இலக்கியம்

ஐம்பது ஆண்டு காலப் பயணம்

செய்திப்பிரிவு

தமிழ் இலக்கிய உலகில் விரும்பத்தகுந்த சில அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே அங்கீகரிப்பது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது. இப்போக்கின் தொடர்ச்சியாக முதுபெரும் எழுத்தாளர் வே. சபாநாயகம் அவர்களின் 80ஆவது ஆண்டு விழா சமீபத்தில் விருத்தாசலத்தில் அவரது மாணவர்களாலும் வாசகர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புதினம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், விமர்சனக் கட்டுரைகள் எனக் கடந்த 50 ஆண்டுகளாகக் காத்திரமாக இயங்கிவருபவர் சபாநாயகம். சிற்றிதழ்களைப் பொக்கிஷம் போலப் பாதுகாத்தவர். கணையாழி, தீபம், ஞானரதம் போன்ற இதழ்களின் பிரதிகள் அந்தந்த அலுவலகங்களிலேயே இல்லாத நிலை இருந்த போது அவ்விதழ்களைத் தொகுக்கத் தனது பிரதிகளைக் கொடுத்து உதவியவர். அவர் இவ்விதழ்களின் தொகுப்பாளரும்கூட.

தலைமை ஆசிரியராக, ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியராகத் தனித்துவத்துடன் கூடிய பணியால் அங்கீகாரம் பெற்றவர். கல்வி நிறுவனங்களுக்குள் புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனை, சுந்தர ராமசாமியைக் கொண்டு சேர்த்த இவருடைய பணி நினைவுகூரத்தகுந்தது. கல்வியைப் படைப்பாற்றலோடு மாணவர்களிடம் சேர்க்கும் பணியில் வெற்றி பெற்றவர். இதற்குச் சான்றாக நம் முன் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது மாணவர் கவிஞர் த. பழமலயைச் சுட்டலாம். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பழமலய்க்கு முக்கியமான பங்கிருக்கிறது.

எழுத்தாளருடைய ‘புற்றில் உரையும் பாம்பு’, ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’, ‘எனது இலக்கிய அனுபவங்கள்’ போன்ற நுால்கள் வெளியிடும் அரங்காகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது. விழா மலரும் வெளியிடப்பட்டது.

நடுநாடு என்று அழைக்ப்படும் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட எழுத்தாளர்கள் அனைவரும் தங்களது முன்னோடி எழுத்தாளரை வாழ்த்தும் வண்ணம் ஒன்று கூடியிருந்தனர். கரிகாலன், கண்மணி குணசேகரன், பல்லவி குமார், எஸ்ஸார்சி, பாரதி குமார், சு. தமிழ்ச்செல்வி, ஜீவகாருண்யன், இளந்திரையன், அமிர்தராசு, பட்டி. செங்குட்டுவன், ஆறு. இளங்கோவன், இரத்தின. புகழேந்தி என இப்பகுதி எழுத்தாளர்கள் உள்ளன்போடு எழுத்தாளரை வாழ்த்தியது குறிப்பிடத்தகுந்தது.

அரை நுாற்றாண்டுக் காலம் ஒருவர் தமிழ் இலக்கிய உலகில் இயங்கத் தீவிர ஆன்ம பலம் வேண்டும். ஒரு இளைஞரைப் போல் வலைப்பூ, முகநூல் எனச் சமகாலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சபாநாயகத்திடமிருந்து நாம் இன்னமும்கூட இளமையான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT