நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி வாழ்ந்த இல்லம், காலச்சுவடு அலுவலகம் ஆகிய அடையாளங்களைச் சுமந்தபடி நிற்கும் சுந்தர விலாசம் சென்ற மாதத்தில் ஒரு சனிக்கிழமை மாலை விழாக்கோலம் பூண்டிருந்தது. சுந்தர ராமசாமியின் ‘சன்னல்’, ‘சீதை மார்க் சீயக்காய் தூள்’ ஆகிய சிறுகதைகளைத் தனிநபர் நடிப்பில் நிகழ்த்தினார் ஆனந்த் சாமி. இசை வேதாந்த் பரத்வாஜ்.
நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனின் உணர்வுகளை விவரிக்கும் ‘சன்னல்’ கதையும், எப்படிப்பட்ட வறுமையிலும் கலையை மலினப்படுத்தச் சம்மதிக்காத தம்பதியரின் வாழ்வைச் சொல்லும் ‘சீதை மார்க் சீயக்காய்த் தூள்’ கதையும் ஆனந்த் சாமியின் நடிப்பில் காட்சி வடிவம் பெற்றன. உணர்ச்சிகளை விவரிக்கும் சன்னல் கதையை நடித்துக் காட்டுவது பெரிய சாகசம். ஆனந்த் சாமி அதை இலகுவாகச் செய்தார். “இந்தச் சிறுகதைகளை அதை எழுதிய சுந்தர ராமசாமியின் இல்லத்திலேயே அரங்கேற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே என்னுள் இருந்து வந்தது.அதற்கான நேரமும் களமும் இப்போதுதான் கிடைத்திருக்கிறது” என்று கூறும் ஆனந்த், இந்த நிகழ்வுகள் படிப்படியாக வடிவம் பெற்ற கதையை விவரிக்கிறார்:
“ஊர் ஊராகப் போய் அந்த நாடகத்தைப் போட்டாலும், இந்தக் கதைகளை எழுதியவருக்கு எங்களது நன்றியின் வெளிப்பாடுதான் அவர் வாழ்ந்து, மறைந்த அவரது இல்லத்திலேயே நடந்த இந்த நிகழ்வு” என்கிறார் ஆனந்த். ஆரம்பத்தில் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்த இவர் இப்போது ‘பார்ச்’ என்னும் குழுவில் இருக்கிறார்.
நாடகத்துக்கு இசையமைத்த வேதாந்த் பரத்வாஜ் நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
“சென்னையில் 2008அம் ஆண்டு காலச்சுவடு 100 நிகழ்ச்சியில்தான் ஆனந்த் சாமியின் இரண்டு நாடகங்களையும் பார்த்தேன். சன்னல் மிகவும் கவித்துவமாக எழுதப்பட்ட கதை. அதை நாடகமாக்குவது மிகவும் சிரமம். சவால் நிறைந்தது. அதை இவர்கள் ஏற்று சாதித்திருப்பதில் மகிழ்ச்சி” என்று சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் கூறுகிறார். அதைத் தங்கள் வீட்டிலேயே பார்த்ததில் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.