இன்றளவும் உருது இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்துக்கு உரியவரான சாதத் ஹசன் மன்ட்டோவின் கதைத் தொகுப்பு இது. அவரது 16 சிறுகதைகள், 3 சொற்சித்திரங்களை ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ள நூல். சமகாலத்தை எழுத்துக்களில் பதிவு செய்த மன்ட்டோ, அதற்காகவே சமூகத்தின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. எல்லைகள் எதுவுமின்றி மனிதத்தின் சீரழிவைக் கண்டு நொறுங்கி, அமில எழுத்துக்களால் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் அவர். பிரிவினையின்போது சிதைக்கப்பட்ட பெண்மையைக் கண்டு பொங்கியெழுந்து வரும் “யாருடைய பொய்கள் அவர்களின் வயிற்றில் திணிக்கப்பட்டிருக்கின்றன? அவர்களின் ஒன்பது மாத கால சித்திரவதைக்கு யார் கூலி கொடுக்கப் போகிறார்கள்?” என்பது போன்ற வார்த்தைகள் நம் மனத்தைக் கூறுபோடுகின்றன. அடித்தட்டு மக்களின் வலியை உணர்ந்து எழுதப்பட்ட மன்ட்டோவின் எழுத்துக்கள் நம் ஆழ்மனதில் நீண்ட வடுக்களாய் நிலைத்திருக்கும்.
-வீ. பா. கணேசன்