புத்தகங்கள் படிப்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அழகாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். புத்தகங்களின் பக்கங்களை மடித்து அழகான கலைப்பொருளாக்குபவர்கள் பலருண்டு. லூஸியானா ஃப்ரீகெரியோ அவர்களில் ஒருவர். பக்க மடிப்பின் மூலம் அவர் அதிகம் சொற்களையே உருவாக்குகிறார். டைம்ஸ் நியூ ரோமன், ஹெல்வெட்டிக்கா ஆகிய எழுத்துருக்களில் அவர் எழுத்துக்களை உருவாக்குகிறார்.
இது போன்ற கலைகளுக்கென்றே விற்கப்படும் பழைய புத்தகங்களில்தான் லூஸியானா அப்படிச் செய்கிறார். அவர் காதலர்களுக்காக உருவாக்கிய புத்தக மடிப்புகளைக் கொடுத்துத் தங்கள் காதலியிடம் அன்பைச் சொன்னவர்களும் இருக்கிறார்கள். ‘போர்டு பாண்டா’ என்ற வலை இதழில் லூஸியானாவின் கலையைப் பற்றிய வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்தச் சுட்டிக்குச் சென்றால் அந்த வீடியோவைப் பார்க்கலாம்: >https://goo.gl/Hdk911
தமிழ் மாங்கா!
ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் உலகம் என்பது கிட்டத்தட்ட குட்டி ஹாலிவுட் போன்றது. பெரும் பணம் கொழிக்கும் துறை என்பதுடன் மாங்கா காமிக்ஸ் படிப்பதற்கென்று பித்துப் பிடித்து அலையும் பெருங்கூட்டம் ஜப்பானில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் உண்டு. தமிழிலும் மாங்கா காமிக்ஸ் முயற்சிகள் இப்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சென்னைத் தமிழரான கணபதி சுப்ரமணியம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஜீவகரிகாலனின் ‘அது ஒரு கனவு’ என்ற சிறுகதையை மாங்கா காமிக்ஸ் புத்தக வடிவில் கொண்டுவரவிருக்கிறார்.
நடுக்கடல் மர்மம்!
புத்தக வெளியீட்டைப் புத்தகக் காட்சியில் பார்த்திருப்பீர்கள், புத்தக நிலையத்தில் பார்த்திருப்பீர்கள், தொலைக்காட்சியில் கூடப் பார்த்திருப்பீர்கள். ஏன், ஓடும் ரயிலில் வெளியிடுவதைக் கூடப் பார்த்திருப்பீர்கள். ஆனால், நடுக்கடலில் வெளியிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? கடிகை அருள்ராஜ் எழுதிய ‘கடல்நீர் நடுவே’என்ற புத்தகத்தை உண்மையிலேயே கடல் நீர் நடுவே வெளியிடப்போகிறார்களாம். வரும் மார்ச் மாதம் 12-ம் தேதி அன்று இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. முட்டத்திலிருந்து படகு மூலமாக சுமார் 5 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் சென்று புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்கள். வெளியிட்டதும் கடல்சார்ந்த எழுத்தாளர்களின் அனுபவப் பகிர்தல்கள், கடல் உணவு என்று ஜமாய்க்கவிருக்கிறார்கள்.