தேர்வுக்காகவோ வேறு பயன்பாட்டுக்காகவோ பாடப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை ‘ஒளிப்பட நகல்’ எடுத்து மாணவர்கள் பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்ட விதிகளை மீறுவதாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பதிப்புத் துறையினரும் இத்தகைய பாடநூல்களை வெளியிட்ட ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களும் கடுமையாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகம் சில பாடப் பிரிவுகளுக்குத் தேவைப்படும் பாடங்களை ஒளிப்பட நகலெடுத்துப் பயன்படுத்த மாணவர்களைக் கேட்டுக்கொண்டதுடன், அவ்வாறு எடுத்துத் தருமாறு ஒரு நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது. தாங்கள் வெளியிடும் பாடப் புத்தகங்களைத் தங்களிடம் அனுமதி பெறாமல் ஒளிப்பட நகல் எடுத்து விலை குறைத்து விற்பது பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் செயல் என்று அந்தப் புத்தகங்களை வெளியிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன.
பாடங்கள் சம்பந்தமாக ஒரு புத்தகத்திலிருந்து சில பகுதிகளை ஒளிப்பட நகல் எடுப்பதை இந்திய பதிப்புரிமைச் சட்டத்தின் 52(1)(அ) பிரிவு அனுமதிப்பதை நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒருசில அத்தியாயங்களுக்காக வெளிநாடுகள் அச்சிட்டு விற்கும் விலையுயர்ந்த புத்தகங்களை ஏழை மாணவர்களால் வாங்கிப் படிக்க முடியாது என்பதற்காக இத்தகைய அனுமதி, சட்டத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பாடம் படிப்பதற்காக ஒளிப்பட நகல் எடுப்பது பதிப்புரிமைச் சட்டத்தை மீறுவதோ, பதிப்பாளர்களின் உரிமைகளில் குறுக்கிடுவதோ அல்ல என்று கூறிய நீதிபதி, பதிப்பாளர்களின் உரிமை, வருமானம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே சட்டம், கல்விக்காக மாணவர்கள் அதை நகல் எடுப்பதை அனுமதிக்கிறது என்று தெளிவுபடுத்தினார். இந்த விதிவிலக்கு, பாடபுத்தகங்களுக்கு மட்டுமே என்று அவர் வலியுறுத்தியிருப்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். காப்புரிமை தொடர்பாக பெர்ன் நகரில் நடந்த மாநாட்டிலும், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்திலும் ‘அவரவர் நாட்டுத் தேவைக்கேற்ப சட்டம் இயற்றிக்கொள்ளலாம்’ என்று அனுமதி வழங்கப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேசப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் வெளியிடும் புத்தகங்களின் விலை அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தங்கள் புத்தகங்களின் பதிப்புரிமை காக்கப்படுவதில்லை என்ற எண்ணம் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்டால் அவற்றின் புத்தகங்கள் இந்தியாவில் கிடைப்பது குறைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, ஏழை மாணவர்களையும் கருத்தில் கொண்டு பாடப் புத்தகங்களை மலிவு விலையில் அந்தப் பல்கலைக் கழகங்கள் வெளியிடுமென்றால் பிரச்சினை தீர்வதற்கான சாத்தியம் இருக்கிறது.
எல்லாத் துறைகளையும் சார்ந்த புத்தகங்களும் அடித்தட்டு மாணவர்களை எளிதில் சென்றடையும் காலம்தான் கல்வியில் புதுமலர்ச்சி ஏற்படும் காலமாக இருக்க முடியும். பாடப் புத்தக வெளியீட்டாளர்களும் அதை நோக்கியே பயணிக்க வேண்டும். இதையே இந்தத் தீர்ப்பும் சுட்டிக்காட்டுகிறது.