இலக்கியம் என்பது சமூகத்தின் ஆன்மா. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கக்கூடிய வாழ்க்கை முறையையும், வாழ்வுக்குள் இருக்கும் அறநெறியையும் கலாபூர்வமாக, கதையோட்டமாகப் புரிந்துகொள்ள இலக்கியங்கள் நமக்கு உதவுகின்றன. சினிமாவுக்குள் வரும் படைப்பாளிகள் இலக்கியங்களில் வரும் உணர்வுகளைப் படித்து உள்வாங்க வேண்டும்.
மணிக்கொடி எழுத்தாளர்கள் தொடங்கி பலரையும் நான் தொடர்ந்து வாசிக்கிறேன். புதுமைப்பித்தன், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன் என என்னுடைய பட்டியல் மிகவும் நீண்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தாளர் என்று பலரும் எனக்குக் குருமார்களாக இருந்திருக்கிறார்கள். என்னுடைய கல்லூரிக் காலங்களில் வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயந்தன், அசோகமித்திரன், சுஜாதா எனப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு இலக்கியங்களிலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். புதுமைப்பித்தன் எனக்கு ஆதர்ச நாயகன். தி. ஜானகிராமனின் எழுத்து நேர்த்தி இப்போதும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவருடைய இலக்கியம் காலம் கடந்து இன்னும் நிற்கிறது. கவிதைப் புத்தகங்களில் என் மனம் ஆறுதல் பெறுகிறது. என் மனதுக்குள் நீண்ட கவிதைப் பட்டியலே வைத்துள்ளேன்.
சமூகத்தின் ஆன்மாவைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு படைப்பாளி தொடர்ந்து படிக்க வேண்டும். தொடர்ச்சியாக, பல்வேறு புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சமூகத்தின் ஆன்மா பிடிபடும். திரைப்படங்களை உருவாக்குவதற்கு நான் படித்த இலக்கியங்களே எனக்கு ஆணிவேர்! இந்தப் புத்தகக் காட்சியில் நிறைய புத்தகங்களை வாங்கினேன். எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள், அசோகமித்திரன் குறுநாவல்கள், அழகிய பெரியவனின் ‘வல்லிசை’, சா. தேவதாஸ் எழுதிய ‘மரண தண்டனையின் இறுதித் தருணங்கள்’, கலாப்ரியா கவிதைகள், ‘தி இந்து’ வெளியீடுகளான அசோகமித்திரனின் ‘மவுனத்தின் புன்னகை’, பி.ச. குப்புசாமியின் ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’, கருந்தேள் ராஜேஷின் ‘சினிமா ரசனை’ போன்ற நூல்களும் வாங்கினேன்.