2017 சென்னைப் புத்தகக் காட்சியின் பயணம் இப்போது பாதி வழியைக் கடந்திருக்கிறது. இதுவரையிலான விற்பனை குறித்துப் பதிப்பாளர்கள் பெருமகிழ்ச்சி கொள்ளும் நிலை இல்லை. கடந்த ஓராண்டு காலத்தில் சந்தித்த இழப்புகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இந்தப் புத்தகக் காட்சி இமாலய வெற்றி அடைந்தால் மட்டுமே இழப்புகளைச் சரிக்கட்டுவது மட்டுமல்லாமல், துணிவுடன் புத்தக உலகத்தினர் எழுந்து நிற்க முடியும்.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அலைமோதிய கூட்டம், அதற்கடுத்து வந்த வேலைநாட்களில் அப்படியே வடிந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஸ்வைப்பிங் இயந்திரத்தை வைத்திருக்கும் தன்னார்வலர்கள் கூட்டமில்லாத புத்தகக் காட்சியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் போன்றவற்றில் புத்தகக் காட்சிக்கு மிக முக்கியமான இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. புத்தகக் காட்சிக்கு வெளியே புத்தகக் காட்சிக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்போது அதை மிஞ்சும் வகையில் புத்தகக் காட்சிக்குள்ளும் கூட்டம் அலைமோத வேண்டாமா என்பதுதான் புத்தக உலகத்தினரின் கேள்வி.
வேலை நாட்களைவிட விடுமுறை நாட்களில் புத்தகக் காட்சி கூடுதல் நேரம் (காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரை) நடப்பதால் அந்த நாட்களில் கூட்டமும் விற்பனையும் பல மடங்கு அதிகரிக்கும். வழக்கமாக பொங்கலை ஒட்டியே புத்தகக் காட்சி நடப்பதால், வார விடுமுறை நாட்களுடன் பொங்கலை ஒட்டியும் ஒருசில நாட்கள் கூடுதல் விடுமுறை கிடைக்கும். இந்த முறை வார விடுமுறை நாட்களிலேயே பொங்கல் வருவதால் சற்றே ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் பதிப்பாளர்கள். எனினும், இந்த நிலையை மேம்படுத்த வாசகர்களால் முடியும். பொங்கல் அன்று தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவற்றைவிடப் புத்தகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால், இந்தப் புத்தகக் காட்சி சந்தேகமின்றிப் பெருவெற்றி பெறும். கூடவே, காணும் பொங்கல் தினத்துக்கு மக்கள்திரள் அலையலையாய்ச் செல்வதற்கு புத்தகக் காட்சியைவிட வேறு உகந்த இடம் ஏது?
பொங்கல் என்பது உழவுக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்தும் விழா. அத்துடன் புத்தகங்களுக்கும் நன்றி செலுத்தும் விதத்தில் தமிழ்ச் சமூகம் அதை வளர்த்தெடுத்தால், சூழல் மேம்படும். புத்தகக் காட்சியில் புத்தகப் பொங்கலை வாசகர்கள் கொண்டாடி, அறிவுலகினரின் துயர் துடைக்க அழைப்பு விடுக்கிறோம்!