தஞ்சாவூர் புத்தகத் திருவிழா தஞ்சை அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி மகால் நூலகம் அருகே உள்ள திடலில் நடைபெற்றுவருகிறது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. தஞ்சை கிங்ஸ் ரோட்டரி சங்கம் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த இரு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் நடைபெற்றுவருகிறது.
120 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளுடன், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் வாசகர் களைக் கவர பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% கழிவு என்றாலும், குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50% வரையில் கழிவு உள்ளது.
இதேபோல தமிழகத்தின் எல்லையான ஓசூரில் 5-வது புத்தகத் திருவிழா அங்குள்ள ஆர்.கே.மஹால் திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது. உள்ளரங்கில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 60 அரங்கு களே உள்ளன என்றாலும், பல்வேறு தலைப்புகளில் லட்சக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. கன்னட, தெலுங்கு நூல்களும் உள்ளன. சில அரங்குகளில் 70% வரையில் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் உள்ளூரைச் சேர்ந்த பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.
தஞ்சையிலும் (அரங்கு எண்: 26), ஓசூரிலும் (அரங்கு எண்: 51) ‘தி இந்து’ சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ‘தி இந்து’ தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பகங்கள் சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட புத்தகங்களுடன், ‘ஸ்ரீராமானுஜர் 1000’, ‘ஆனந்த ஜோதி சிறப்பு மலர்’ போன்ற புதிய நூல்களும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
இரண்டு புத்தகக் காட்சிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால் வாசகர்கள் ஆர்வத்துடன் அலைமோதிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாகப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ள இடங்கள்:
ஈரோடு : 05.08.16 முதல் 16.08.16 வரை
கோவை : 19.08.16 முதல் 27.08.16 வரை