ஓவியம், சிற்பம், கவிதை, சினிமா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் இந்திரன்.
அவர் பல்வேறு காலகட்டங்களில், தான் பயணிக்கின்ற துறைகள் சார்ந்து எழுதிய தனித் தனியான எழுத்துகள் தற்போது தொகுக்கப்பட்டு 'இந்திரன்: கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையை விடவும், இளம் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அதிகமாக இருக்கும். வளரும் கவிஞர்களை அந்த அளவுக்கு ஊக்கப்படுத்தியவர். நல்ல படைப்புகளை எப்போதும் முன்வந்து பாராட்டும் குணத்தை இந்திரன் கைவரப் பெற்றிருக்கிறார்.
இந்திரனின் படைப்புகள் மட்டுமல்லாது, அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமகாலக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் இந்திரனுக்கு எழுதிய கடிதங்களில் சிலவும் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தன் சமகாலத்துப் படைப்பாளிகளுடன் அவர் கொண்டுள்ள நட்பும் உறவும் தெரிய வருகிறது. பல்துறை சார்ந்த கட்டுரைகள் தவிர, சூ யூச்சு எனும் சீனப் பெண் கவிஞர், ஜெயகாந்தன், மிருணாள் சென், யிட்டிஷ் எழுத்தாளர் ஐசக் பெஷ்விஸ் சிங்கர், தெலுங்கு புரட்சிக் கலைஞர் கத்தார் எனப் பலரைச் சந்தித்து இந்திரன் எடுத்த பேட்டிகளும், இந்திரன் கொடுத்த சில பேட்டிகளும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திரன் எனும் ஆளுமையைத் தெரிந்துகொள்ள உதவும், பல வண்ண கான்வாஸ் சித்திரம் இந்தத் தொகுப்பு! பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் தொகுத்த இந்தப் புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது, நிறைய பிழைகளுடன்!