ஓவியர் ராமானுஜத்தின் வாழ்க்கையையும் அவரது அகால மரணத்தையும் பின்னணியாகக் கொண்டு சி.மோகன் எழுதியிருக்கும் நாவலின் ஒருபகுதி இது. வரும் ஜனவரி மாதம் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
அந்த நாள் அபூர்வமாக அமைந்துவிட்டிருந்தது. அவர் தொடர்ந்து ராமனைப் பற்றிப் பேச வேண்டும் என்ற சுயநலம் மேலோங்கியிருந்தது. பொதுவாகப் பேச்சின் போக்கை என் விருப்பத்துக்கு வளைக்கும் எண்ணம் எப்போதும் எனக்கிருப்பதில்லை. அதன் போக்கில் செல்வதையே நேசிப்பவன் நான். ஆனால் அன்று என் மனம் ராமனுக்கும் டக்ளஸுக்குமான கலை ரீதியான அபூர்வப் பிணைப்பை அறிந்துகொண்டுவிட விருப்பம் கொண்டுவிட்டிருந்தது.
சிக்கன் சுருள் ஏழெட்டைப் பொறித்தெடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தார் டக்ளஸ். தட்டைக் குறுமேஜையின்மீது வைத்துவிட்டு சேரில் உட்கார்ந்துகொண்டார். ஏதோ, முதலில் இருந்து ஆரம்பிப்பதைப் போல, இரண்டு கண்ணாடி டம்ளரிலும் மதுவை ஊற்றி அவருக்குப் பாதி தண்ணீரும் எனக்கு நிரம்ப தண்ணீரும் விட்டுக் கொடுத்தார்.
மீண்டும் ராமன் பற்றிய பேச்சுக்கு அவரை எப்படித் தூண்டுவதென்று யோசித்தபடியே அமைதியாக இருந்தேன். ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவரே ராமன் பற்றிப் பேசத் தொடங்கினார். அவரும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுவிடும் மனநிலையில்தான் இருந்து கொண்டிருப்பது தெரிந்தது.
“அப்போது எனக்கு வயது 22. என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த முதல் மரணம் அது. என் கலை மனதுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஆதர்சமாகவும் இருந்த ஒருவர், அந்த உறவின் ஆரம்ப கட்டத்திலேயே என்றென்றைக்குமாக விடை பெற்றுக்கொண்டுவிட்டார்... அன்று மாலை அவர் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சுடுகாட்டில் அவர் உடல் சகல சடங்குகளும் செய்யப்பட்டு எரிக்கப்பட்டது. இறுதி மரியாதைக்காக அவர் உடலைச் சுற்றி வந்தபோது, அவர் கால் பெருவிரல்கள் இரண்டையும் குனிந்து தொட்டுக் கும்பிட்டேன். கடைசியாகப் பார்த்த அவர் முகம் இன்றும் என் நினைவில் உறைந்திருக்கிறது. அவர் உடல் எரியூட்டப்பட்டபோது, திரும்பிப் பார்க்காமல் போகச் சொன்னார்கள். எல்லோரும் வேகமாகத் திரும்பி நடந்தார்கள். தயங்கித் தயங்கி மெதுவாகச் சென்ற நான் சில அடிகள் சென்றதும் திரும்பி நின்று ஒரு சில கணங்கள் பார்த்தபடியே உறைந்திருந்தேன். அவர் உடலை எரித்த அந்த நெருப்பு... அந்த ஜுவாலை... நிச்சயமாகச் சொல்வேன்... அந்த ஜுவாலைதான் என்னைத் தீவிரமான படைப்பாளியாக்கியது... ஜெர்மனிக்குப் போய் சில ஆண்டுகள் மனைவி, குழந்தை, குடும்பம் என்றும், வெறுமையான மனநிலையில், உணர்வுகளின் உந்துதல்களற்று முக்கோணங்கள், செங்குத்துகள், படுக்கைக் கோடுகள் என்றும் வரைந்துகொண்டிருந்த என்னை மீண்டும் இந்த ஓவியர் கிராமத்துக்கு அழைத்து வந்தது என்னுள் தணியாதிருந்த அந்தத் தணல்தான்...’’
சட்டென்று அமைதியானார். டம்ளரில் மதுவை ஊற்றி, தண்ணீர் கலக்காமல், ஒரே மடக்கில் குடித்துவிட்டுக் கீழே வைத்தார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, ‘‘அவருடைய இந்த முடிவுக்கான காரணமென்று எதையாவது குறிப்பிட முடியுமா...? அப்படி ஏதாவது பேச்சு அப்போது இருந்ததா?’’ என்று கேட்டேன்.
அவர் முகம் கோணலாகி லேசான புன்முறுவல் வெளிப்பட்டது. என்ன அசட்டுத்தனமான கேள்வி என்பது போலிருந்தது அந்தக் கோணல் சிரிப்பு. அவர் முகத்தைப் பார்த்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
“அவர்மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டு அவரோடு நெருக்கமாக இருக்க பிரயாசைப்படும் ஒருவரால்கூட, அவருக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் அறிந்துகொள்ள முடியாது. அவருடைய தற்கொலை குறித்து சில யூகங்கள் இருந்தன. ஆனால் அவையொன்றும் முக்கியமில்லை. இப்போது யோசிக்கும்போது, அவர் தன்னைத் தானே கொன்றுகொண்டிருக்கவில்லை. தற்கொலை எனும் அழகிய சாத்தியத்தைத்தான் அவர் கைக்கொண்டார் என்று தோன்றுகிறது... அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரில்கேயின் வரிகள் ஞாபகத்துக்கு வரத் தவறுவதில்லை:
ஒரு ஜீவன் ஓடற்று இருக்குமெனில்
வலி எளிதில் தாக்கும்
ஒளியால் வதையுறும்
ஒவ்வொரு சப்தமும் நிலை குலையச் செய்யும்.
ராமன் ஒரு ஓடற்ற ஜீவன். உலக வாழ்வில் அவர் நடமாட்டம் அப்படித்தானிருந்தது. அவருடைய படைப்பு வெளியில்தான், அவருடைய அந்த விந்தை உலகில்தான், அவருடைய அந்த அதீதக் கற்பனை உலகில்தான், அவர் சகஜமாக வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய கனவுலக சஞ்சாரத்திலும் அதன் அபார கலை வெளிப்பாட்டிலும்தான் அவரின் உயிர் தரித்திருந்தது. அவர் எதை சிருஷ்டிக்க நினைத்தாரோ அதை சிருஷ்டித்துப் பார்த்து, அதில் முழுமையாக வாழ்ந்தும் விட்டிருந்தார். அவர் தன் பணி முடிந்ததும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்... அவ்வளவுதான். அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை...’’
சிறிது நேரம் மௌனம் நிலவியது. அவர் தொடர்ந்து பேசுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டிருந்தது. அவர் அதிகம் குடித்துவிடக் கூடாது என்ற பதற்றம் முதன் முறையாக அப்போது எனக்கு ஏற்பட்டிருந்தது. அப்போதே முக்கால் பாட்டில் காலியாகிவிட்டிருந்தது. அதிகம் போனால் பேச்சு திசை மாறக்கூடுமென்ற கவலையைத் தவிர வேறில்லை. ஆனால் அவர் மீண்டும் கொஞ்சம் ஊற்றி அதை அப்படியே முழுங்கிவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். ‘‘அவர் வான்வெளியில் மேகங்களின் இளவரசனாகத் திகழ்ந்தார். ஏளனம் செய்யும் மக்கள் கூட்டத்தால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய பிரம்மாண்டமான சிறகுகள் அவர் வானுலகில் சஞ்சரிக்கத் துணையாக இருந்தன. அதே சமயம் அவரைத் தரையில் சுபாவமாக நடக்க விடாமல் அவை தடுத்துக்கொண்டிருந்தன... ராமனைப் பற்றிப் பணிக்கர் ஓரிரு முறை சொன்னதுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. அவர் சொல்வார்: நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது.’’
அதைச் சொல்லி முடித்தபோது அவர் உடல் துவளத் தொடங்கியிருந்தது. தலை துவண்டு தொங்கியபடி சொன்னார்: “அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை... அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை... புரிகிறதா... வந்த வேலை முடிந்துவிட்டது... விடைபெற்றுக்கொண்டுவிட்டார்... அவ்வளவுதான்... உங்களுக்குத் தெரியுமா... தற்கொலை என்பது ஒரு அழகிய சாத்தியம்... அதைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார்...” என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார்.