இலக்கியம்

விடுபூக்கள்: ராம் கோபால் வர்மாவின் சுயசரிதை

செய்திப்பிரிவு

‘கன்ஸ் அண்ட் தைஸ் தி ஸ்டோரி ஆப் மை லைஃப்’ என்ற பெயரில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா எழுதியுள்ள சுயசரிதையை ரூபா பதிப்பகம் அழகுற வெளியிட்டுள்ளது. பட்டவர்த்தனமாகவும் சர்ச்சைகளைப் பற்றி எந்த அச்சம் இல்லாமலும் பேசும் ராம் கோபால் வர்மாவின் ஆங்கில உரைநடை மிகவும் சுவாரசியமானது. மேட் காமிக் பத்திரிகை, அயன் ராண்ட், ஊர்மிளா மடோங்கர், ப்ரூஸ் லீ, அமிதாப் பச்சன், போர்ன் நட்சத்திரம் டோரி ப்ளாக் மற்றும் சில நிழலுலக தாதாக்களுக்குத் தனது புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளார்.

தனது சினிமா, தொழில்நுட்பம் ஆகியவை மீது தாக்கம் செலுத்திய திரைப்படங்களையும் திரைப்பட ஆளுமைகளையும் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். தன் பெண் தோழிகள் குறித்தும், தனது வெற்றி தோல்விகள் குறித்தும் அபூர்வமான நேர்மையுடன் சுயவிமர்சனத்துடன் எழுதப்பட்ட நூல் என்று விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்விப் படங்களைத் தந்துகொண்டிருக்கும் ராம் கோபால் வர்மா தனது எழுத்தின் மூலம் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

சினிமாவாகிறது லீலை

கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த மலையாள எழுத்தாளர் உண்ணி ஆரின் ‘லீலை’ சிறுகதை தமிழில் மிகப் பெரிய கவனம் பெற்றது. இந்தக் கதை இப்போது சினிமாவாகத் தயாரிக்கப்படவுள்ளது. மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். பிஜுமேனன் நாயகனாக நடிக்கவுள்ளார். உயிர்மை பதிப்பக வெளியீடாக உண்ணி ஆரின் கதைகள் ‘காளி நடனம்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. இந்தத் தொகுப்பும் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டது. முன்னறியிப்பு, குள்ளண்ட பார்ய, சார்லி, சாப்பா குறிசு, ஒளிவு திவசத்திண்டே களி என்னும் பல மலையாளப் படங்களில் திரைக்கதையாசிரியராக உண்ணி. ஆர் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT