கடந்த செவ்வாய்க்கிழமை,13.09.2016 அன்று ஆர். சூடாமணியின் சிறுகதை ‘நான்காம் ஆசிரமம்’ மயிலாப்பூர், பி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி அரங்கில் நாடகமாக நிகழ்த்தப்பட்டது.
சங்கரி என்ற பெண்ணின் வாழ்வைக் கடந்துசென்ற, அவளுடைய கணவர்கள் சந்தித்துப் பேசிக்கொள்ளும் விதமாக அமைந்திருந்தது இந்நாடகம். ஞானத் தேடல் மிக்க ஓர் உள்ளத்தை, வாழ்க்கையை நேசித்த பெண்ணின் உள்ளொளியை இந்நாடகம் வெளிப்படுத்தியது. ‘மூன்றாம் அரங்கு ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அரங்கின் இருட்டில் அமர்ந்து, மேடையின் வெளிச்சத்தில் நடித்த பாத்திரங்களின் வழியே ஒரு நல்ல சிறுகதையை வாசிக்கும் அனுபவமும் கதையின் பாத்திரங்களோடு உறவாடும் அனுபவமும் நமக்கு வாய்த்தன. தன்னிடமிருந்து விவாகரத்து வாங்கிச் சென்றவள்தானே அவள் என்று எப்போதும் உள்ள ஆதங்கத்தின் குரலோடு வெளிப்பட்ட மூர்த்தியின் பாராதி படிக்கும் உச்சஸ்தாயி தொனி ஒரு பக்கம், மனோகர், மூர்த்தி, சங்கரி மூவரையும் புரிந்துகொண்ட பெரிய உள்ளத்துக்குச் சொந்தக்காரரான பேராசிரியரின் சன்னமான கரிசனக் குரல் ஒருபக்கம் என நாடகக் கலைஞர் கருணாபிரசாத் இருவேறு பரிமாணங்களில் வெளிப்பட்டார். அது மட்டுமின்றி, மனோகரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கும் விதத்திலும் சங்கரியின் உள்ளத்தின் அழகைப் படம்பிடித்துக் காட்டுவதிலும் நாடகம் பல பரிணாமங்களில் மிளிர்ந்து வெளிப்பட்டதைக் காண முடிந்தது. நாடகத்தை வைத்த கண் வாங்காமல் கண்டு ரசித்த பார்வையாளர்களின் மனங்கவர்ந்த அந்தப் பேராசிரியரும்கூட சங்கரியின் இறுதி நாட்களில் அவளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
அறியாப் பருவம், தாம்பத்ய இணைவுக்கு உகந்த முப்பதுகளின் தருணம், உலக அறிவை அனுபவச் செறிவோடு விஸ்தரித்துக்கொள்ள விரும்பும் 38-ன் பயணம் என ஒரு பெண் மூன்று விதமான வித்தியாச ஆண்களிடம் அனுபவங்களைப் பெற்றுக் கடந்துசெல்கிறாள். ஆண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு விதமான ஆசிரமங்களைப் போல அவளும் பல கட்டங்களைத் தன் வாழ்வில் கடக்கிறாள். மூன்றாம் ஆசிரமத்துக்குப் பிறகான நான்காம் ஆசிரமம், அதாவது இல்லறத்தைத் துறந்து விடுதல் என்ற ஆசிரமத்தைப் பெறவும் அவள் தயாராகிவிட்டாள். ஆனால் அவள் தன்னிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்கோ விலகிச் செல்லவோ பேராசிரியர் இசையவில்லை.
நாடகம் முடிந்த பிறகு மேடையில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன், “பெண்கள் சுதந்திரப் பறவைகளாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பேராசிரியர்களாக மாறி நாம்தான் அவர்களை வழி மறித்துக்கொண்டிருக்கிறாம்” என்று நாடகத்தின் அடிநாதமான உணர்வைக் கச்சிதமாக எதிரொலித்தார். இலக்கியக் கூட்டங்களில் விரிவான உரைகளின் மூலம் செறிவான செய்திகளைச் சொல்லும் பிரபஞ்சன், தாஸ்தாயேவ்ஸ்கியின் கதைகளை ஒப்பிட்டு நான்காம் ஆசிரமம் கதைகளின் பாத்திரங்களின் வலிமையைப் பற்றிப் பேசினார். எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் குறிப்பிட்ட சில பாத்திரங்கள் உயிர்பெற்று உலவிச் சென்ற அசைவுகளை நாடக நிகழ்வின் உன்னத நினைவுகளோடு எடுத்துச்செல்வதில் நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை என்பது போலிருந்தது பிரபஞ்சன் சுருக்கமான உரை. அறக்கட்டளையின் சார்பாக வந்திருந்த கே.பாரதி, சூடாமணியின் வேறுசில சிறுகதைகளிலும் அவரது ஆளுமை வெளிப்பட்டதை எடுத்துக் கூறினார்.
சூடாமணியின் சிறுகதை, விவாதமும், சலசலப்பும் மிக்க ஒரு பெரிய நாவலுக்குரிய வாழ்க்கைச் சம்பவங்கள் நிரம்பி வழியும் கருப்பொருளைக் கொண்டது. நாயகியின் மயானச் சடங்கு முடிந்த சாயங்காலப் பொழுதில் கணவர்களைச் சந்திக்கவிட்டு அவர்களின் பேச்சில், சிந்தனையில் நாயகியின் வாழ்க்கைப் பயணத்தின் சாராம்சத்தையும் அனுபவத்தையும் சிறுகதையில் ஏற்றித் தந்துள்ள உத்தியும் அதில் தோய்ந்துள்ள மானுட அழகும் வியக்கவைக்கின்றன.
சூடாமணியின் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அன்பு, பாசம், காதல், நகைச்சுவை, தத்துவம் என அதன் உயிர்ப்பையும், அதன் அர்த்தங்களையும் கொண்டாடிய கருணாபிரசாத்தின் நடிப்புக் கலையின் படைப்புத் திறன் வியக்க வைக்கிறது. உருக்கம், நகைச்சுவை, நினைவுகளில் திளைத்தல், அரங்க நிர்மாணம் ஆகியவற்றின் மூலம் பெரிய அனுபவத்தைத் தந்துவிட்டது இந்த நாடகம். “புரபொசர், புரியாத தத்துவங்களை எளிமையா புரியும்படி சொல்லிக்கொடுக்கற உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு புரபொசர்” என சங்கரின் தேனொழுகும் அன்பின் உரையாடல்கள் ஜோன் லிண்டன் குரலின் வழியே நாடக அரங்கில் அசரீரியாக ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
ஆண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு விதமான ஆசிரமங்களைப் போல அவளும் பல கட்டங்களைத் தன் வாழ்வில் கடக்கிறாள்.