உரிய அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்து மறைந்த முக்கியமான படைப்பாளிகள் பலர் தமிழில் உண்டு. பாரதி யிலிருந்து தொடங்கிப் பல படைப்பாளிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அண்மைக் காலத்தில் இவ்விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. வாழும்போதே அங்கீகாரமும் புகழும் பெறுவது தமிழ்ச் சூழலிலும் இயல்பாகி வருகிறது. பன்முகத் தளங்களில் பங்களித்து அளப்பரிய சாதனைகள் செய்த பலருக்கு அவர்களது சாதனைகளை அங்கீகரித்துப் போற்றும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. கனடா இலக்கியத் தோட்டம் முதலான சில அமைப்புகள் இந்தப் பணியைக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்துவருகின்றன. இந்த ஆண்டின் இலக்கியச் சாதனை சிறப்பு விருதை அந்த அமைப்பு தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ராஜநாராயணனுக்கு கனடா இலக்கியத் தோட்டம் அளித்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் (ஆகஸ்ட் 27) இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. மூத்த எழுத்தாளுமையைக் கவுர விக்கும் விழாவுக்குத் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் பெரும் திரளாக வந்திருந்து சிறப்பித்தார்கள். விழாவில் ஆற்றப்பட்ட உரைகள் அவரது பங்களிப்பை விரிவாகவும் காத்திரமாகவும் பதிவுசெய்தன.
‘தி இந்து’ தமிழ் நாளிதழும், ரஹ்மத் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் பேசிய எழுத்தாளர் கழனியூரன் நாட்டுப்புறக் கதைகள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், சொலவடைகள் ஆகியவற்றைத் திரட்டித் தருவதில் கி.ரா. ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பற்றி விரிவாகப் பேசினார். 33 ஆண்டுகளாக கி.ரா.வின் வழிகாட்டுதலில், நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்த கழனியூரன், மக்களிடையே புழங்கும் மொழியின் நுட்பங்களிலும் வகைமைகளிலும் நமது பண்பாடும் வரலாறும் இருப்பதை கி.ரா. உணர்த்தியிருப்பதைப் பதிவுசெய்தார்.
கி.ரா.வின் படைப்புலகம் தொடர்பான சிறப்புரை ஆற்றிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நோபல் பரிசுபெறத் தகுதியான படைப்பாளியென்று கி.ரா.வைக் குறிப்பிட்டார். கி.ரா.வின் படைப்புகளில் உள்ள வகைமை, ஆழம், நுட்பம், உலகளாவிய தன்மை ஆகிய வற்றை உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார். இந்த ஆண்டுக் கான ஞானபீட விருது கி.ரா.வுக்கு கிடைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கி.ரா.வின் உடல் நிலை சரியில்லாததால் அவரால் விழாவுக்கு வர முடியவில்லை. எனவே இந்த விழாவை ஒட்டி கவிஞரும் ஒளிப்படக்காரருமான புதுவை இளவேனில் கி.ரா.வைப் பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டியின் காணொளிக்காட்சி விழா அரங்கில் திரையிடப்பட்டது. தான் எழுத்தாளராக உருவான விதம், எழுத்தை அணுகும் விதம், மரணம், விருதுகள் பற்றி கி.ரா. பேசியது பார்வையாளர்களை நெகிழ வைத்தது. அவரது படைப்பைப் போலவே இயல்பும் எளிமையும் ஆழமும் கொண்டதாக அவரது பேட்டி அமைந்திருந்தது.
கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இந்த விருதினை அந்த அமைப்பின் சார்பில் இந்த விழாவில் ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா வழங்கினார். ரூ.1 லட்சம் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்ட இந்த விருதை கி.ரா. சார்பில் அவரது நண்பரும், புதுவை தாகூர் கலைக் கல்லூரி பேராசிரியருமான வெங்கடசுப்பராயன் பெற்றுக்கொண்டார். கி.ரா.வின் மகன் பிரபி, மருமகள் நாச்சியார் ஆகியோரும் வந்திருந்தார்கள். கி.ரா.வின் ஏற்புரையை அவர் நண்பர் வெங்கடசுப்பராயன் வாசித்தார். கடல் கடந்து வந்திருக்கும் இந்த விருது தனக்குக் கூடுதல் உவகையை அளிப்பதாக அதில் கி.ரா. குறிப்பிட்டிருந்தார்.
இலக்கிய விருதுகள் பரிசுப் பணம் தொடர்பானவை அல்ல. சூழலில் எத்தகைய இலக்கிய மதிப்பீடுகள் நிலவுகின்றன என்பதைக் காட்டும் அறிகுறிகள். எத்தகைய ஆளுமைக்கு என்ன காரணத்துக்காக விருது வழங்கப்படுகிறது என்பது முக்கியமானது. கி.ரா.வுக்கு வழங்கப்பட்ட இந்த விருது எந்த அளவுக்குப் பொருத்தமானது, முக்கியமானது என்பதை விருது வழங்கும் விழா உணர்த்தியது.
இந்நிகழ்ச்சி தொடர்பான காணொளியைப் பார்க்க:
http://tamil.thehindu.com/multimedia/தமிழ்-இலக்கியத்தின்-பீஷ்மர்-கிரா-எஸ்ராமகிருஷ்ணன்/article9049690.ece?ref=video
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருதுபோல இனி ஆண்டுதோறும் மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்கு ரஹ்மத் அறக் கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் பரிசுடன் கூடிய விருது வழங்கப்படும் என ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா அறிவித்தார். உரியக் குழுவை அமைத்து விருதுக்குரியவரைத் தேர்வுசெய்யும் பொறுப்பை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒருங்கிணைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.