“பிரார்த்தனா நெற்றியில் வைத்திருந்த குங்குமம் மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அத்தனை அழகாக இருந்தது...’’, ‘’ஆரண்யாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பேனாவால் தொட்டு லட்சம் கவிதைகள் எழுதலாம்...’’
சுரேந்தர்நாத்தின் ரொமாண்டிக்கான எழுத்துத் திறனுக்கு உதாரணங்கள் இந்த வாக்கியங்கள். சுரேந்தர்நாத்தின் காதல் குறுநாவல்கள் இரண்டின் தொகுப்பு இந்தப் புத்தகம். இந்தக் கதைகளில் சுஜாதாவின் நடையைத் தொட்டுச் செல்கிறார் ஆசிரியர். சமூகம் பொதுவாக ஒப்புக்கொள்ளாத ஒரு காதல் உறவு தொடங்கும் காரணம் அழகாய் நிறுவப்பட்டிருக்கிறது.
காதல் பயணிக்கும் விதங்களும், காதலர்களுக்கு இடையேயான ஒரே மாதிரியான ரசனைகளும் சிறப்பு. வாழ்க்கையின், இயற்கையின் சின்னசின்ன விஷயங்களில் பொதிந்து கிடக்கும் அழகை, தன் கதாபாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்திருக்கிறார் ஆசிரியர். கதை முழுவதும் நல்லவர்களாய் உலவும் நாயகர்கள், கடைசியில் ஏன் அப்படி ஆனார்கள் என்பது முழுமையாக விளக்கப்படவில்லை.
இரண்டு கதைகளையும் அவர் முடிக்கும் விதம், ஆசிரியருக்கு ஆண்களின் மீது தனிப்பட்ட கோபம் இருக்குமா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது. காதல் சார்ந்த புனைகதைகள் குறைந்துவரும் காலகட்டத்தில் இந்தக் குறுநாவல்கள் நம்மை சந்தோஷப்படுத்துகின்றன.