தமிழ் இலக்கிய உலகில் தனது அலாதியான சிறுகதைகள் வாயிலாகப் பரவலாக அறியப்பட்ட ஆளுமை அ.முத்து லிங்கம். பரந்துபட்ட வாழ்வனுபவங்களைச் சுவைமிகு சிறுகதை களாகவும், ரசனைமிகு கட்டுரைகளாகவும் படைத்துள்ள இவர் இலங்கையைச் சேர்ந்தவர். 'உண்மை கலந்த நாட்குறிப்பு' என்னும் நாவலையும் எழுதியுள்ளார். ஐநாவில் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது கனடாவில் வசித்துவரும் இவர் டொரான்டோவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் கனடிய இலக்கியத் தோட்ட அமைப்பில் செயல்பட்டுவருகிறார். மின்னஞ்சல்வழி அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலிலிருந்து...
பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறீர்கள். அங்கிருந்து பார்க்கும்போது ஈழத்தின் சூழலும் தமிழகத்தின் சூழலும் உங்களுக்கு எப்படித் தெரிகின்றன?
ஈழத்தின் சூழலும் தமிழகத்தின் சூழலும் இலக்கியத் துக்கு ஏற்றதாகத்தான் இருக்கின்றன. சமீபத்திய மிகப் பெரிய மாற்றம் புத்தகங்கள் கிடைப்பதே. ஒரு காலத்தில் ஒரு புத்தகத்துக்கு ஆறு மாதம் காத்திருப்போம். இப்போதெல்லாம் 6 நாட்களில் இணையம் மூலம் தருவிக்க முடிகிறது. கிண்டிலிலும், இணையத்திலும் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. புத்தகங்கள் வெளிவந்ததும் விமர்சனங்களும், விவாதங்களும் இணைய தளங்களிலும், முகநூல்களிலும் சூடுபிடிக்கின்றன. மின்னிதழ்கள் இன்னொரு வசதி.
போர் முடிந்த பின்னர் ஈழத்துச் சூழல் மாறிவிட்டது. எழுத்தாளர்கள் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் எழுதுகிறார்கள். போர் அனுபவங்கள், சிறை அனுபவங்கள், புலம் பெயர்ந்த அனுபவங்கள் எனத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய வரவு. ஈழத்து இலக்கியம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்துகிறது. ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் எழுத்தைப் பதிப்பிக்க முடியாத சூழல் முன்பு இருந்தது. இப்போது அது மாறி அநேக நூல்கள் வெளிவருகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் கல்விமுறை மாறிவிட்டது. ஆங்கில மோகம் உச்சத்துக்குப் போயிருக்கிறது. அடுத்த தலைமுறை தொடர்ந்து முனைப்புடன் தமிழ் இலக்கியம் படைக்குமா என்பது சந்தேகம்தான்.
தமிழக, ஈழத்து எழுத்தாளர்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புகள்?
ஈழத்து, இந்திய எழுத்தாளர்கள் தொடர்பு எனக்கு மிக மிகக் குறைவுதான். நான் இந்தியா வந்தது கடைசியாக 20 வருடங்களுக்கு முன்னர். இலங்கைக்குச் சென்று 25 வருடங்கள் இருக்கும். தொடர்பு மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி மூலமாகவும்தான். மிகச் சில எழுத்தாளர்களையே நேரில் சந்தித்திருக்கிறேன். சுந்தர ராமசாமியையும் ஜெயமோகனையும் வெளிநாட்டில்தான் சந்தித்தேன். வெங்கட் சாமிநாதன், அம்பை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன் போன்றவர்களைச் சந்தித்தது டொரான்டோவில்தான்.
புதிய எழுத்தாளர்களை, பரிசோதனைகளைக் கவனிக்கிறீர்களா? இன்றைய போக்குகள் பற்றி உங்கள் பார்வை என்ன?
கணினி வசதி வந்த பிறகு நூல்கள் அதிக அளவில் வருகின்றன. அதிக பக்கங்களிலும், முன்னெப் போதும் யோசித்திராத தலைப்புகளிலும். இலங்கைப் போர் பின்னனியில் அருமையான நூல்கள் வந்திருக் கின்றன. இன்னும் நூறு நூல்கள் வந்தாலும் போர் முழுவதையும் சொல்லவே முடியாது. கடந்த மாதத்தில் மட்டும் கனடாவில் பத்துக்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப் பட்டன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் கனடா வந்து நூல் வெளியீடு செய்கிறார். இப்படியான ஒரு சூழலை 20 வருடங்களுக்கு முன்னர் கற்பனை செய்து பார்த்திருக்கவே முடியாது.
கணினி வந்த பிறகு 800 பக்கங்கள் 1000 பக்கங்கள் எழுதுவது சாதரணமாகிவிட்டது. தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு தெரிகிறது. சொன்னதையே திரும்பச் சொல்வதும் நடக்கிறது. சொற்பப் பக்கங்களிலும் உயர்ந்த இலக்கியம் படைக்க முடியும். அசோகமித்திரனுடைய ‘ஒற்றன்’, ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
‘உடனேயே உலகம் முழுக்க அறியப்பட வேண்டும். புகழ் கிடைக்க வேண்டும்’ என்ற அவசரமும் தெரிகிறது. ஹேர்மன் மெல்வில் மோபி டிக் என்னும் நாவலை எழுதிப் பதிப்பித்தபோது ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. தோல்வியடைந்த எழுத்தாளராக இறந்துபோனார். பல வருடங்கள் கழித்து எழுத்தாளர்களும், விமர்சகர்களும் அவரைப் புகழ ஆரம்பித்தார்கள். இன்று மோபி டிக் உலக நாவல்கள் தர வரிசையில் 17-வது இடத்தில் இருக்கிறது. புகழைத் தேடிப் போகத் தேவை இல்லை. அது உரிய நேரத்தில் வரும்.
இயல் விருதுக் குழுவில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறீர்கள். வாழ்நாள் சாதனைக்கான விருதுடன் சிறந்த நூல்களுக்கான விருதுகளையும் வழங்கிவருகிறீர்கள். விருதுகள் மீதான விமர்சனங்களை எவ்வாறு அணுகுகிறீர்கள்?
சில விமர்சனங்களை ஏற்று நடைமுறையை மாற்றியிருக்கிறோம். லட்சுமி ஹோம்ஸ்ரோமுக்குப் பரிசு கொடுத்தபோது பலத்த எதிர்ப்பு வந்தது. அவருடைய சேவை மொழிபெயர்ப்பு என்றும் அது தமிழ்ச் சேவை ஆகாது என்றும் வாதாடினார்கள். மொழிபெயர்ப்பு விருது பின்னர் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டது.
உங்கள் முடிவை மேலும் உறுதிப்படுத்தும் மாற்றத் தைத்தான் எடுத்திருக்கிறீர்கள். பிற விமர்சனங்களை நீங்கள் போதிய அளவு கணக்கில் எடுத்துக்கொண்டு பொது அரங்கில் விவாதித்ததில்லை. விமர்சனங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்து, மாற்றங்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை…
விமர்சனங்களை நாங்கள் கணக்கில் எடுத்தபடியேதான் இருக்கிறோம். ‘இவருக்கு கொடுக்கவில்லை’ ‘அவருக்கு கொடுக்கவில்லை’ என்றுதான் 90 வீதமான விமர்சனங்கள் வருகின்றன. அப்படி எழுதுகிறவர்கள் பரிந்துரை விண்ணப்பங்களை அனுப்புவதே இல்லை.
அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் ஆகிய மகத்தான சாதனையாளர்களுக்கு இன்னமும் இயல் விருது வழங்கப்படவில்லை. இவர்கள் பெயர்கள் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லையா?
அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் ஆகியவர்கள் மகத்தான சாதனையாளர்கள் என்பதில் எதுவித ஐயப்பாடும் கிடையாது. இவர்கள் பெயர்கள் ஒருமுறை யாவது பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மூத்த எழுத்தாளர் களுக்கு விருதுகள் வழங்கும்போது சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ள அவர்களுடைய உடல்நிலை இடம் கொடுக்க வேண்டும்.
டொமினிக் ஜீவா, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டபோது, அவர்களால் பயணம் செய்ய இயலாது என்பதால் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே விழா நடத்தி விருது கொடுத்தோம். ஆனால் இதைத் தொடர முடியாது. அதிக நிதி திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. வருடம் ஒருமுறை நடக்கும் இந்த விழா டொரான்டோவில் நடப்பதையே அமைப்பாளர்களும் அங்கத்தினரும் விரும்புவார்கள்.
அசோகமித்திரனைப் போன்ற ஒரு ஆளுமைக்கு விருது கொடுக்கும் விஷயத்தில் நடைமுறைச் சிக்கல்களைப் பெரிதுபடுத்துவது முறையானதா? ஒருவரது படைப் புரீதியான சாதனைகளைவிடவும் அவரது உடல் திறன் முக்கியமானதா?
கனடா எழுத்தாளர் அலிஸ் மன்றோவுக்கு 2013-ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைத்தது. உடல் நிலை காரணமாக அவரால் பயணம் செய்ய முடியவில்லை. அவருடைய மகள் ஜெனிதான் ஸ்வீடன் சென்று விருதைப் பெற்றார். இப்படி ஏதாவது மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டுவரலாம். தமிழ் இலக்கியத் தோட்டம் இது பற்றி ஆலோசிக்கும்.
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சி நடந்துவருகிறது. ஹார் வேர்டில் தமிழ் இருக்கை ஏன் அமைய வேண்டும்?
ஆதிச் செம்மொழியாக இன்றும் வாழும் ஒரு மொழி தமிழ். அதற்கான இருக்கை ஹார்வார்ட்டில் இல்லாதது பெரிய குறை. அதை நிவர்த்திக்க வேண்டியது தமிழர்களாகிய நமது கடமை. 2,500 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சியில்கூடத் தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை.
தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச் சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் ஹார்வார்ட் போன்ற முதன்மையான ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முக்கியம். ஹார்வார்ட்டில் நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப் பரப்பில் நிலைநிறுத்தும்.
தமிழகத்தில் தமிழின் நிலையில் கடுமையான போதாமைகள் நிலவுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி கோருவது பொருத்தமானதல்ல என்று ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது…
தமிழ் நாட்டில் போதாமைகள் இருப்பது தெரிந்ததே. ஆனாலும் உலகத் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஓர் இருக்கை அமைப்பது கடமை. அதன் பயன் எல்லோரையும் சென்றடையும். ‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழியையே படிக்கா மல், ஒருவர் முனைவர் பட்டம் வரை வாங்கக் கூடிய கல்வி முறை இருக்கிறது.’ இப்படித் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஓர் எழுத்தாளர் கூறுகிறார். இது கேவலமான நிலைமை இல்லையா? கனடாவில் 6,000 மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். இந்த வருடம் 2,000 பேர் பரீட்சை எழுதினார்கள். இதனால் இவர்களுக்கு என்ன பயன்? அமெரிக்கா, ஐரோப்பா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் எல்லாம் இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் தமிழ் பயிலுகிறார்கள். இவர்களையும் நம்பித்தான் ஹார்வார்ட் தமிழ் இருக்கை உருவாக்கப்படுகிறது.
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in