பெரியாரின் சமகாலத்தவரான ஏ.டி.கோவூர், இலங்கையில் பகுத்தறிவாளர் சங்கத்தைத் தொடங்கியவர். கேரளத்தின் பாரம்பரியமான கிறிஸ்துவ மதப் போதகர் குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தா கல்லூரி வாழ்க்கையும் தாவரவியல் படிப்பும் அவரது வாழ்வின் திருப்புமுனையாகி, பகுத்தறிவு திசைநோக்கி வழிநடத்தியது. உளவியல் படிப்பு அவரது ஆய்வுகளுக்கு வலுசேர்த்தது. அறிவுக்குப் பொருந்தாத மனித நம்பிக்கைகளை அலட்சியமாக நிராகரித்துவிடாமல் அறிவியல்பூர்வமாக அணுகி அவற்றின் பொய்மையை சந்தேகத்திக்கு இடமின்றி நிரூபித்தவர் கோவூர்.
ஆன்மா, ஆவி, பேய், பிசாசு, பூதம், சோதிடம், கைரேகை, மந்திர சக்திகள், மறுபிறவி என யாவும் அவரது பரிசோதனை முடிவுகளில் மதிப்பிழந்துபோயின. மலையாளத்தில் கோவூரின் கட்டுரைகள் முழுமையாக வெளிவந்திருக்கின்றன. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்நூலில் அவரது 93 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உயிரின் தோற்றமும் மறைவும் இன்னும் மனிதர்களுக்கு விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களாய் இருக்கின்றன. இதுவே அவர்களை விதவிதமான நம்பிக்கைகளுக்கு இட்டுச்செல்கிறது. மனித உடலில் நாள்தோறும் உருவாகி அழிந்துகொண்டிருக்கும் பல கோடி செல்களின் இயக்கத்தோடு ஒப்பிடும்போது, உயிரின் அடிப்படையை உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார் கோவூர். உலகின் பெருமதங்கள் மட்டுமின்றி உள்ளூர் சாமியார்கள் வரைக்கும், தங்களை நம்பவைப்பதற்கு அற்புதங்கள் அவசியமாயிருக்கின்றன. இந்த அற்புதங்கள் கண்கட்டு வித்தைகள் அல்லது அதன் பின்னணியில் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்திருக்கின்றன இவரது கட்டுரைகள்.