இலக்கியத் திருவிழா அமைப்பு ஆண்டுதோறும் இலக்கியத் துறையில் பங்காற்றி வரும் இரு சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கரவித்துவருகிறது. 2013-ம் ஆண்டின் சிறந்த எழுத்தாளராக முதுபெரும் எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தமும் இளம் எழுத்தாளராகக் கவிஞர் ஆசையும் கவுரவிக்கப்பட்டார்கள். 2014-ம் ஆண்டு இளம் எழுத்தாளர் விருது மட்டும் வழங்கப்பட்டது. அதைக் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் எழுத்தாளர் பாவண்ணனுக்கும், கவிஞர் மனுஷிக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் நினைவுப் பரிசோடு முறையே தலா ஐம்பதாயிரம் மற்றும் இருபத்தி ஐயாயிரம் தொகைகளையும் உள்ளடக்கியவை. நடுவர் குழு உறுப்பினர்களாக ரவிசுப்பிரமணியனும் தமிழச்சி தங்கபாண்டியனும் செயல்பட்டுவருகின்றனர்.
2016-க்கான விருதை மூத்த எழுத்தாளர் வெளி ரங்கராஜனும் கவிஞர் நரனும் பெற்றிருக்கிறார்கள். தமிழின் மிகச் சிறந்த நவீன நாடக ஆளுமை வெளி. ரங்கராஜன். தமிழ் இலக்கியம் சார்ந்தும் நாடகம் சார்ந்தும் பதினொன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் தொகுத்தும் உள்ளார். ஏற்கெனவே இவருடைய இலக்கியப் பணிகளுக்காகத் திருப்பூர் தமிழ் சங்க விருதையும் பீமராஜா இலக்கிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் ‘வெளி’என்ற இதழைத் தொடங்கி, தொடர்ந்து பத்தாண்டுகள் நடத்தியவர். அகலிகை, வஞ்சமகள், மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை, ஆற்றைக் கடத்தல், போன்ற நவீன நாடகங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
தமிழின் நம்பிக்கை தரும் இளம் கவிஞர்களுள் ஒருவர் நரன். இளங்கலை வணிகம் பயின்ற இவர் இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உள்ள இவர், 361 டிகிரி என்ற சிற்றிதழை நடத்திவந்தார். தற்போது சால்ட் என்ற சிற்றிதழையும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.