சுற்றுச்சூழல் எழுத்து, திரைப்படங்கள், வரலாறு போன்றவற்றுடன் நாய் வளர்ப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் தியடோர் பாஸ்கரன். வளர்ப்பு நாய்களுடனான அவரது நேசம் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் நீடிக்கும் வேளையில் தற்போது இந்திய வளர்ப்பு நாய்களைப் பற்றி ஒரு புத்தகத்தை தியடோர் பாஸ்கரன் ‘த புக் ஆஃப் இந்தியன் டாக்ஸ்’ (அலெஃப் பதிப்பகம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். 18-ம் நூற்றாண்டில் சுமார் 50 உள்நாட்டு வளர்ப்பு நாய்களை ஒரு பிரெஞ்சுப் பயணி பதிவுசெய்திருப்பதாக தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார். கூடிய விரைவில் இந்தப் புத்தகம் தமிழிலும் வெளியாகப்போகிறதாம்!
மிஸ்டர் அண்டு மிஸஸ் ஜின்னா!
பாகிஸ்தானின் தேசத் தந்தை ஜின்னாவின் இரண்டாவது மனைவி ரத்தன்பாய் ரட்டியின் வாழ்வும் மரணமும் மிகவும் புதிரானவை. அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றை ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா: த மேரேஜ் தட் ஷூக் இந்தியா’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ஷீலா ரெட்டி தற்போது வெளியிட்டிருக்கிறார்.
இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த 40 வயது ஜின்னாவும் பார்சி சமூகத்தைச் சேர்ந்த 16 வயது ரட்டியும் 1916-ல் காதலில் விழுந்தபோது இந்தியாவின் பரபரப்புப் பத்திரிகைகளில் தீ பற்றிக்கொண்டன. 1918-ல் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபோதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. மணமான பெண்ணுக்கு இந்தச் சமூகம் வைத்திருந்த குழந்தை வளர்ப்பு, பதிபக்தி போன்ற வரையறைக்குள் சிக்காதவராகவும், தனித்துவம் கொண்டவராகவும் இருந்து மன அழுத்தத்துக்கு ஆளானார் ரட்டி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 29 வயதிலேயே மரணமடைந்த ரட்டியின் வாழ்க்கையை முதன்முறையாக விரிவாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார் ஷீலா ரெட்டி.
புலம்ப வைத்துவிட்டார்களே!
பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் புத்தக விற்பனையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகப் புத்தக விற்பனை படுமந்தம் என்று பலரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். “முக்கியமான புத்தகம் பற்றிய ஒரு பிரேக்கிங் நியூஸ் வெளியிடணும், பரபரப்பு எப்போ அடங்கும்?” என்று பதிப்பாளர் வேடியப்பன் நிலைத்தகவல் போடும்படி இந்த பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் பாடாய்ப் படுத்துகிறது. பிரேக்கிங் நியூஸுக்கு ஒரு பிரேக் விட்டுவிட்டுக் கொஞ்சம் புத்தகங்களும் வாங்கலாமே பார்ட்னர்ஸ்!
கல்யாணப் பரிசு!
கடந்த வாரம் மனுஷ்ய புத்திரனின் உயிர்மை அலுவலகத்திற்கு திருமலை என்ற வாசகர் வந்திருக்கிறார். துணைப் பதிவாளர் பணியில் இருப்பவர் அவர். மறுநாள் நடக்கவிருக்கும் தன் மகள் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்குத் தாம்பூலப் பையுடன் பரிசளிப்பதற்காக வெவ்வேறு எழுத்தாளர்களின் நூல்களிலிருந்து 500 பிரதிகள் வாங்கியிருக்கிறார் திருமலை. அற்புதமான கல்யாணப் பரிசு!