இலக்கியம்

வாசிப்பின் புதிய வெளி

இந்து குணசேகர்

இந்த மின்னணு யுகத்தைப் பொறுத்தவரை புத்தகங்கள், வாசிப்பு என்பதெல்லாம் புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன. இணையதளங்களும் சமூக வலைதளங்களும் புத்தகங்களை நம்மிடையே கொண்டுசேர்க்கும் உற்ற நண்பர்களாக மாறியுள்ளன. இத்தகைய மாற்றங்கள் இளம் தலைமுறையினரிடத்தில் வாசிப்பை அதிகரித்து, வாசிப்பு வட்டத்தை விரிவடைய செய்திருக்கின்றன.

வாசகர்களுக்கென இணைய இதழ்கள்:

தமிழில், சொல்வனம், கீற்று, கபாடபுரம், மலைகள், சல்லிகை போன்ற இணைய இதழ்கள் இலக்கியம், அரசியல் சார்ந்த புத்தகங்களை வாசகர்களிடத்தில் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாசகர்களுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதுடன் மட்டுமல்லாது புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகில் அடையாளம் காட்டுவதிலும் இந்த இதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘அழியாச் சுடர்கள்’ என்ற தளத்தில் முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகள் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

புத்தகங்களே வீடு தேடி வரும்

வாசகர்களின் ரசனையை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்றாற்போல் இணையத்தின் வாயிலாகவும் பதிப்பகங்கள் புத்தங்களை விற்பனை செய்துவருகின்றன. ‘புதினம் புக்ஸ்’ (Puthinambooks Kathir) என்ற புத்தக நிலையத்தின் கதிரேசன் சேகர் ஃபேஸ்புக் மூலமாகவே முழுவதும் புத்தக விற்பனை செய்கிறார். குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றிய விவாதம் ஃபேஸ்புக்கில் எங்காவது நடக்குமென்றால் அங்கே போய் அந்தப் புத்தகம் தங்களிடம் கிடைக்கும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகங்களை வாங்க விரும்புவோர் கதிரேசனின் கைபேசியைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் அந்தப் புத்தங்கள் தபால் வழியாக வாசகர்களின் வீட்டுக்கே வந்தடைகின்றன. இப்படியாக, புத்தகங்களைப் பெறுவதற்கான வழிகளை இணையம் எளிதாக்கி இருக்கிறது.

வாசிப்பை அதிகரிக்கும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் குழுக்கள்:

‘புத்தகம் பேசுது’, ’தமிழ்ப் புத்தகம்’, ‘புத்தகங்களை வாசிப்பவர்கள்’, ‘சிறுகதைகள்’போன்ற ஃபேஸ்புக் குழுக்களும், ‘தமிழ் வாசக சாலை’போன்ற வாட்ஸ்அப் குழுக்களும் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்துகொள்ள உதவுகின்றன. ‘தமிழ் வாசக சாலை’ வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரும் ஆசிரியருமான கவிஞர் ராணிதிலக் கூறும்போது, “தமிழ் வாசக சாலையில் மாணவர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், கவிஞர்கள் என பலர் உள்ளனர். வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்கள் பெரும்பாலும் ‘தி இந்து’ மூலமாக நிறைய அறிமுகமாகின்றன. அத்தகைய புத்தக அறிமுகங்களை எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வோம். அதுமட்டுமல்லாமல் இலவசமாக இணையத்தில் கிடைப்பும் மின்புத்தகங்களையோ, எங்களிடம் உள்ள அரிய நூல்களை ஸ்கேன் செய்தோ எங்கள் குழுவுக்குள் பகிர்ந்துகொள்வோம். மாணவர்களிடேயே புத்தக வாசிப்பு குறித்த விதையை விதைப்பதற்காக இந்தப் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறோம்” என்றார்.

சமூக ஊடகங்களின் பங்கு

இணையத்தின் மூலம் வாசிப்பைத் தொடர்ந்துவரும் சென்னைப் பல்கலைக்கழக மாணவி மைதிலி கூறும்போது, “சமூக ஊடகங்கள் புத்தக வாசிப்பை நிச்சயம் எளிதாக்கியிருக்கின்றன. என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் ஏதேனும் புதிய புத்தகத்தைப் படித்தால் அதனைப் பற்றி விமர்சனம் செய்து தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிடுவார்கள். சமகாலத்தில் எந்த மாதிரியான புத்தகங்கள் வெளிவருகின்றன, நம் நண்பர்கள் எது போன்ற புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும் இது போன்ற ஃபேஸ்புக் புத்தகக் குழுக்கள் உதவுகின்றன” என்றார். இது தவிர, பிரபல எழுத்தாளர்களின் ஃபேஸ்புக் நண்பர்களாக இருக்கும் இளைஞர்கள் மெல்ல மெல்ல வாசிப்புக்குள்ளே வருவதும் நிகழ்கிறது. ஆகவே, இணையத்தின் மூலமாக வாசிப்பை முன்னெடுத்துச் செல்வதில் எழுத்தாளர்கள், வாசகர்கள் இரண்டு தரப்புகளுக்கும் சம பங்கு இருக்கிறது.

-இந்து குணசேகர், தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

SCROLL FOR NEXT