“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு புத்தகம்தான்” என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவார். அதேபோல, “தொடர்ந்து வார காலம் எந்தவொரு நல்ல நூலையும் வாசிக்காத வனின் பேச்சில் எந்த நறுமணமும் இருக்காது” என்று ஒரு சீனப் பழமொழி இருக்கிறது. அந்த வகையில் வாசிப்பு என்பது மிக மிக அவசியமானது. நம்முடைய எண்ணப் போக்குகளைக் கூராக்கி நேராக்குவதில் புத்தகங் களே பெரும்பங்கு வகிக்கின்றன. நானும் என்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளவும், நவீனப்படுத்திக் கொள்ளவும் புத்தகங்களின் துணையையே நாடுகின் றேன். புத்தகங்களே என் வழிகாட்டியாக, வழித்துணையாக வருகின்றன. வாசிக்கிற போது, மனவெளிகளில் இனம்புரியாத ஏதோவொரு தெளிவு பிறக்கிறது. அப்படிக் கிடைக்கிற அந்தத் தெளிவுதான் என் அடுத்தகட்ட நகர்வுக்கான உந்துதலாக இருந்துவருகிறது.
தமிழின் எழுத்திலக்கிய வெளி மிகப் பரந்தது அதில் கி.ரா., ஜெயகாந்தன், ஜெயமோகன், அசோகமித்திரன், பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, போன்ற எழுத்தாளர்களைப் பெரிதும் விரும்பிப் படிக்கிறேன். தஸ்தாவெஸ்கியின் எழுத்துகளிலும் புத்தனுபவம் பெற்றிருக்கிறேன். இந்தப் புத்தகக் காட்சியில் கங்கை அமரன் எழுதிய 'பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ்' (நக்கீரன் வெளியீடு), சல்மான் ருஷ்தீ எழுதிய 'இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள்' (எதிர் வெளியீடு), க.சீ.சிவகுமார் எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'என்றும் நன்மைகள்' உள்ளிட்ட புத்தகங்கள் வாங்கினேன். 'தி இந்து' வெளியீடுகளான 'சினிமா ரசனை' (கருந்தேள் ராஜேஷ்), மவுனத்தின் புன்னகை (அசோகமித்திரன்) ஆகிய புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன். யார் எவ்வளவு விலைமதிப்பு மிக்க பரிசு களைக் கொடுத்தாலும் நான் பெரிதாக மகிழ்வதில்லை. ஆனால், யாரேனும் புத்தகங் களைப் பரிசளித்தால் என் முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர மகிழ்கிறேன். புத்தகம் வாசிப்போம்!