இலக்கியம்

ப்ரெவெரின் சித்திரங்கள்

வெ.ஸ்ரீராம்

தமிழில் அறிமுகமாகிப் பிரபலமடைந்த பிரெஞ்சுக் கவிஞர்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் ழாக் ப்ரெவெர் (1900-1977). ‘இருபதாம் நூற்றாண்டின் குழந்தை’ என்று வர்ணிக்கப்பட்ட இவர் “ஏழு வயதைத் தாண்டிய பிறகு எல்லோரும் கிழட்டு மடையர்களாக ஆகிவிடுகிறார்கள்” என்று வேடிக்கையாகச் சொல்வார். ஆனாலும், 77 வயதுவரை அப்படியாவதைத் தவிர்த்த இவருடைய வாழ்க்கை, குழந்தை உள்ளமும் கவிதை நயமும் இயைந்த வாழ்க்கை. இவருடைய நாற்பது கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘சொற்கள்’ (க்ரியா வெளியீடு) என்ற தலைப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. “சமூகத்தின் கைகளில் இருக்கும் நூல்களால் ஆட்டுவிக்கப்படும் கேலியான கூத்து வாழ்க்கை” என்பதைப் புரிந்துகொண்ட இவர், நேசம், காதல், மகிழ்ச்சி இவற்றைத் தடை செய்யும் எல்லாவற்றையும் தனக்கே உரித்த பாணியில் கவிதைகள் வாயிலாக நையாண்டி செய்தார். கட்டாய ராணுவ சேவைக்குப் பிறகு தன்னுடைய 20-வது வயதில் ஓவியர் ஈவ் தாங்வி, எழுத்தாளர் மார்செல் துஹாமெல் இவர்களுடன் சேர்ந்து தன் படைப்புலக வாழ்க்கையைத் தொடங்கினார்: திரைப்படம், கூட்டுறவு நாடகத் தயாரிப்பு, எள்ளல் கவிதை, பாடல்கள் என்று பன்முகத் தன்மைகொண்ட உலகம். அவர் வெறுத்தவை: போர், ராணுவம், அரசியல்வாதிகள், மதநிறுவனங்கள், பொதுவாக மனிதனின் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்தும் எல்லாமுமே. பல பிரெஞ்சுப் பாடகர்களால் மேடைகளில் பாடப்பட்ட இவருடைய ‘பார்பரா’ கவிதை இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.

55 திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இவருடைய ‘அரசனும் பறவையும்’ என்ற அனிமேஷன் திரைப்படம் இவர் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளிவந்தது. ‘கான்’ திரைப்பட விழாவில் (1979) விமர்சகர்களால் விருது அளித்துக் கௌரவிக்கப்பட்டது. ஒரு ஓவியத்தில் இருக்கும் காதலர்கள் உயிர்பெற்று ஓவியத்திலிருந்து வெளியேறி முப்பரிமாண உலகத்தில் சுதந்திரத்தைச் சுவைப்பதைப் பற்றிய, சர்ரியலிஸப் பாணியில் அமைந்த திரைப்படம். அந்தப் படத்தின் இறுதி வரிகள்: “இயந்திர மனிதன் பறவைக் கூண்டைத் தட்டுகிறான்… கதவு திறக்கிறது… இறுதியாக… சுதந்திரம்!” ஓவியக் கலையைப் பெரிதும் ரசித்த இவர், பிக்காஸோ, ஷகால் போன்ற சமகால ஓவியர்களின் நெருங்கிய நண்பர். இவரும் ‘கோலாஜ்’ என்ற வடிவத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டார். சொற்களைக் கொண்டு கவிதையின் உச்சத்தை எட்டியதைப் போலவே, பல படங்களை வெட்டி, ஒட்டி வேறொரு புதிய பரிமாணத்தை அளித்த இவருடைய ‘கொலாஜ்’களில் அவருடைய கவிதையின் சில அம்சங்களான கேலி, சர்ரியலிஸம் இவற்றைக் காண முடியும். மொழிக்குள் கட்டுப்படாத கற்பனை வளத்தைப் படங்கள் வெளிப்படுத்த முடியுமென்று கருதிய ப்ரெவெர், மொழியைவிடப் படங்களைக் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்வதைச் சுட்டிக்காட்டினார். தன் மனைவியின் உருவப் படத்தைச் சுற்றிலும் பூமாலைகளையும், தாவரவியல் புத்தகத்திலிருந்து வெட்டி எடுத்து இலைகளின் படத்தையும் ஒட்டிச் செய்யப்பட்டதுதான் ப்ரெவெரின் முதல் கொலாஜ் (1943). கிட்டத்தட்ட நூறு கொலாஜ் ஓவியங்களைப் படைத்த இவருடைய சில கொலாஜ்களின் பிரதிகள் சென்னை அலியான்ஸ் பிரான்சேஸ் மையத்தின் நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 17 அன்று தொடங்கிய இந்தக் கண்காட்சி ஜூலை 31வரை நடைபெறுகிறது.

- வெ. ஸ்ரீராம், ஆல்பெர் காம்யு, ழான்-போல் சார்த்ர், ழாக் பிரெவெர் உள்ளிட்டோரின் படைப்புகளை பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர், தொடர்புக்கு: ramcamus@gmail.com

SCROLL FOR NEXT