்கவிருக்கிறார்கள். கவிஞர் இந்திரன், பதிப்பாளர் வேடியப்பன், கோ. வசந்தகுமாரன் ஆகியோரின் முன்முயற்சியில் இந்தப் புத்தகக் கிராமம் உருவாகவிருக்கிறது. இதற்காக, மகாராஷ்டிரத்துக்குப் பயணம் செய்யவும் இருக்கிறார்கள் இந்தப் புத்தக நண்பர்கள்.
பாகிஸ்தானுக்குப் போன செய்தியாளர்
‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்காக பாகிஸ்தானுக்கான சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றிய மீனா மேனன் தனது அனுபவங்களை ‘ரிப்போர்டிங் பாகிஸ்தான்’ என்னும் நூலாக எழுதியுள்ளார். 2013 ஆகஸ்டு முதல் 2014 மே வரை பாகிஸ்தானில் பணிபுரிந்த மீனா மேனன், பலுசிஸ்தான் பிரச்சினை தொடர்பாகப் போராளி மமா காதிருடன் செய்த நேர்காணலால் பாகிஸ்தான் அரசு அவரை அந்நாட்டிலிருந்து வெளியேறச் சொன்னது. பாகிஸ்தான் என்னும் நாட்டைப் புரிந்துகொள்ளவும் அந்நாடு குறித்த தவறான கற்பிதங்களைக் களைவதற்குமான நூல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.