இலக்கியம்

புதையலைத் தேடும் புதையல்

செய்திப்பிரிவு

இந்த உலகம் நம்முடையதல்ல. நாமும் இந்த உலகத்துக்கு உரியவர்கள் அல்லர்.

நாம் வருவதற்கு முன்னும் இந்த உலகம் இருந்தது. நாம் சென்ற பிறகும் இந்த உலகம் இருக்கும்.

நாம் இந்த உலகத்திற்கு ஒரு பயணியைப் போல் வந்திருக்கிறோம்.

ஏதாவது வேலையாக வெளியூருக்குப் போனால், ஒரு தங்கும் விடுதியில் தங்குகிறோமல்லவா? அதைப் போலத்தான் நாமும் இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம்.

வந்த வேலை முடிந்தவுடன் இங்கிருந்து புறப்பட்டுவிடுவோம்.

எங்கிருந்து நாம் வந்தோமோ, எது நமது சொந்த வீடோ, அங்கே திரும்பிச் சென்றுவிடுவோம்.

சைவம், ஆன்மா இறுதியில் சென்றடையும் இடத்தை வீடு என்றே கூறுகிறது.

வீடு என்றால், விடுதலை என்று பொருள். அந்தப் பொருளில்தான் சைவம் கூறுகிறது என்றாலும், வசிக்கும் இடம் என்று பொருள் கூறுவதற்கும் இடம் இருக்கிறது.

நாம் இந்த உலகில் அந்நியமானவர்களாக இருக்கிறோம்.

நான் ஆன்மா. இந்த உலகம் சடப்பொருள். இரண்டும் எதிரானவை. நம் உடல் சடப் பொருள்.

விண்வெளிக்குச் செல்பவர்கள் விசேட ஆடை அணிவதைப் போல, இந்த உலகத்தில் தங்குவதற்காக நாம் அணியும் விசேட ஆடைதான் உடல்.

இந்த ஆடையை, ஆன்மா இந்த உலகத்தில் தங்குவதற்காக வாங்குகிறது.

அதனால்தான் ஆன்மா இந்த உலகத்தைவிட்டுப் போகும்போது, இந்த ஆடையைப் பூமியிலேயே கழற்றி எறிந்துவிட்டுப் போகிறது.

புத்தர் சொன்ன ‘நிர்வாணம்’ இங்கே வேறொரு பொருளில் பொருத்தமாகிவிடுகிறது.

நாம் உண்மையிலிருந்து வந்தவர்கள். உலகம் பொய்யிலிருந்து வந்தது.

சான்று, நாம் அழியமாட்டோம். உலகம் அழிந்துவிடும்.

உண்மை அழியாது. பொய் அழிந்துவிடும்.

நாம் இருந்த இடத்தை விட்டு வேரோடு பிடுங்கி, வேறொரு இடத்தில் நடப்பட்டவர்கள்.

நாம் இந்த உலகவாசி அல்ல என்ற எண்ணம் நமக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நாம் விழித்துக்கொண்டோம் என்று பொருள்.

நாம் இந்த உலகவாசி என்ற எண்ணம்தான் உறக்கம்.

உறக்கத்திலிருந்து ஆன்மா எழுந்துவிட்டால் அது பயணம் புறப்பட்டுவிடும்.

வீட்டை விட்டுப் புறப்படுவதல்ல, வீட்டை நோக்கிப் புறப்படுவதே உண்மையான பயணம்.

நாம் ‘வெளி’யில் இருக்கிறோம். எனவே, நம் பயணம் வீடு நோக்கியதாகத்தான் இருக்க வேண்டும்.

நம் வீடு எங்கே இருக்கிறது? அதற்குப் போகும் பாதை எது?

நாம் ‘வீட்டையும்’ வெளி’யில் தேடுகிறோம். அதனால்தான் அது கிடைப்பதில்லை.

வீடு உள்ளே இருக்கிறது; நமக்குள்ளே!

தமிழில் வீட்டுக்கு ‘அகம்’என்று பெயர்.

‘அகம்’ என்றால் உள்ளே என்று பொருள்.

தமிழின் ஞானச் சொற்களுக்குள் இதுவும் ஒன்று.

வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால், நாம் உள்நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.

உள்நோக்கி எப்படிப் பயணம் செய்வது?

வெளிநோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம், ‘திரும்பினாலே’ உள்நோக்கிய பயணம் தொடங்கிவிடும்.

‘தேடுங்கள், கிடைக்கும்’ என்றால் இயேசு பெருமான்.

நாம் தேடுகிறோம், ஆனால் கிடைப்பதில்லை.

காரணம் - நாம் எதைத் தேடுகிறோமோ, அது உள்ளே இருக்கிறது. நாமோ வெளியே தேடுகிறோம்.

ஆன்மிகத் தேடல் ஒரு வித்தியாசமான கண்ணாமூச்சி.

இங்கே தேடுபவரும் நாமே. ஒளிந்திருப்பவரும் நாமே.

இது நமக்குத் தெரிவதில்ல.

ஆம், நம்மைத்தான் நாம் தேடுகிறோம்.

நாம் நம்மை வெளியில் தேடுகிறோம். அதனால்தான் நமக்கு நாம் கிடைப்பதில்லை.

நாம் நமக்குள் ஒளிந்திருக்கிறோம்.

இதை அறிவதே கண்டுபிடிப்பு.

ஆன்மிக உலகில் தேடல் என்பது, தவறான வார்த்தை.

காணாமல் போன பொருளைத்தான் தேட வேண்டும்.

நாம் காணாமல் போகவில்லை.

நம்மை நாம் ‘காணாமல்’ இருக்கிறோம்.

நம்மை நாம் ‘கண்டுகொள்வதே’ ஞானம்.

தேடுகிறோம் என்று கூறிச் சிலர் காடுகளுக்குச் சென்றார்கள். சிலர் மலைகளுக்குச் சென்றார்கள்.

தேடப்படும் பொருளே தேடிச் சென்ற கதைதான்.

புத்தர் உண்மையை அறியப் போதி மரத்தடியில் ஏழாண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.

அதன் விளைவாக உண்மையைக் கண்டறிந்தார் என்று ஐதீகப் பௌத்தம் கூறுகிறது.

புத்தர் ஏழாண்டுகள் கடுந்தவம் புரிந்து பார்த்தார். உண்மையை அறிய முடியவில்லை.

அவர் இந்த முயற்சி ‘வீண்’ என்று உணர்ந்து, தவம் கலைத்து எழுந்தார்.

அவர் அப்படி எழுந்த அந்தக் கணத்தில் ஞானம் பெற்றார் என்கிறது ஜென்.

இதுதான் உண்மை.

தவம் வெளிப்புறப் பயணம்.

புத்தர் அதிலிருந்து மீண்டதும் உண்மை தெரிந்துவிட்டது.

வெளிப்புறப் பயணத்தை நிறுத்தினாலே - தேடலை நிறுத்தினாலே தேடும் பொருள் கிடைத்துவிடும்.

நாம் புதையல் வரைபடத்தை வைத்துக்கொண்டு, அதை வெளியில் தேடுகிறோம். அதுவோ நமக்குள் இருக்கிறது.

உண்மையில், நாமேதாம் அந்தப் புதையல்.

புதையலே புதையலைத் தேடினால் எப்படி?

மனம் புதையலை வெளியில் தேடச் சொல்லும். மனத்தின் வேலை. உங்களை ஏமாற்றுவது.

மனத்தின் வலைக்குள் சிக்காதீர்கள்.

மனம் உங்களை ஏவும்போது நீங்கள் அதை உற்றுப் பாருங்கள்.

அது சொல்வதைச் செய்யாதீர்கள்.

இப்படி நீங்கள் செய்தாலே, மனம் மறைந்துவிடும்.

மனம் மறைந்தாலே, உண்மை உங்களுக்குத் தெரிந்துவிடும்.

மனம் இருள். இருள் மறைந்தாலே எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

மனம் தடையாக நின்று, ஒளியை மறைத்துக்கொண்டிருக்கிறது.

ஒளிதான் உண்மை.

மனம் என்பது, கனவு.

உண்மையில், நாம் கனவில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மனம் மறைந்துவிட்டால் கனவு கலைந்துவிடும்.

நாம் ‘விழித்தால்’ கனவு கலைந்துவிடும்.

விழித்தால் உண்மையைத் தரிசிக்கலாம்.

சமயங்கள் உண்மையைத்தான் இறைவன் என்கின்றன.

- ‘இது சிறகுகளின் நேரம்’ (பாகம்-2) புத்தகத்திலிருந்து…

SCROLL FOR NEXT